Monday, 24 December 2012

வழி தவறி ‍- சிறுகதை


வழி தவறி ‍- சிறுகதை

என் வீட்டில் நான் மட்டும் தனி இல்லை ஸார். எனக்கு ஒரு அண்ணா, அப்பா, அம்மா. அப்பா பணி ஓய்வு பெற்றவர். மாதா மாதா ஒன்பதாயிரம் பென்ஷன் வாங்குபவர். (என்ன பணி என்பது இந்தக் கதைக்கு தேவையில்லை). அதை சுகமாக வாங்க வைப்பது அண்ணன். அண்ணன் செய்யும் தொழில் ஸார். கட்டிட கான்ட்ராக்டர், ரியல் எஸ்டேட்ஸ் தொழில் என்று என் அண்ணன் என்னென்னவோ செய்கிறான். தனக்கென கட்டுமான கம்பெனி நடத்துகிறான் ஸார். நிலமிருந்தும் வீடு கட்டும் அளவிற்கு பணமில்லாத வரியவர்களை அணுகி, அவர்களோடு அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டு, அரசிடம் அனுமதி வாங்கி, நான்கு தளங்கள் கட்டி, அடித் தளத்தை நிலத்தின் சொந்தக்காரருக்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள தளங்களில் வீடுகள் கட்டி விற்பது என்கிற வரைக்கும் அவன் தொழில் பற்றி எனக்கு அத்துப்படி ஸார்.

ஆனால் இதற்கு மேல் என்னிடம் கேட்காதீர்கள் ஸார். சொல்ல முடியாது. ரகசியம் என்பதால் அல்ல. எனக்கு தெரியாது. புரியாது. புரியவில்லை ஸார். ஆனால் அவனால் தான் நான். அவன் எனக்கு பணம் காய்ச்சி மரம். கேட்ட போதெல்லாம் பணம் தருவான். என்னை செல்லமாக நடத்துகிறான் என்று தோன்றும் எனக்கு. கேட்டதெல்லாம் வாங்கித் தருவான். நான் த‌ட்டுத்த‌டுமாறி ஹைய‌ர் செக‌ன்ட‌ரியில் வாங்கிய‌ எழு நூற்று சொச்ச‌ம் மார்க்குக‌ளுக்கு நான்கு லட்சம் ப‌ண‌ம் கொடுத்து சாய்ராம் பொறியிய‌ல் க‌ல்லூரியில் சீட் வாங்கித் த‌ந்திருக்கிறான். ஹைஸ்டைல், லைஃப்ஸ்டைல்க‌ளில் லீ ஜீன்ஸ் வாங்கித் த‌ந்திருக்கிறான். பதிமூன்றாயிரத்துக்கு செல்ஃபோன் வாங்கித் தந்தான். வேகமாய் ஓட்டி விபத்துக்குள்ளாக்கி விடுவேனென்று பைக் வாங்கித் த‌ர‌ ம‌றுத்திருக்கிறான்.

எத்தனை பாசம் பார்த்தீர்களா ஸார் அவனுக்கு என் மேல்!. இப்படிப்பட்ட அண்ணனுக்கு எப்படிப்பட்ட மனைவி வாய்த்திருக்கவேண்டும்! ஆனால் இவள், ச்சே.

எனக்கு பயங்கர கோபம் ஸார் அவள் மேல். அந்தக் காட்சியை என் கண்ணால் பார்த்ததிலிருந்து எனக்கு பயங்கர கோபம் ஸார். என்ன நடந்தது என்று விரிவாகச் சொல்கிறேன் கேளுங்களேன்.

மாலை ஐந்து மணியளவில் அண்ணா நகர் பன்னிரண்டாவது மெயின்ரோடில் 147 பஸ்ஸில் ஏறிய நான், பிதுங்கும் பஸ்ஸிற்குள்ளாக நெருக்கியடித்து நின்றபடிக்கு ஆர்ச்சைக் கடந்து, ஸ்கை வாக் தாண்டி, லயோலா கடந்து, காலேஜ் ரோட் கடக்கையில் மிகவும் தற்செயலாகத்தான் கவனித்தேன் ஸார் அவர்களை. ஈடாலிகா தெரியுமில்லையா? அதன் வாசலில் , மாருதி ஆல்டோ காரில். பஸ்ஸிலிருந்து பார்க்கையில் டிரைவர் சீட்டில் இருந்தவன் முகம் தெரியவில்லை ஸார் . அருகே ஒருத்தி.

அசப்பில் அவள் போலவே இருக்கும் அவள் உண்மையிலேயே அவள் தானா? எழ‌வெடுத்த‌ ச‌ன் க‌ன்ட்ரோல் பிலிம் ம‌றைத்த‌து ஸார். நன்றாக எக்கி, இமைகள் சுருக்கி, அப்ப‌டியும் இப்ப‌டியும் அசைத்து அவர்களைப் பார்த்தேவிட்டேன் ஸார். அவள் தான். அவளே தான். என் அண்ணி சந்தியா. என்னருமை அண்ணன் ர‌குவின் மனைவி.

அவன் என் அண்ணனில்லை. என் அருமை அண்ணன், அப்பாவி அண்ணன் இன்னேரம் பணியிடத்தில் இருப்பான். கொளத்தூரில் அவனே சொந்தமாகத் துவங்கிய கட்டுமான நிறுவனத்தின் சார்பில் குடியிருப்புகள் கட்டப்படுவதை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருப்பான் ஸார். தொழிலில் சுத்தம். காலை 9 மணிக்கு கிளம்பிவிட்டால் இரவு பத்தாகிவிடும் ஸார் அவன் வர. சதா சர்வ நேரமும் தொலைபேசியில் இருப்பான். ஒரு வேளை அப்ப‌டியே இருந்த‌தினால் தானோ இப்ப‌டி? அவளுக்காகத் தானே ஸார் அண்ணன் இத்தனை உழைக்கிறான். அதற்கு பிரயுபகாரமா ஸார் இது? அண்ணி என்பவள் தாய்க்கு சமம் என்பார்கள். ஆனால் இவள்!

என‌க்கு ச‌ட்டென்று இற‌ங்கி காரை நிறுத்தி அவர்களை வெளியே இழுத்துப்போட்டு நாக்கைப் பிடுங்கிக்கொள்கிறாற்போல‌ நாலு வார்த்தை கேட்டுவிட‌வேண்டும் போலிருந்த‌து ஸார். ஆனால் பாவம் பாருங்க, பஸ் ரொம்பக் கூட்டம் ஸார். நான் வேற அந்த நேரம் பார்த்து நடு பஸ்ஸில் இருந்தேனா! எனக்கு முன்னால் ஒரு பொறம்போக்கு ஒரு கல்லூரி மாணவியின் பின்புறத்தை உரசிக்கொண்டிருந்தான் ஸார். சரி, இப்போ எதுக்கு அதெல்லாம். ப‌ஸ் முழுவ‌தும் பிதுங்கி வ‌ழிகிற‌து. ப‌ஸ் நிற்கும் நேர‌ம் அவ‌ர்க‌ள் காரில் ப‌ற‌ந்துவிட‌லாம். அப்போதைக்கு அவ‌ளை வேவு பார்ப்ப‌து சரியென்று தோன்றிய‌து ஸார். நல்லவேளை ப‌ஸ் அந்த‌க் காரின் பின்னாலேயே தான் சென்ற‌து.

சிக்ன‌லில் கூட‌ ப‌ஸ் முன்னால் தான் ஸார் நின்றிருந்த‌து. ச‌ற்று குனிந்து இடுக்கிப் பார்த்த‌தில் அந்தக் கிராதகன் என் அண்ணியின் பின்ப‌க்க‌ம் கைவைத்து எதையே செய்துகொண்டிருந்தான் ஸார். அங்கேயே இற‌ங்கி அவ‌னை காரிலிருந்து இழுத்துப்போட்டு முக‌த்திலேயே மிதிக்க‌வேண்டும் போலிருந்த‌து. அத‌ற்குள் சிக்ன‌ல் ப‌ச்சை விழுந்துவிட்ட‌து. ஸ்டெர்லிங் ஸ்டாப்பிங்கில் ஜ‌ன‌க்க‌ட‌லில் நீந்தி, எவ‌ரெவ‌ர் கால்க‌ளையோ ச‌ட்னியாக்கி, நான்கைந்து பேரை புற‌முதுகில் த‌ள்ளி நான் ப‌ஸ்ஸிலிருந்து இற‌ங்குவ‌த‌ற்குள் அந்த எழவெடுத்த கார் ஸ்பென்ச‌ர் நோக்கி போய் விட்டிருந்த‌து ஸார்.

இனி தொடர்ந்து பலனில்லை. அவர்கள் நழுவிவிட்டார்கள். அவளை... அவ....ளை..

என்ன சொல்லி ஏசுவதென்று தெரியவில்லை ஸார்... என் அண்ணனை எப்படித்தான் ஏமாற்ற துணிவு வந்ததோ? அவள் இப்படிச் செய்வாள் என்று கனவிலும் நினைத்திடவில்லை ஸார். வீட்டில் எத்தனை அடக்கமான குடும்பப்பெண்ணாய் இருந்திருக்கிறாள் தெரியுமா!

காலையில் எழுத்தவுடன் குளித்துவிடுவாள் ஸார். அவள் குளிக்காமல் அழுக்காய், உறக்கத்திலிருந்து எழுந்த மேனிக்கு நான் பார்த்தேயில்லை ஸார் இந்த ஐந்து வருடங்களில். பிறகு பூஜையறையில் காயத்திரி மந்திரன் நாநுனியில் சரளமாய் உச்சரித்து பூஜை ஸார். பிற்பாடு வீடு முழுவதும் அவள் போடும் சாம்பிராணியில் மறைந்தே விடும் ஸார். ஆற‌ரைக்கு எழும் என் அப்பா, ஏழரைக்கு எழும் என் அண்ணன், எட்டரைக்கு எழும் நான் என எங்கள் எல்லோருக்கும் தலைமாட்டில் சூடாக தேனீர் தயாராக இருக்கும் ஸார். காலை டிபனில் தட்டில் அவள் எடுத்து வைக்கையில் அது இட்லிதானா இல்லை தலையில் சூடும் மல்லிப் பூவா என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும் ஸார். அத்தனைக்கு கைப் பக்குவம். வாரம் இருமுறை வீடு முழுவதும் கூட்டிப் பெருக்கி வீடு அத்தனை சுத்தமாக இருக்கும். அதுஅது அதனதன் இடத்தில் இருக்கும். எல்லாம் அட்சர சுத்தமாக.

ஸார், நீங்க‌ என்ன‌ நினைக்கிறீங்க‌ன்னு என‌க்கு புரியாம‌ இல்லை. இது ஏதோ திகில் க‌தை, அடுத்த‌ பாராவுல‌ அந்த‌ பொண்ணு, அண்ணி சாய‌ல்ல இருக்கிற ஒருத்தியென்றும், த‌ன் காத‌ல‌னோடு போனாளென்றும் முடிக்க‌ப்போவ‌தாக‌ எண்ண‌ வேண்டாம் ஸார். நான் ஒன்றும் அப்ப‌டி ஆளில்லை. ந‌ட‌ந்த‌தைக் க‌ண்ட‌வ‌ண்ண‌ம் அப்ப‌டியே சொல்கிறேன்.

அந்த தெவ..ப்பையன்.. யாரென்று தெரியவில்லை ஸார். இதற்கென்றே அலைகிறான்கள் ஸார். நீங்களே சொல்லுங்கள் ஸார். பெண் என்றாலே ஒரு தனிக் கவர்ச்சி தான். இல்லைங்கவில்லை. போகிற இடமெல்லாம் தனி மரியாதை, வரவேற்பு. வேணாம்கலை. பொதுவா நம்மளை யாராவது புகழ்ந்துட்டாலே மனசு, தரைக்கு மேல ஓரடி பறக்குறது தான். ஊரே புகழ்ந்தா ஓரடி என்ன, பத்தடி கூட பறக்கும்தான். ஆனா உண்மைன்னு ஒண்ணு இருக்கு ஸார். எதற்காக‌ப் புக‌ழ்கிறான்க‌ள்? அந்த‌ப் புக‌ழ்ச்சிக்கு, வ‌ர‌வேற்பிற்கு முதுகெலும்பு என்ன‌ என்ப‌து முக்கிய‌ம் ஸார். மித‌மிஞ்சி புக‌ழ‌ப்ப‌டுகிற‌ போது ஈகோ பூஸ்ட் கிடைக்கிற‌து தானே சார். வேணாம்க‌லை. ஆனா, ஆம்ப‌ளைக்கு அப்ப‌டி இல்லையே ஸார்.

நானேல்லாம் பத்து பாக்கேட் கிங்ஸ் அடிச்சு அட்டகாசமா புகைல வளையம் விட்டதை எவனுமே கண்டுக்கலை ஸார். எவ்ளோ பயிற்சி வேணும் தெரியுமா ஸார் அதுக்கு! தமிழ் சினிமாவிலேயே அதை அதிகம் பேர் செய்ததில்லை ஸார். ஹாலிவுட் மட்டும்தான். ஒரு பாராட்டு வரணுமே!? ம்ஹும். அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை, ஷார்க்ஸ் கிரிக்கெட் டீம்ல கிட்டத்தட்ட புட்டுக்குற நிலைமை. எதிர் ரைவல் டீம்க்கு ஆறு ஓவர்ல பதினைந்து எடுத்தா போறும் ஸார், கைல நாலு விக்கேட் இருக்கு. டீமே கால்ல விழுகுது. எடுத்தேன் பாலை. போட்டேன் ஒரு யார்க்கர். ஒருத்தன் காலி. அதே ஓவர்ல இன்னொரு இன்ஸுவிங் அப்புறம் ஒரு எல்பி. அவ்ளோதான் ஸார். மூணும் முக்கியமான விக்கேட்டு. ஒரே ஓவர்ல காலி. எவனாவது ஒருத்தன் வாழ்த்தனுமே! ம்ஹும். ஈகோ பூஸ்டாவ‌து, காம்ப்ளானாவ‌து. ஒரு மண்ணாங்க‌ட்டியும் இல்லை.

உங்களுக்கு தெரியாததில்லை. எத்தனையோ பார்த்திருப்பீங்க. பலசமயம் புகழப்படுவதற்கு பெண்ணாக இருப்பதே போதுமானதாக இருக்கிறது தானே ஸார். பொண்ணுன்னா கவர்ச்சி. அவ என்ன செஞ்சாலும் கவர்ச்சி. என்ன நியாயம் ஸார் இது? எல்லாம் இந்த பாழாய் போற உடம்பு ஸார். எத்தனை நாளைக்கு ஸார்.

இப்போ கூட பாருங்க‌. என் அண்ண‌ன் காலைல‌ போனா, ராத்திரிதான் வ‌ரான். புக‌ழ‌ற‌துக்கு, பாராட்டிகிட்டே இருக்குற‌துக்கு ஒருத்த‌ன் கிடைச்ச‌தும்.... ப்ச்சு.. என்ன‌ ஸார்!. பாராட்டு ம‌ட்டும் போறுமா சார்?.. நியாய‌ம்னு ஒண்ணு இருக்கு. த‌ர்ம‌ம்ன்னு ஒண்ணு இருக்கு. என் அண்ண‌னும் ம‌னுஷ‌ன் தானே ஸார்.

இதை நான் சும்மா விட‌ப்போற‌தில்லை ஸார். அப்பாகிட்ட‌ சொல்ல‌ணும் ஸார். அண்ண‌ன் கிட்ட‌ சொல்ல‌ணும் ஸார். அவ‌ள் முக‌த்திரையை கிழிக்க‌ வேண்டும் ஸார்.

நான் வீட்டுக்கு போனபோதும் அவள் வந்திருக்கவில்லை. அப்பா ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். நான் வந்ததை கவனித்தது போல் தெரியவில்லை. அம்மா இந்த நேரம் சமையற்கட்டில் இருப்பாள். நான் நேராக என் அறைக்குள் அடைந்து கொண்டேன். அப்பாவுக்கு வயசாயிடுத்து. அம்மாவுக்கும் தான். எவ்ளோ பெரிய விஷயம். சொன்னா என்ன நடக்கும்!. நினைக்கும்போதே உடம்பு நடுங்குகிறது.

இரவு சுமார் எட்டரை இருக்கும் ஸார். ஆடி அசைந்து வருகிறாள் ஸார்.

அப்பவிடமும், அம்மாவிடமும் ரேமண்ட்ஸில் சட்டை பாண்டும், காஞ்சிபுறம் பட்டும் தந்துவிட்டு ஷாப்பிங் என்று கணக்கு சொல்கிறாள் ஸார். பொய் ஸார்! பொய்! நாகூசாமல் எப்படி பொய் சொல்கிறாள் பாருங்கள். இது மாதிரி இதற்கு முன் எத்தனை தடவை சொன்னாளோ? எனக்கு எப்படி இருக்கும்?! எனக்கு வந்ததே கோபம்.

நான் என் அறையை விட்டு வெளியே வந்தபோது அவள் அண்ணன் அறைக்குள் இருந்தாள். படுக்கையில் வாங்கி வந்த ஆடைகளை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தாள். நான் அவளை அண்டினேன்.

"அண்ணி"

"ஆங்.. சொல்லு மகேஷ்"

அவள் தலை கலைந்திருந்தது. பூ கசங்கியிருந்தது. பொட்டு கூட புணரமைக்கப்பட்டிருந்தது. புடவை ஆங்காங்கே கொஞ்சமாய் வழுவி....

"உங்களிடம் கொஞ்சம் தனியாக பேசவேண்டும்" என்றேன்

"சொல்லு மகேஷ்" என்றாள் என்னருகில் வந்து.

"என்ன அண்ணி, இன்று இரட்டை வேலையா" என்றேன் பூடகமாய்.

"ஆமாப்பா, மாமா, அத்தை ரெண்டு பேருக்கும் டிரஸ் எடுக்க‌ போதீஸ், ஜெயச்சந்திரன்னு அலைந்தேனா.. ஒரே வெய்யில் தி நகரிலே"

"ஏன், மாருதி ஆல்டோவிலே ஏசி இல்லையா?" என்றுவிட்டு நிறுத்தினேன்.

அவள் குனிந்து ஆடைகள் ஒழுங்க வைப்பதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து என்னை தீர்க்கமாய் பார்த்தாள்.

பின் அருகிலிருந்து பீரோவை இழுத்துத் திறந்து உள்ளிருந்து சில கோப்புக்களை அள்ளி என் எதிரே படுக்கையில் வீசிவிட்டு, குளித்துவிட்டு வருவதாகச் சொல்லி பாத்ரூம் சென்று கதவடைத்துக்கொண்டாள்.

அந்த கோப்புக்களை நான் சுருங்கிய புருவங்களுடன் கையில் எடுத்தேன். பற்பல காகிதங்கள். அரசு முத்திரைத்தாள்கள், கம்பெனி தஸ்தாவேஜுகள் என பற்பல காகிதங்கள். அந்த காகிதங்களின் நீள அகலங்கள் வேண்டியதில்லை. அதில் சொல்லப்பட்ட செய்தியென்று பார்த்தால், அது,

என் அண்ணன் துவங்கிய கட்டுமான கம்பெனியின் பெயர் குறிப்பிட்டு, நஷ்டத்தில் அது குமாரசுவாமி என்பவர் பெயருக்கு என் அண்ணனே எழுதிக்கொடுத்துவிட்டதாய் ஒன்றிலும், எஞ்சியுள்ள பெருந்தொகை கடனிற்கென இனி கட்டுமான கம்பெனியின் அலுவல் நிமித்தங்களுக்கு சந்தியா என்பவர் முழுப்பொறுப்பு என்று மற்றொன்றிலும் கையெழுத்திடப்பட்டிருந்தது. அந்த காகிதத்தின் பின்னால் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் குமாரசுவாமி என்று வரைந்த வாக்கில் கையழுத்திட்டிருந்தது. புகைப்படத்தில் இருந்தவரை நான் பார்த்திருக்கிறேன். இன்று தான். அந்த ஈடாலிகா அருகில் மாருதி ஆல்டோவில்....

கட்டுமானக் கம்பெனிக்கு நஷ்டமா! கடனா! இது எப்போது நடந்தது! அப்படியே இருந்தாலும், உரிமையாளர் இருக்க, அலுவல் பற்றி எதுவும் தெரியாத‌ உரிமையாளரின் மனைவி எதற்காக இதில் நுழைக்கப்பட வேண்டும்! எனக்கு சட்டென புரிந்துவிட்டது. நான் அவைகளை அந்தப் படுக்கையிலேயே வைத்துவிட்டு மாடியேறி வந்து, இருள் சூழ்ந்த ஓரிடமாகப் பார்த்து அமர்ந்துகொண்டேன். எனக்கு நானே தொகுத்துக் கொண்டேன். அதாவ‌து ந‌ட‌ந்த‌து என்ன‌வெனில்...

ஸ..ஸார், நீங்கள் இன்னுமா கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்? அப்படியொன்றும் தவறாக ஏதும் நடந்தவிட்டதாக ... அதாவது நான் என்ன சொல்ல வந்தேனென்றால், நான் எதைப் பற்றி உங்களிடம் சொல்லத்துவங்கினேன் என்று எனக்கு சரியாக நினைவில்லை. எதுவாக இருந்தாலும் இது எங்கள் குடும்ப பிரச்சனை.அ.. ம்.. இல்லையில்லை. பிரச்சனையே இல்லை. ஆங்.. அப்படியில்லை... அதாவது, .. நான் மதியம் சாப்பிடவில்லை.. பசி மயக்கத்தில் மனம் சஞ்சலப்பட்டு, அதீத கற்பனையில் ஏதோ உளறியிருக்கிறேனென்று நினைக்கிறேன்... எனக்கு படிக்கவேண்டும். படித்து முடித்து வேலையில் அமர வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். குடும்பம்.. குடும்பம்.. ஆமாம், குடும்பம் முக்கியம் ஸார். குடும்பம் என்பது மிகுந்த அர்த்தமுள்ளது ஸார்.

முற்றும்.

-ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)

# நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6153)

Tuesday, 18 December 2012

ஆயிரம் காலத்துப் பயிர் - சிறுகதை


ஆயிரம் காலத்துப் பயிர் - சிறுகதை


அலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. அதன் ஒலி, நடுநிசியில் இடுகாட்டில் கேட்கும் நாயின் மரண ஓலமாகக் கேட்டுக் கொண்டிருப்பதாக உணர்ந்தாள் மாலதி. அதுவரை விம்மி விம்மி அழுது கொண்டிருந்தவ‌ள், முகத்தை துப்பட்டாவினால் துடைத்து விட்டு, அழுத்தமாக ஒரு முறை மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். இரண்டாவது முறையாக ஒலிக்கிறது, அப்பாவிடமிருந்து அழைப்பு. இனியும் எடுக்காமல் இருந்தால், இதற்கும் ஒரு பேச்சு வாங்க வேண்டி வரும் என்பதை உணர்ந்தவளாய் விருப்பமின்றி அலைபேசியை எடுத்து காதோடு அணைத்துக் கொண்டு

"ஹலோ" என்றாள்.

"என்ன, இருந்து கொண்டே எடுக்க மாட்டேன் என்கிறாயா?" அப்பா கோபமாக கத்தினார்.

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அப்பா"

"இதோ பார், உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன். உனக்கு 26 வயது. இத்தனை வயதுக்கு பெண் பிள்ளைகள் கல்யாணமாகாமல் இருக்கக் கூடாது. உனக்கு மனதில் என்ன பேரழகி என்று நினைப்பா? வருகிறவனையெல்லாம் வேண்டாம் என்பதற்கு? இப்படியே போனால் உன்னை பெண் கேட்டு யாரும் வரப்போவதில்லை. வயதான காலத்தில் எங்களுக்கு ஏன் பாரமாக இருக்கிறாய்? யாரையாவது காதலிக்கிறாயென்றால் சொல்லிவிடு. அவனுக்கே உன்னைக் கட்டி வைத்து விடுகிறோம். எப்படியோ போ. எங்களுக்கு நீ மட்டும் வாரிசு இல்லை. உன் தம்பி இருக்கிறான் அவனுக்கு பெண் பார்க்க வேண்டும். இன்றைக்கு உன்னை பெண் பார்க்க வருகிறார்கள். கிளம்பி மாமா வீட்டுக்கு வா. வந்து உன் அழகான முகத்தை காட்டிவிட்டுப் போ. எல்லாம் எங்கள் தலையெழுத்து"

அலைபேசி முன்னறிப்பின்றி துண்டிக்கப்பட்டது.

மாலதி, மெளனமாய் சுவற்றை வெறித்தாள்.

பெண் சுதந்திரம் என்பது பல சமயங்களில் குழப்பமான, தெளிவாக அறுதியிட முடியாத ஒன்று என்று நினைக்கத் தோன்றுகிறது. பாமரனுக்கும் புரிய மறுக்கும் ஒன்றாக அது இருக்கிறது. அப்படி ஆனது இந்த சமூக அமைப்பின் அவலம்.

மாலதி பொறியியல் பட்டம் பெற்றவள். அவள் பெற்றோருக்கு சொந்த ஊர் கடலூர். சென்னை வந்தால் மாமன் வீடு, அம்பத்தூரில் இருக்கிறது. அங்குதான் தங்குவர். ஒரு கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக, கை நிறைய சம்பளத்தில், சென்னையில் திருமங்கலத்தை அடுத்த அம்பத்தூர் ஓ.டி யில் தனியே தோழிகளுடன் தங்கி வேலையில் இருக்கும் பெண் மாலதி. தனி மனித ஒழுக்கம் என்று ஒன்று உண்டு என்று நினைக்கும் வெகு சில இளைய தலைமுறைகளுள் அவளும் ஒருத்தி. மனதின் ஓட்டங்களை அப்படியே வெளிப்படுத்துவதான நடவடிக்கைகள் அவளுடையது. தமிழ் இலக்கியங்கள், நாவல்கள், கவிதை எழுதுவது, கைவினைப் பொருட்கள், நடனம், கோயிலில் கதா காலட்சேபம் இவற்றுக்கெல்லாம் நேரம் போனது போக பிறிதெதர்க்கும் நேரமில்லை என்பது தான் அவள்.

பெண்ணுக்கு வேலை என்பதை இரண்டாவது பட்சமாக நினைக்கும் குடும்பம் அவளுடையது. ஒரு மனிதன், தனது இளம் வயதில் தொடக்க நிலை ஊழியனாக ஒரு கம்பெனியில் சொர்ப்ப வருமானத்தில் சேர்ந்து, வயோதிகத்தில் அதே கம்பெனியில் அதே தொடக்க நிலை ஊழியனாக ஒய்வு பெற எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கு அவளின் அப்பா ஓர் உதாரணம். கணவனுக்கு எவ்வகையிலும் குறைந்தவள் அல்ல மாலதியின் தாய் வள்ளி. வெளி உலகம் தெரியும் முன்பே திருமணமாகி, வீட்டிற்குள் வீரம் பேசும் நாராயணனுக்கு மனைவியாகிப்போனதில், வள்ளி தெரிந்து கொண்ட உலகம் என்பது நாராயணன் காட்டிய உலகம் மட்டுமே. இத்தனைக்கும் வள்ளி அந்த காலத்து பி.ஏ.

உறவுகளை உருவாக்குவதும், பலப்படுத்துவதும் எது தெரியுமா? அன்பா? இல்லை. இல்லவே இல்லை. புரிதல். சரியான புரிதல் இல்லையெனில் அன்பு கூட புரியாது. ஆணவமாகத் தோன்றும். திமிராகப் படும். எதையோ நினைத்து ஏமாந்து விட்டதாய் தோற்றம் தரும். கோபம் கொள்ள வைக்கும். இனியும் ஏமாறக்கூடாதென்று எச்சரிக்கை உணர்வு கொள்ள வைக்கும். நம்பிக்கை இழக்கும். நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பு இருக்க வாய்ப்பில்லை. இந்த சூட்சுமம் வெகு பலருக்கு புரிவதில்லை. காதல்கள் பொய்த்துப் போவதும், திருமண வாழ்க்கை முறிந்து போவதும், சகோதர பாசம் குன்றிப் போவதும், நட்பு முறிவதும் என எல்லாமும் புரிதல் தோல்வியடைவதைச் சார்ந்த நிகழ்வுகள்.

மாலதியின் சர்ரியலிஸ கவிதைகள், நாராயணனுக்கு கிறுக்குத்தனம். அர்த்தமற்ற வார்த்தைக் கோர்வை. மாலதியின் காதல் கவிதைகள், அவரைப் பொறுத்த மட்டில், ஒரு பெண்ணின் காம வெளிப்பாடு. ஒரு விதமான முகமூடி கிழிப்பு. அவளின் சமூக அக்கறை, அவருக்கு வேண்டாத வேலை. காலைக் கட்டிக்கிடந்த குட்டி நாய், தன்னைப் பார்த்து குறைப்பது போல. அவருக்குத் தெரிந்து இலக்கியம் என்பது இரண்டே இரண்டு. ஒன்று, ஐவரை கணவர்களாக்கிய ஒருத்தியின் கதை. மற்றொன்று, பெண்டாட்டியை அடகு வைத்தவர்களின் கதை. இதைத் தாண்டியும் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை என்பது அவரின் கருத்து. அவர் அகராதியில் புத்தகங்கள் என்பது பள்ளிக்கூடத்துடன் தொடர்புடைய ஒன்று. அவ்வளவே. அவள், எழுத்தின் மூலம் வெளிப்படுத்தும் அவளின் நுட்பமான மன உணர்வுகளை அவர் படிக்க ஆர்வம் காட்டுவதே இல்லை. ஏனெனில் புரியவில்லை. புரியாதது அறியாமை. குறை. குறையுள்ளவனாக காட்டிக்கொள்ளுதல் பங்கம். தான் தோற்கடிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயம். பயத்தில் எழுவது ஆதிக்க உணர்வு.

எழுத்து வீண் வேலை என்பார். எழுதினாலோ, கேள்வி கேட்டாலோ, கருத்து சொன்னாலோ தன்னை மதிக்காத பெண் என்பார். தன்னை மதிக்காதவரை தானும் மதிக்க வேண்டியில்லை என்பார். மகளிடம் பணம் வாங்கி, பெண்டாட்டிக்கு நகை செய்வார். மாலதி அவருக்கு மகள் அல்ல. போட்டிக்கு நிற்கும் இன்னொரு மனிதன். அவருக்கு தோன்றியதையே யாரெனும் சொல்லிவிட்டால், அவரை மிகச்சரி என்பார், அவன் ஒன்றுமில்லாதவன் என்றாலும், அரசனென்பார். பிறிதெவரும், அரசனானாலும் ஆண்டி என்று விடுவார். பாராமுகம் காட்டுவார். வாய்ப்பூட்டு போட்டுக்கொள்வார். சமயம் கிடைத்தால், சேறு பூசவும் தயங்க மாட்டார். கேட்டால், உலகத்தை பார்த்து கற்றுக்கொள் என்று பேசுவார்.

வள்ளிக்கு நாராயணன் தான் வகுப்பறை. அவரை அன்றியும் அவள் வேறெதையும் படித்ததில்லை, பார்த்ததில்லை, கேட்டதில்லை. அவளைப் பொறுத்த மட்டுல் அவர் காட்டிய உலகம் தான் கண்முன்னே இருக்கும் ஒரே ஒரு உலகம். வள்ளிக்கு மூத்தவள் என்கிற முறையில் மாலதியின் கேள்விகள் அச்சுறுத்துகிறது. ப‌தில் தெரிய‌வில்லை அல்ல‌து விள‌க்க‌ இய‌ல‌வில்லை. விளக்கி ப‌ழ‌கியிருக்க‌வில்லை. பதில்களைத் தேடி பழக்கமில்லை. தன் மரியாதை கெட்டுவிடுமோ என்ற பயம். மாலதியை வள்ளியும் மட்டுப்படுத்தியிருக்கிறாள், சமாளிக்கும் விதமாக‌. எழுத்தெல்லாம் வீண் என்று பலவீனப்படுத்தியிருக்கிறாள். அப்பா சொல்படி கேள் என்பதாய் அறிவுருத்தியிருக்கிறாள். ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் செய்யும் அநீதி. ஒரு பெண்ணாக இருந்துகொண்டு ஆணைச் சார்ந்து இருக்கச் சொல்லி நிர்பந்தப்படுத்தியிருக்கிறாள்.

இல்லை. இது, முழுமையும் ஆதிக்க மனோபாவம் இல்லை. நியாய‌மான‌ ப‌தில்க‌ள் இல்லாத‌ இட‌த்து பலவீனம் தோன்றுகிறது. பயம் வருகிறது. ஆதிக்க‌த்தின் கைக‌ள் ஓங்குகிற‌து. நியாய‌மான‌ ப‌தில்க‌ள் இல்லை. ஏனெனில், ச‌ரியான‌ புரித‌ல் இல்லை. சமூகம் இப்படித்தான் இருக்கிறது. இப்படித்தான் பழக்கப்படுகிறது. இப்படித்தான் இது, இதுவா? அதுவா? என்று அறுதியிடப்பட முடியாமல் இருக்கிறது. சாக்ரடீஸை என்ன செய்தார்கள்? காந்தியை என்ன செய்தார்கள்? கேள்வி கேட்பதில்லை. சிந்திப்பதில்லை. சரி, தவறுகளை அறுதியிட, நின்று நிதானிக்க எவருக்கும் பொறுமையில்லை. காரியமாக வேண்டும். அதற்கு மூர்க்கம் உடனடியாகப் பயன்படும். இது ஒன்றுதான் அதற்குத் தெரியும். மாலதிக்கு பெண் சுதந்திரம் தரப்படவில்லையெனில், தராதது யார்? இன்னொரு பெண்ணும் தானே?

மாலதி, தன்னை பற்றியும், தனக்கு என்ன தேவை என்பதைப் பற்றியும் தெளிவாக அறிந்தவள். அவளுக்கும் பயம். வரப்போகிறவனும் இன்னொரு நாராயணனாக இருக்கக்கூடாதென்கிற‌ ப‌ய‌ம். அவனுக்கு சர்ரியலிஸம் புரியவேண்டாம். குறைந்தபட்சம், சர்ரியலிஸம் பற்றிச் சொன்னால் கேட்டுக்கொள்பவனாக, கற்பூரம் போல் அதை உள்வாங்கிக்கொள்பவனாக, புத்தகங்களை நேசிப்பவனாக, வாசிக்கும் ஆர்வம் வாய்ந்தவனாக இருப்பானா? தன்னை விட குள்ளமாய் இருந்து ஊரார் கேலிக்கு ஆளாகிவிடாமல், உயரமாய் இருப்பானா? தேனீருக்குக் கூட தன்னை எதிர்பார்க்காமல் இருப்பானா? இரவுகளில் கொட்டாவி விட்டு அறையை விட்டுத் துறத்தாமல் இருப்பானா? வார இறுதிகளில் நடு ஹாலில் குடித்துவிட்டு வாந்தி எடுத்து நாரடிக்காமல் இருப்பானா? அப்பாவைப் போல் பணத்திற்கு தன்னையே அண்டியில்லாமல் சுயத்துடன் இருப்பானா ? குவாண்டம் பிஸிக்ஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டாம். குறைந்தபட்சம், தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவனாகவாவது இருப்பானா? தொழில் நுட்பம் பற்றி தெரிந்திருக்கவில்லையெனினும், சொன்னால் ஆர்வமுடன் கேட்டுக்கொள்வானா? என்றாவது தானும் வீட்டில், புருஷன் சம்பாதிக்கும் பணத்தில், சொகுசாய் நாவல் வாசிக்க இயலுமா? என்றெல்லாம் அஞ்சுகிறாள் மாலதி. அவள் பயத்திற்கு காரணம், 25 வருடங்களை கூடவே பயணித்த பெற்றோர்களிடம் இல்லாத இந்த குணங்கள். இவைகளை வரவழைத்துக்கொள்ள துணியாத அவர்களின் நிலைப்பாடு. அப்பேற்பட்ட மனிதர்களுடனான மனச்சிக்கல்கள். குழ‌ந்தைப் பிராய‌த்திலிருந்தே அப்பா, த‌ம்பி, நண்பன், மாமன் என‌ எல்லா கால‌க‌ட்ட‌த்திலும் ஏதோவொரு ஆணுக்கு அடிப்ப‌ணிந்தே கிட‌ந்து இனி மிச்ச‌முள்ள‌ கால‌மும் அப்ப‌டியே க‌ழிந்துவிடுமோ என்கிற‌ ப‌ய‌ம்.

மாலதிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். எப்படி பார்க்கவேண்டும்? ஆசையாய் வளர்த்த, பொறியியல் படித்த, சொந்தக்காலில் நிற்கத் தெரிந்த, ஞானம் அடைந்த‌ பெண்ணுக்கு மாப்பிள்ளை எப்படி பார்க்கவேண்டும்? மாலதியை தெரியவில்லை. அவள் எழுத்து புரியவில்லை. அதனால் அவளையே புரியவில்லை. அவள் என்ன என்பது புரிந்தால்தானே அதன் இணையை பற்றி தீர்மானிக்க இயலும்? நாராய‌ண‌னுக்கும், வ‌ள்ளிக்கும் மால‌தி என்றொரு முக‌மூடியைத்தான் தெரியும். அந்த முகமூடி கூட அவர்களாக அவளுக்கு அணிவித்தது. 'உங்கள் பையனுக்கு எங்கள் பெண் பொருத்தம் என்று எண்ணுகிறோம்.. மேற்கொண்டு பேசலாமா?' என்பது இரைஞ்சுதல் அவர்களுக்கு மண்ணைக் கவ்வும் செயல். மாலதி புரியவில்லை. அவள் தேவைகள் புரியவில்லை. அதைப் புரிந்து கொள்ளும் முயற்சி இல்லை. ஆனாலும் திருமணம் செய்யவேண்டும். கால‌ம் க‌டந்துவிட‌க்கூடாது என்கிற‌ நிர்ப‌ந்த‌ம் விர‌ட்டுகிற‌து. பெண் கேட்டு வருகிறவர்களுக்கு தந்துவிடலாம் என்பது அவர்கள் எண்ணம்.

மாலதி, குளியலறையை அண்டி முகம் கழுவி துடைத்து, துப்பட்டா சரிசெய்து, மின்விசிறி, மின்விளக்குகள் அணைத்து, அறைக் கதவுகளைத் தாழிட்டு, ஸ்கூட்டியை உதைத்துக் கிளப்பி பத்து கிலோமீட்டர் பயணித்து அம்பத்தூரிலிருந்து புதூர் செல்லும் வழியில் உள்ள சேது பாஸ்கரா பள்ளிக்கருகில் உள்ள அபார்ட்மென்டின் இரண்டாவது தளத்தில் இருக்கும் மாமா வீட்டிற்கு வர மாலை 4 மணி ஆனது. அப்பா நாராயணன் ஸ்கூட்டி சப்தம் கேட்டு படியேறிவந்த மாலதியை வாசலில் எதிர்கொண்டார்.

"வா மாலதி, அவர்கள் வீட்டில் மாலை ஐந்து மணிக்கு வருவதாக சொல்லியிருக்கிறார்கள். நீ சீக்கிரம் ஒரு புடவை அணிந்து கொள். தயாராகிவிடு. என்ன?"

என்று விட்டு மாலதியின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல், மனைவியிடம் திரும்பினார்.

"வள்ளி, மாலதியை தயார் செய்துவிடு. இனிப்பு காரமெல்லாம் வாங்கியாகிவிட்டது. அவர்கள் வர வேண்டியது தான். மாலதியை பெண் பார்க்க வேண்டியதுதான். அதிகபட்சம் ஐந்து பேர்களை எதிர்பார்க்கலாம். அவர்களுக்கு தேனீர் தயார் செய்து வை, என்ன?"

"சரிங்க" என்றுவிட்டு மாலதியை அழைத்துப் போனாள் வள்ளி. மாலதியை உடைமாற்றச் சொல்லி விட்டு சமையலறைக்குள் மால‌தியின் அத்தையுட‌ன் ஒண்டிக்கொண்டாள்.

ப‌ல‌வ‌ந்த‌ப்ப‌டுத்துத‌ல் என்பது ஒரு திணிப்பு. அறியாமை. இங்கே மாலதியின் உள்ளக்குறிப்பு, பெற்றவர்களுக்கு புரியவில்லை. புரியாத‌ போது, க‌வ‌லைப்ப‌ட‌ ஏதுமில்லை. எதிராளி ஒத்துழைக்க‌ ம‌றுக்கையில் காரிய‌ம் சாதிக்க பிரயோகிக்கப் படுகிறது ப‌ல‌வ‌ந்த‌ம். வ‌ள‌ர்க்கும் நாய் சொன்ன‌தைக் கேட்காவிடில் விழுகிற‌து அடி. ப‌ல‌வ‌ந்த‌ம். குழ‌ந்தை அட‌ம் பிடிக்கையில் விழுகிற‌து அடி. ப‌ல‌வ‌ந்த‌ம். தேர்வுக்கு ப‌டிக்காத‌போது விழுகிற‌து அடி. ப‌ல‌வ‌ந்த‌ம். புரியாத‌ த‌ன்மையின் விளைவு. குழ‌ந்தை ஏன் அட‌ம் பிடிக்கிற‌து? அத‌ற்கு ப‌ழ‌க்க‌மில்லை. மிர‌ள்கிற‌து. முத‌ல் முறை ப‌ழ‌க்க‌ப்ப‌டுதல் அவசியம். அதைச் செய்ய‌ நிர்ப‌ந்திக்க‌ப்ப‌டுகிற‌து. தேர்வுக்கு ப‌டிக்காத‌து க‌வ‌ன‌ச்சிதைவு அல்லது விருப்பமின்மை. ஆனால், தேர்வு இன்றியமையாதது. அதன் முக்கியத்துவம் பெற்றவனுக்கு தெரியும். அது பிள்ளைக்கும் தெரிய‌ வேண்டும். ஆர்வம் மேலிட புரியும்படி பாடம் சொல்லித்தரத் தெரியவில்லை. விளைவு, பலவந்தம்.

மாலதி, ரவிக்கை அணிந்து, புடவை கட்டி, கழுத்தில் ஒரு மெல்லிய தங்க செயினும், இரு கைகளிலும் தலா ஒரு மோதிரமும், வளையல்களும் அணிந்து தயாராகையில் மணி நான்கரை ஆகியிருந்தது. 'மாப்பிள்ளைப் பையனை பிடித்திருக்கிறதா?' என்று ஒருவரும் கேட்கவில்லை. அருகிலிருந்தால் பேச நேர்ந்துவிடுமோ என்று ஆளுக்கொரு பக்கம் ஒளிந்தது போலிருந்தது. தனித்து விடப்பட்ட மாலதிக்கு அழுகை வரும் போல இருந்தது. மீண்டும் பயம் வந்தது. உண்மை இருக்கும் இடத்து தெளிவு இருக்கும். தைரியம் வரும். துணிவு வரும். தன்னம்பிக்கை இருக்கும். ஓடி ஒளியத் தோன்றாது. பொய் இருக்கும் இடத்தில் தெளிவு இருக்காது. தெளிவு இல்லையேல் தன்னம்பிக்கை இருக்காது. ஓடி ஒளிய வேண்டி இருக்கும். இப்படியான செய்கைகள் பெற்றோரிடமிருந்தே ஒரு பெண்ணுக்கு நிகழ்வது என்பது ஒரு உச்சகட்ட நம்பிக்கை துரோகம். பெற்ற தாய், ஒரு பெண்ணுக்கு, முதுகெலும்பு. தாயை ஒட்டியே வளர்கிறாள் மகள். தாய் ஒரு தோழி போல. தந்தை, ஆண் வர்க்கத்தின் முதல் பிரதிநிதி. முன்னுதாரண ஆண். ஆனால், அவர்களே புறமுதுகு காட்டுகையில் தனித்து விடப்படுகிறாள் பெண். நிராதரவாக உணர்கிறாள். மனதளவில் உடைகிறாள். பலவீனமடைகிறாள். பற்றிக்கொள்ள கழுகொம்பு தேடுகிறாள். அந்த சமயம், யாரேனும் ஆதரவுக்கரம் நீட்டினால், பேதையென‌ தன்னை இழக்கிறாள்.

மாலதிக்கு விருப்பமின்மை.

புகைப்படத்தில் பெண் பார்க்க இருக்கும் பையன், ஒரு டீசர்டும், சாதாரண ஜீன்ஸும் அணிந்திருந்தவாறு இருந்தான். அது தவறா? தவறில்லை. ஐந்திலக்க ஊதியம் வாங்குபவனுக்கு, ரசனையாய் உடை உடுத்தத் தெரியவில்லையே என்கிற ஆதங்கம். ஐந்நூறு ரூபாய்க்கு வாங்கும் உடைகள் ஆறே மாதத்தில் நைந்து போகும். ஆயிரத்து ஐந்நூறு லெவி ஸ்ட்ராஸ் என்றாலும் வருடக்கணக்கில் நிற்கும். நிறம் அள்ளிக்கொண்டு போகும். உடுத்தினால் மதிப்பாய் இருக்கும்.அதை தேர்ந்தெடுக்க‌ உடை உடுத்துவதில் சாதுர்யத்துடன் கூடிய ரசனை வேண்டும். வயது 27 என்றார்கள். ஆனால், தோற்றம் 35 என மதிக்கச் செய்தது. ஐந்தரை அடியில் நிமிர்ந்து நின்றால் கணுக்கால் தெரியாத அளவில் தொப்பை. தொப்பை இருந்தால் மோசமானவன் என்றா பொருள்? இல்லை. ஆனால், வளர்ந்து வரும் சூழலில், தேகப்பயிற்சி நோயையும் விரட்டும், உடலையும் கட்டுக்கோப்பாய் வைக்கும். தேவை, நேரத்துக்கு பயிற்சிக்கூடத்தில் மெனக்கெடுதல். அது கூட இல்லையெனில், சோம்பேரியாக இருப்பானோ என்று நினைக்கத் தோன்றியது. வங்கிக் கடனில் சுலபப்படும் பொறியியல் இன்றைக்கு தனக்கே சாத்தியப்பட்டுவிட்டதில் தன்னை ஆள வேண்டிய கணவன் என்கிற ஆண்மகனுக்கு தன்னை விட அதிகமான திறமைகள் இருக்கவேண்டும் என்று ஒரு பெண் எதிர்பார்ப்பதில் என்ன தவறு? மேலும், இது எல்லாமுமே கொஞ்சம் மெனக்கெட்டால் சாத்தியப்படக்கூடிய ஒன்று தானே. அப்படியொன்று இயலாத காரியமல்லவே.

ஆனால், அது அவளின் பெற்றோருக்கு புரியவில்லை. ஏன் புரியவில்லை? ஏனெனில் தலைமுறை இடைவெளி. அவர்களால் பிள்ளைகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாததற்கு, புரியாத‌ தொழில் நுட்பமும் ஒரு காரணம். 2012 ம் வருடத்தில் 1935ன் மனப்பக்குவ‌ம் எப்படி போதும்? அவர்களைப் பொறுத்த மட்டில், பெற்ற பெண்ணுக்கு செய்ய வேண்டிய கடமை செய்ய வேண்டும். காரியம் ஆக வேண்டும்.

'தான் ஏன் பழக்கமில்லாத ஒருவரைப் பற்றி இத்தனை தவறாக நினைக்கிறோம், ஏன் சேற்றை வாரி இறைக்கிறோம்?, இது சரியா அல்லது தவறா?, குறை தன் மீதா? அல்லது அவன் மீதா?, தனக்குள் முளைத்த இந்தக் கேள்விகள் ஏன் மற்றவர்களுக்கு தோன்றவில்லை? உலகில் எல்லா பெண்களுக்கும் இதுதான் கதியா? இல்லை தனக்கு மட்டும்தான் இதெல்லாம் நிகழ்கிறதா?' மால‌தியின் பேதை ம‌ன‌ம் நிலைகொள்ளாம‌ல் த‌வித்த‌து. நடப்பது நடக்கட்டும். இனி தடுக்க இயலாது. யார் கண்டது? வருகிறவர்களுக்கு தன்னை பிடிக்காமல் கூட போகலாம். எப்படியாகினும், வந்தவர்கள் வந்த காரியம் முடித்துவிட்டு சென்றபின் அப்பா, அம்மாவிடம் பேசிக் கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டாள்.

மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

நேரம் செல்ல செல்ல ஒரு தீர்மானமான அவசரம் எல்லோரையும் தொற்றிக்கொண்டது போலிருந்தது. நாராயணனும் வள்ளியும் பார்க்கும்படி உடுத்திக் கொண்டார்க‌ள். வீட்டை ஒதுங்க வைக்கத் துவங்கியிருந்தார்கள். வருகிறவர்களை எங்கெங்கு அமரவைக்கலாமென்று தங்களுக்குள் விவாதித்து இருக்கைகளை இடமாற்றிக் கொண்டிருந்தார்கள். வள்ளி மறக்காமல், பூஜையறையை அண்டி, குங்குமச் சிமிழில் குங்குமம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். அணைந்திருந்த ஒன்றிரண்டு மின்விளக்குகளையும் ஒளியூட்டி வீட்டை பிரகாசிக்க வைத்தார்கள். சமையலறையில் தேனீரும், குளிர்பானங்களும் தயாராக இருந்தன. ஐந்து அலங்கார தட்டுகளில் இனிப்பும், காரமும் பகிரப்பட்டு தயார் நிலையில் இருந்தன. மாலதியை யாரும் கவனித்தது போல் தோன்றவில்லை.

திடீரென்று யாரும் எதிர்பாராத வண்ணம் மின்சார வினியோகம் த‌டைப‌ட்ட‌து. மின் விள‌க்குக‌ள் அணைந்த‌ன‌. மின்விசிறி ஜீவ‌னின்றி சோர்ந்த‌து.

"அய்யய்யோ! போச்சு!!" நாராயணன் அலறினார்.

"நான் அப்போதே சொன்னேன். காலையிலேயே வரச்சொல்லிவிடலாமென்று. இப்போது பாருங்கள்" சலித்துக்கொண்டாள் வள்ளி.

மாமா அக்கம்பக்கம் விசாரிக்க விரைந்தார். விசாரித்துவிட்டு பக்கத்து தெருவில் மின்சார வாரிய வேலை என்று அறிவித்தார்.

"அய்யோ! அவர்களை வேறு வரச்சொல்லிவிட்டோம். என்ன செய்வது? சமாளிக்கலாமா வள்ளி?"

"சமாளிக்கிறதாவது?!.. வியர்த்து வரும். நொச நொசத்துப் போகும். இப்போதே பாதி இருள். அவள் புடவை எடுக்காது. வேண்டாங்க".

"ஹ்ம்ம்.. அப்படியானால், என்ன செய்யலாம்?"

"வரவேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். இன்னொரு நாள் பார்க்கலாம்" என்றாள் வள்ளி.

"ஆமா அத்தான், எனக்கென்னமோ இது நல்ல சகுனமாகப் படவில்லை. எதற்கும் அந்தப் பையனைப் பற்றி கொஞ்சம் விசாரிப்போமே, அப்படியே நம்ம தரகர் ஒரு பையனைப் பற்றிச் சொன்னார். அதையும் பார்க்கலாம்" என்றார் மாமா.

மாலதிக்கு, வயிற்றில் பால் வார்த்தது போலிருந்தது.

முற்றும்.

#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6142)

Monday, 10 December 2012

காலையில் ஒரு கொலை - சிறுகதை


காலையில் ஒரு கொலை - சிறுகதை


மண்டையைப் பிளக்கும் உச்சி வெயிலில் தள்ளாடிக்கொண்டிருந்தது சென்னையின் கடலோரச் சாலை. ஈஸ்ட் கோஸ்ட் ரோடென்று அழைக்கப்படும் இது சென்னையையும் பாண்டிச்சேரியையும் இணைக்கிறது. திருவிடந்தையை அடுத்து சற்றேறக்குறைய 500 மீட்டர் தூரத்தில் சாலையை விட்டுப்பிரியும், கவனிப்பாரின்றி நாதியற்றுக் கிடக்கும் ஒரு மண் சாலை. இப்போது அனேகம் போலீஸ் தலைகளும், சாலையோரம் ஆங்காங்கே தேங்கி நின்று கும்பல் கும்பலாய் வேடிக்கை பார்க்கும் அக்கம்பக்கத்து பொதுஜனமும், இவையெல்லா களேபரத்தையும் சாலையிலிருந்தபடியே சுற்றுலாவில் கிடைத்த உபரி சுவாரஸ்யமாய் கார், பஸ்களிலிருந்தபடியே பார்த்துச்செல்லும் பட்டாளங்களுமாய் அன்றைய தினத்தை சற்று வித்தியாசமாகவே கழித்துக்கொண்டிருந்தது அந்த இடம்.

சாலையோரம் போலீஸ் ஜீப்புகள் இரண்டும், ஹுண்டாயின் போலீஸ் ரோந்து கார்கள் இரண்டும், நெடுஞ்சாலைப் பாதுகாப்புத்துறையின் ஆம்புலன்ஸும் நின்றுகொண்டிருந்தது இன்னும் பரபரப்பை அதிகமாக்கிக்கொண்டிருந்தது. இருமருங்கிலும் சவுக்கு மரங்கள் சீராக வளர்ந்திருக்க, இடையில் இருந்த மண் சாலையில் சற்று தொலைவில் ஒரு டாடா இன்டிகா டாக்ஸி கார் கடலை நோக்கி நின்றிருக்க, அதன் இரு பின் கதவுகளும் திறந்திருந்தது. உள்ளே வெள்ளை அரைக்கை சட்டை, கருப்பு பாண்ட் அணிந்த ஒருவன் டிரைவர் சீட்டில் சாய்ந்து அமர்ந்தவாறே மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகிக் காய்ந்திருந்தபடி மல்லாந்து கிடந்திருந்தான். மண்டையில் எதனாலோ பலமாகத் தாக்கப்பட்டிருப்பதற்கான அத்தாட்சியாய் அடர்த்தியாய் தலைமயிருடன் ரத்தம் தோய்ந்து காய்ந்திருந்தது. காயத்தைப் பார்க்கையில் அடர்த்தியான சதுர வடிவம் கொண்ட இரும்பால் தாக்கப்பட்ட தோரணை இருந்ததை உணர முடிந்தது.கண்கள் அரைத்தூக்கம் கொண்டது போல் மூடியும் மூடாமலும் செருகிக்கிடந்தன. உட்கார்ந்தவாறு அவனைப் பார்க்கலாம். அவனது உயரம் ஐந்தடி மூன்றங்குலம் இருக்கலாமென்று தோன்றியது. அதைச் சுற்றிச் சுற்றி ஒரு போட்டோகிராபர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்க, ஆங்காங்கே போலீஸ் தலைகள் நின்று அவரவர்க்கு கிடைத்த வாக்கி டாக்கிகளில் யாருக்கோ எதையோ சொல்லிக்கொண்டிருக்க, அந்தக் காரின் பக்கவாட்டில் காரையே பார்த்தபடி நின்றிருந்தார் இன்ஸ்பெக்டர் சேது. அவருக்குப் பக்கத்திலேயே சப்‍-இன்ஸ்பெக்டர் சங்கர் கையில் ஒரு ஃபைலில் தான் எழுதிக்கொண்ட ஃபர்ஸ்ட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட்டை சரிபார்த்துவிட்டு சேதுவை நெருங்கினார்.

'சேது, எளனீ கடைக்காரர் மருது சொன்னத வச்சி எஃப்.ஐ.ஆர். எழுதிட்டேன் . அவர் காலைல 10 மணிக்கு பாத்திருக்கார். உடனே போலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கார். நாம 10:15 க்கு வந்திருக்கோம். ஃபோட்டோ செஷன் சொல்லி முடிஞ்சாச்சு. இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்றதுக்கான பேப்பர் வொர்க் கூட முடிஞ்சது. நாம‌இன்வெஸ்டிகேஷனை ஸ்டார்ட் பண்ணிடலாமா?'.

'உனக்கு என்ன தோணுது சங்கர்?'.

'ம்ம்.. கேப் டிரைவரை அடிச்சி கொன்னிருக்கானுங்க. அதுவும் ஹைவேஸ்க்கு பக்கத்துல. எதாவது கள்ளக்கடத்தல் இல்லேன்னா வழிப்பறி சண்டையா இருக்கும் சேது. அந்த ஆங்கிள்ல ப்ரோசீட் பண்ணலாம்னு தோணுது. வாட் டூ யூ சே?'.

'ம்ம்.. இல்ல சங்கர். வண்டிய பாத்தியா? இவன் ஒரு ரெஜிஸ்டர்டு கேப் டிரைவர். இவன மாதிரி ஆள வச்சில்லாம் கள்ளகடத்தல் பண்ணியிருக்கமாட்டாங்கன்னு என் இன்ஸ்டிங்ட் சொல்லுது. அப்புறம், அவன் பாக்கெட்ல பாத்தியா, பணம் அப்படியே இருக்கு. வழிப்பறி பண்ணனும்னு நினைச்சா ஏன் பணத்தை விட்டுட்டு போகணும்?'.

'ம்ம்... அதுவும் சரிதான். அப்போ எப்டிதான் ப்ரொசீட் பண்றது சேது?'.

'தெரியல. சரி, கார்ல எவ்ளோ பெட்ரோல் பாக்கி இருக்குன்னு பாரு?'.

'ஓகே சேது' என்றுவிட்டு அகன்றார் சங்கர்.

சேது மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார். வண்டியின் டாகுமென்ட்ஸ் எல்லாம் டாஷ்போர்டில் இருந்தது. அதன்படி செத்தவன் பெயர் கதிர். வயது முப்பது. வண்டி 2007 மாடல். ஐந்து வருட லோனில் எடுக்கப்பட்டிருப்பதாக ஆர்.சி. யில் இருந்த ஹைப்போதிகேஷன் முத்திரை தெரிவிக்கிறது. வண்டியில் சிகரெட் லைட்டரோ அல்லது வத்திப்பெட்டியோ அல்லது லைட்டரோ இல்லை. அவன் உதடுகளைப் பார்க்கையில் புகைபிடிக்கும் பழக்கமுள்ளவனாகத் தோன்றவில்லை. பார்க்கவும் டீசன்டாக இருந்தான். ஷூ அணிந்திருந்தான். தலை படிய வாரப்பட்டிருந்தது. உடைகள் அயர்ன் செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றியது. மொத்தத்தில் ஏதோவொரு ஒழுங்கு இருந்தது அவனிடம். கலிகாலத்தில் இப்படி இருப்பதுவும் ஆபத்து என்று தோன்றியது அவருக்கு. காரின் டாஷ்போர்டில்,ஒரு மொபைல் ஃபோனும், ஒரு டைரியும் இருந்தது. பெரும்பாலான பக்கங்களில் கொடுக்கல் வாங்கல்கள்தான் இருந்தாலும், மிகச்சில பக்கங்களில் தமிழில் சில கிறுக்கல்களும் இருந்தன. எங்கெல்லாம் கிறுக்கல்கள் இருந்தனவோ அங்கெல்லாம் 'மாலு' என்று எழுதப்பட்டிருப்பதையும் பார்க்க முடிந்தது.

சங்கர் இப்போது சேதுவின் அருகில் வந்தார்.

'சேது, டாங்க்ல இன்னும் 9 லிட்டர் டீசல் இருக்கு சேது'.

'. சரி, அந்தக் கதிரோட வீட்டுக்கு சொல்லியாச்சா?'.

'சொல்லியாச்சு சேது. அந்த டாஷ்போர்ட்ல இருந்த டாகுமென்ட்ஸ்ல ஒரு நம்பர் இருந்தது. நான் கால் பண்ணினேன். யாரோ கண்ணன்னு அவனோட ஃப்ரண்ட் போலருக்கு. சொல்லிட்டேன். அவன் கதிரோட வீட்டுக்கு சொல்லிட்டு இப்போதான் வந்தான்' என்றுவிட்டு திரும்பி 'ஏய், தம்பி..இங்க வாப்பா' என்று உரக்க கத்த ஓட்டமும் நடையுமாய் ஒருவன் ஓடி வந்தான். அரக்கு நிறத்தில் சாக்கு போலொரு கட்டம்போட்ட சட்டையும், சாயம்போன பச்சை நிறத்தில் முட்டிப்பகுதியில் கிழிந்த வாக்கில் ஒரு ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தான். உயரம் ஆறடி இருக்கலாம். மாநிறம். வகைதொகையாக கண்ட நேரத்திலும் கண்டதையும் தின்பான் போலிருந்தது. வயது முப்பத்தைந்து இருக்கலாமென்று எண்ணத்தோன்றியது. சவரம் செய்யப்படாமல் இருந்தது அவன் முகம். முகம் கழுவும் பழக்கமே இல்லையென்பதை ஆங்காங்கே மருக்கள் உருதி செய்தன. வெளிப்புறத் தோற்றத்துக்கு அவன் சாதாரணமாக இருப்பதாகத் தோன்றினாலும், சேதுவின் உள்ளுணர்வுக்கு அவன் சற்று பயந்துபோயிருப்பதைத் தெளிவாக உணர முடிந்தது. அவன் அதை மறைக்க முயற்சிப்பதையும் அவர் கவனித்தும் கவனிக்காதது போல் காட்டிக்கொண்டார்.

'ம்ம்.. கதிரோட ஃப்ரண்டா நீ?'

'ஆமா சார்'.

'உங்களுக்கு வீடு எங்க?'

'கொட்டிவாக்கத்துல சார், கதிரு என்கூடத்தான் சார் தங்குறான்'.

'உனக்கு கதிர எப்படித் தெரியும்?'.

'சார், நாங்க ரெண்டு பேரும் ஒரே ஊருதான் சார். மாயூரம் பக்கத்துல ஏனாதி சார். அங்க இருக்குற கவர்ன்மென்ட் ஸ்கூல்ல தான் சார் +2 வரை படிச்சோம். அப்புறம் அவன் ஐ.டி.ஐ. படிச்சான். நான் வேலைக்கு வந்துட்டேன் சார். அவனுக்கும் வேலை கிடைக்காம கடைசில என்கிட்ட வந்தான் சார். நாங்க பாங்கல லோன் போட்டு கேப் வாங்கி ஓட்றோம் சார்'.

'கடைசியா கதிர‌ எப்ப பாத்த?'.

'காலைல சார். இன்னிக்கு அவனுக்குப் பொறந்த நாள் சார். காலைலயே குளிச்சிட்டு பக்கத்துல மங்காத்தக் கோயிலுக்குப் போயிட்டு கேப்பை கிளப்பிகிட்டு போனான் சார். திருவான்மியூர் தாண்டி டீசல் தீர்ந்திடிச்சின்னு போன்ல கூப்பிட்டான் சார். மணி 8:55 இருக்கும் சார். நான் என் கேப்ல போய் எம்.ஜி.எம். போற வழில இருக்குற பங்க் வரைக்கும் டோப் பண்ணினேன் சார். அப்புறம் நான் சவாரி எடுக்கப் போயிட்டேன் சார்.'.

'காலைல டீசல் போடுறதுக்கு எதுக்கு சிட்டிக்கு வெளில போறான் அவன்? கொட்டிவாக்கத்துல வீடுன்னா உங்களுக்கு திருவான்மியூர் போற ரூட்ல ஒரு ஹெச்.பி. பங்க் இருக்கே. அதானே பக்கம்?'.

' ஆமா சார். ஆனா, அவன் அங்கதான் சார் போடுவான். ஏன்னு எனக்குத் தெரியாது சார்'. இப்போது அவன் முகம் சற்றே கலவரப்பட்டது போல் தோன்றுவதை சேது, சங்கர் இருவருமே கவனித்தனர். சங்கர் மணி பார்த்துக்கொண்டார். மணி மதியம் பதினொன்றாகியிருந்தது.

'ம்ம்.. சரி எவ்ளோக்கு டீசல் போட்டீங்க?'.

'சார், 10 லிட்டர் போட்டோம் சார்'.

'சரி இப்ப‌நீ போ, தேவைப்பட்டா கூப்பிடறோம்' என்றுவிட்டு சேது சங்கரிடம் திரும்பி, கண்ணன் திரும்பி நடப்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டு 'சங்கர், 10 லிட்டர் டீசல் போட்டிருக்கான். 9 லிட்டர் இருக்கு. இன்டிகாவோட மைலேஜ் 18 கிலோமீட்டர் லிட்டருக்கு. அப்படின்னா 18 கிலோ மீட்டர் வந்திருக்கான். இங்கிருந்து 18 கிலோமீட்டர் முன்னாடி யாரோ ஏறியிருக்காங்க. அவந்தான் சஸ்பெக்ட். அவந்தான் கொன்னிருக்கணும்னு எனக்குத் தோணுது. நீங்க என்ன நினைக்கிறீங்க?'.

'கரெக்ட், சேது'.

'ம்ம்.. அந்த‌டாஷ்போர்ட்ல இருந்த கேப் பாஸஞ்சர் பில் எந்தெந்த கார்ப்போரெட் கம்பெனில ரீஇம்பர்ஸ்மென்ட்க்குப் பயன்படுத்தியிருக்காங்கங்குறத அந்தந்த கார்ப்போரெட்ல விசாரிச்சி லிஸ்ட் எடுங்க‌.அப்டியே அந்தப் பையன் கதிரோட மொபைலுக்கு காலைல 8 மணிலேர்ந்து 10 மணி வரை யாரெல்லாம் கால் பண்ணியிருக்காங்கங்குற லிஸ்டும் எடுத்திருங்க‌'.

'ஓகே சேது' என்றுவிட்டு பாக்கெட்டிலிருன்த‌ஃபோனை எடுத்து ம‌த்திய‌காவ‌ல்துறை த‌க‌வ‌ல் சேக‌ரிப்புப் பிரிவைத் தொட‌ர்பு கொண்டார் ச‌ங்க‌ர்.

போனைக் காதுக்குக் கொடுத்துவிட்டு க‌ட‌ந்து போகும் ச‌ங்க‌ரைப் பார்த்த‌ப‌டியே யோச‌னையில் ஆழ்ந்திருந்தார் சேது. இது நிச்ச‌ய‌ம் கொலைதான். கொலை செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ன் சீராக‌இருந்தான். அவ‌னுடைய‌ந‌ண்பன் என்று சொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ன் கேடி போலிருக்கிறான். பொதுவாக ஆரோக்கியமான ந‌ட்புக‌ள் இப்ப‌டிச்சாத்திய‌ப்ப‌டாது தான். ஆனால், கதிர் கொல்லப்படவேண்டிய நோக்கம் என்னவாக இருக்கும்? இப்போதுவ‌ரை தெளிவாக‌ஏதும் இல்லை. கதிர் ஒரு கேப் டிரைவர். லோனில் கார் வாங்கியிருக்கிறான். அதைக் கவனமாக திருப்பிச் செலுத்தும் பொறுப்பு அவன் தோரணையில் தெரிகிறது. அப்படியிருப்பவன் கொல்லப்படும் அளவுக்கு என்ன செய்திருப்பான் என்று யோசிக்கத்தோன்றியது. கலிகாலத்தில் பணத்திற்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் அவன் பாக்கெட்டில் இருந்த பணம் அப்படியே இருக்கிறது. அது என்னவோ பணத்துக்காகக் கொலை நடக்கவில்லை என்று நினைக்கத்தோன்றியது.

இப்போது ச‌ங்க‌ர் ஃபோனை பாக்கேட்டில் செருகிவிட்டு சேதுவிட‌ம் வ‌ந்தார். சேது மணி பார்த்துக்கொண்டார். மணி பதினொன்றரை ஆகியிருந்தது.

'சேது, அந்த‌கேப் பில்ல‌மூணு பெண்க‌ள்தான் அடிக்கடி த‌ங்க‌ளோட‌க‌ம்பெனில‌ரீஇம்ப‌ர்ஸ் ப‌ண்ணியிருக்காங்க‌. அவுங்கள பத்தின எல்லா தகவலும் அதாவது அவுங்க‌நேட்டிவ், ஸ்கூலிங், காலேஜ், வேலை, அட்ர‌ஸ்லாம் கிடைச்சிடிச்சி. போன்ல‌யே வாங்கிட்டேன். இந்தாங்க‌' என்றுவிட்டு நீட்ட‌, ஆர்வ‌மாய் வாங்கிப் பிரித்தார் சேது.

சேது அந்த லிஸ்ட்டைப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே தொடர்ந்தார் சங்கர்.

'சேது, அப்புறம் 8 மணிலேர்ந்து 10 வரை கதிருக்கு ஒரே ஒரு கால்தான் வந்திருக்கு. அது ஏதோ ஒரு லோக்கல் பி.சி.ஓ. மாதிரி இருக்கு. அதோட அட்ரஸையும் எடுத்துட்டேன். கொட்டிவாக்கத்துலதான் இருக்கு சேது'.

சங்கர் தந்த லிஸ்டில் மூன்று பெண்க‌ள் பெய‌ர்க‌ள் இருப்பதைக் கவனித்தார் சேது. க‌ல்ப‌னா, மால‌தி, வ‌சுதா. சேது ஒரு நிமிட‌ம் அந்த‌லிஸ்டை தீர்க்க‌மாய் பார்த்துவிட்டு 'என்கூட‌வாங்க‌ச‌ங்க‌ர்' என்று விட்டு நேராக‌ஜீப்பை நோக்கி ந‌ட‌க்க‌, ச‌ங்க‌ர் தொட‌ர்ந்தார். ஜீப் உருமி, இருவ‌ரையும் உள்வாங்கிப் ப‌ற‌ந்த‌து.

'சேது, நாம‌ எங்க‌ போறோம்?'.

'மால‌தி வீட்டுக்கு. அடையார்ல, ஜெகன்னாதன் தெருல ஃப்ளாட் நம்பர் 14/2, அவஸ்தி அபார்ட்மென்ட்ஸ். அதுக்குமுன்னால அந்த டெலிபோன் பூத்துக்கும் போகணும். எது முன்னாடி வருதோ அங்க போகலாம்'.

'ஏன் மால‌தி வீட்டுக்கு சேது?'.

'க‌ண்ண‌ன் சொன்ன‌த‌க‌வ‌னிச்சீங்க‌ளா? ஏனாதி க‌வ‌ர்ன்மென்ட் ஸ்கூல்ல‌ப‌டிச்ச‌தா சொன்னாங்க‌. இந்த‌மால‌தியும் அதே ஸ்கூல்ல‌தான் ப‌டிச்சிருக்கா' என்றுவிட்டு நிறுத்தினார் சேது.

'சேது, க‌ரெக்ட், அப்ப‌க‌ண்டிப்பா பொம்ப‌ள‌ மேட்ட‌ர்தான். க‌ண்ண‌ன் தான் கொன்னிருக்க‌ணும். ரெண்டு பேரும் அவள‌ல‌வ் ப‌ண்ணிருப்பானுங்க‌. அவ‌க‌திர் மேல‌க‌ண்ணு வ‌ச்சிருப்பா. அதான் க‌ண்ண‌ன் கொன்னிருப்பான். அவ‌ன‌லாக்க‌ப்ல‌வ‌ச்சி ரெண்டு த‌ட்டு த‌ட்டினா தெரிஞ்சிடும் சேது'.

'ம்ம்ம்... தேவைப்ப‌ட்டா அதையும் செஞ்சிட‌லாம்' என்றுவிட்டு நிறுத்தினார் சேது. அவ‌ர் முக‌ம் எந்த‌வித‌ச‌ல‌ன‌மும் இல்லாம‌ல் இருந்ததைக் கவனித்துக்கொண்டார் சங்கர்.

முதலில் அந்த டெலிபோன் பூத்தில் நின்றது ஜீப். தெருவிலிருந்து சற்று உள்ளடங்கி இருந்தது அந்தக் கடை. அதை தாண்டித்தான் மாலதியின் தெருவுக்குப் போகவேண்டுமென்று டிரைவரிடம் வழி சொல்லியிருந்தார்கள். வண்டியிலிருந்து இருவரும் குதித்திறங்கினார்கள்.

'சங்கர், கவனிச்சீங்களா?... இங்கிருந்து கொலை நடந்த இடம் 18 கிலோமீட்டர் இருக்கலாம்... சோ இங்கிருந்துதான் கொலையாளி கால் பண்ணியிருக்கான்'.

'ஆமா சேது, கரெக்ட்'.

'ம்ம்..சரி போயி அந்த பி.சி.ஓல 8 லேர்ந்து 10 வரை யாரெல்லாம் பேசினாங்கன்னு விசாரிங்க?'

'ஓகே சேது' என்றுவிட்டு சங்கர் அந்த கடைக்குள் போக, வாசலில் நின்றபடி அந்த இடத்தை அவதானித்துக்கொண்டிருந்தார் சேது. ஆரவாரமான தெருபோல் தெரியவில்லை. அந்தக் கடையில் டெலிபோன் தவிர ஃபாண்டா, பெப்ஸி என குளிர்பானங்களும், ஜெராக்ஸ் மிஷின்களும், ஷாம்பு, சோப்பு , பேனா, பென்சில், நோட்டுப்புத்தகங்கள் முதலான ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனைக்கு இருந்தன. குளிர்பானங்களைக் குளிரூட்ட ஒரு ஃப்ரிஜும் சம்பிரதாயமாய் சுவற்றில் ஒரு கடிகாரம் கூட இருந்தது. சிறிது நேரத்தில் சங்கர் கையில் ஒரு பேப்பருடன் திரும்பி வர இருவரையும் அணைத்துக்கொண்டு பறந்தது ஜீப்.

சங்கர் கொடுத்த காலர்ஸ் லிஸ்டைப் பார்த்தார் சேது. மூன்றே மூன்று குறிப்புகள் இருந்தது. கதிரின் நம்பருக்கு வந்த அழைப்பு 9:30க்கு வந்திருந்தது. அதற்கு முன் 9:15 மணிக்கு ஒன்றும், பின் 9:45க்கு ஒன்றும் செய்யப்பட்டிருந்தது. கடைக்காரர், இரண்டு விஷயங்கள் சொல்லியிருக்கிறார். ஒன்று, 9:15 மணிக்கு ஒரு சிறுவனும், 9:30 மணிக்கு ஒரு ஆளும் கால் செய்ததாகச் சொல்லியிருக்கிறார். கால் செய்த அந்த ஆளுக்கு முப்பத்தைந்து வயது இருக்கலாமென்றும், ஆறடி உயரம் இருந்தானென்றும் சொல்லியிருக்கிறார். சேது கவனமாக எல்லா தகவல்களையும் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார்.

ஜீப் குழப்பமான, நெரிசலான தெருக்களில் ஆங்காங்கே நின்று குறிப்பிட்ட அட்ரஸைத் தோண்டித் துழாவி ஒரு வழியாக அந்த அட்ரஸில் போய் நின்றது. இருவரும் இறங்கி அந்த அபார்ட்மென்டை அவதானித்தனர். வெகு பணக்காரக் களையுடன் கூடிய அபார்ட்மென்ட். பெரும்பாலான வீடுகளில் மனித நடமாட்டமே தெரியவில்லை. ஆனால் எல்லா வீட்டு பால்கனியிலும் ஏதாவதொரு துணி கொடியில் காய்ந்துகொண்டிருந்தது. அபார்ட்மென்ட் வாசலில் ஒரு மாருதி சென் காரும், அதன் பக்கவாட்டில் இரண்டு பேரும் நின்றிருந்தனர். காரின் டிக்கி திறந்திருந்தது. அதனுள் ஒரு ஸ்டெப்னி இருப்பதும் கூடத் தெரிந்தது. முதலில் சுத்தமாக காற்றிறங்கிப் போயிருந்த முன் சக்கரத்தையே பார்த்தபடி தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தவர்கள் போலீஸ் ஜீப்பைப் பார்த்துவிட்டு சற்று கலவரமானார்கள் அந்த இருவரும்.

சேது முன்னே செல்ல சங்கர் பின்தொடர்ந்தார். தரைதளத்தில் 2 என்று எழுதப்பட்டிருந்த வீட்டின் காலிங்பெல் அழுத்தி காத்திருக்க, சிறிது நேரம் கழித்து ஒரு பெண் லேசாக கதவு திறந்து எட்டிப்பார்த்தார். காவல்துறை சீருடையில் இருவரைப் பார்த்ததும் அந்தப் பெண் வெகுவாக புருவம் சுருக்கினார்.

'மேடம், மாலதி நீங்கதானே. ஐ ஆம் சேது. இன்ஸ்பெக்டர். உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்'.

'எத பத்தி சார்?'.

'சத்தியமா என்னோட பாங்க் பாலன்ஸ் பத்தி இல்ல'.

அந்தப் பெண், கொஞ்சம் யோசித்துப் பின் கதவு திறந்தாள். சுடிதார் அணிந்திருந்தாள். நல்ல நிறமாய் இருந்தாள். உயரம் ஐந்தரை அடி இருக்கலாம். குழந்தை பெற்றவள் போல் தோன்றவில்லை. அவளின் வீடும்தான். அவளைப் பார்க்கையில் நகைகள் மீது ஆர்வமில்லாதவளோ என்று தோன்றியது. ஆனால், நன்றாய் சிங்காரித்துக்கொள்வாள் போலிருந்தது.

  இருவரும் உள்ளே நுழைந்தார்கள். வீடு, சிறியதாக ஆனால் அழகாக இருந்தது. ஹாலில் சுவருடன் ஒட்டிக்கொண்ட ஃப்ளாட்ரான் மானிட்டர், கறுப்பு நிறத்தில் சோபா, மரக்கதவிட்ட அலமாரி, பவர் ஹவுஸ், ஷோகேஸ், அதில் நிறைய அழகுப்பொருட்கள் இன்னும் என்னென்னவோ. அடையார் சிக்ஸ்த் சென்ஸில் காணப்படும் சில வீட்டு அலங்காரப்பொருட்கள் கூட இருந்தன. சுவற்றில் சுவர்க்கடிகாரம் மாலை ஐந்தரையைக் காட்டிக்கொண்டிருந்தது. விருந்தோம்பலில் அமர்வுக்கும், பரஸ்பரம், தண்ணீர் பரிமாறல்களுக்குப் பின், சேது ஆரம்பித்தார்.

'மாலதி, நீங்க பூஜ்யம் கம்பெனிலதானே வொர்க் பண்றீங்க?'.

'ஆமா சார்'.

'ஓகே. ஐ திங்க் நீங்க மேரீட். சரிதானே?'.

'ஆமா சார். அவர் பேரு ரமேஷ். ஒரு வேலையா பங்களூர் போயிருக்காரு. காலைல 8 மணிக்கு ஃப்ளைட் சார். ஸ்பைஸ்ஜெட் ஏர்வேஸ். அவரும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனிலதான் வொர்க் பண்றாரு'.

'ஓகே மாலதி.. எப்போ வருவார்?'.

'அவருக்கு நைட் 7 மணிக்கு ரிடர்ன் ஃப்ளைட் சார். எட்டரை மணிக்கு வீட்ல இருப்பாரு சார்'.

'ம்ம்.. வீக்கென்ட் ஆச்சே. என்ன வேலையா அவர் பங்களூர் போயிருக்காருன்னு சொல்லமுடியுமா?'.

'அவரு பாட்டுல்லாம் நல்லா பாடுவாரு. ரீசென்ட்டா ஒரு காம்படீஷன்ல கூட ஆயிரம் ரூபா கேஷ் ப்ரைஸ் வாங்கினாரு. அது விஷயமா யாரையோ பாக்கணும்னுதான் போயிருக்காரு. காலைல 8 மணிக்கு ஃப்ளைட்' என்றுவிட்டு நிறுத்தினார் மாலதி.

அவளுக்கு மிக அருகில், மரத்தாலான அலமாரி தென்பட்டது. மொத்தம் நான்கு கப்போர்டுகள். சறுக்கும் கண்ணாடியால் மூடப்பட்டிருந்தது. மேலிரண்டு கப்போர்டுகள் புத்தகங்களால் நிறைக்கப்பட்டிருக்க, மூன்றாவது கப்போர்டில் இரண்டு ஃபோட்டோக்கள் இருந்தன. ஒன்று அவர் பரிசு வாங்கிய சான்றிதழ் லேமினேட் செய்யப்பட்டிருந்தது. அதற்கு பக்கத்தில் இன்னொன்றில் அவர் கேஷ் ப்ரைஸான ஆயிரம் ரூபாயை இரண்டு கைகளாலும் பிடித்து உயர்த்திக் காண்பித்தபடி சிரித்து நின்றிருந்தார். பக்கத்திலேயே சுவற்றில் ஆணியில் தொங்கவிடப்பட்டு இரண்டு மலைகள் குவியும் இடத்தில், ஒரு ஆறு நேராகச் செல்வது போலொரு காட்சி மிக எளிமையாக இருந்தது மரச்சட்டங்களுக்குள்.

'ஓகே மாலதி. உங்களுக்கு கதிர தெரியுமா?'. வெடுக்கென்று கேட்டார் சேது. அவர் பார்வை, மாலதியின் கண்களை ஊடுருவிக்கொண்டிருந்தது.

மாலதி சட்டென துணுக்குற்றது போல் பார்வை திருப்பி அவரைப் பார்த்ததை இருவருமே கவனித்தனர். சங்கர் ஓரக்கண்ணால் தன்னைப் பார்ப்பதை அப்போதைக்கு அசூயையாக உர்ந்தவர் பதிலுக்குக் காத்திருந்தார் சேது.

'ஆங்.. ம்ம் தெரியும் சார். ஆபீஸுக்கு அவர் கேப்ல தான் போவேன் சார்' என்றுவிட்டு நிறுத்தினாள் மாலதி. அதற்கு மேல் அதுபற்றி அவள் வேறெதுவும் பேசத் தயாராக இல்லையென்பதாக இருந்தது அவளது தோரணை.

அவள் பட்டென்று அத்தோடு நிறுத்தியது பொசுக்கென்று பட்டது சங்கருக்கும், சேதுவுக்கும். முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்தார் சேது.

'ஓ கேப்லயா போவீங்க. உங்ககிட்ட கார் இல்லயா?'.

'இருக்கு சார். ஒரு சுவிஃப்ட் இருக்கு. ஆனா, சிட்டில டிரைவ் பண்றது ரிஸ்க்குன்னு நான் போறதில்ல சார். அவர்தான் எடுத்துட்டு போவாரு. இப்ப கூட கார் சர்வீஸ்க்கு விட்டிருக்கு. அதான் அவர் ஸ்பைஸ்ஜெட் ஃப்ளைட் புக் பண்ணிப் போயிருக்காரு'.

'ஓ மாருதி சர்வீஸ் ஸ்டேஷன்லயா?'.

'இல்ல சார். நாலு தெரு தள்ளி முருகன் கார் சரிவீஸ் சென்டர்ல தான் விட்டிருக்காரு சார். எப்பவுமே அங்கதான் விடுவாரு'.

'ஓ உங்க கார் நம்பர் என்னன்னு சொல்ல முடியுமா?'.

'TN 11 M 1980 சார்'

'ஓ..ஓகே .. ஒண்ணுமில்ல மாலதி. கதிரோட பாஸஞ்சர் பில்லுல சில பிரச்சனை இருக்கு. உங்களுக்கு அதனால ஏதும் பிரச்சினை ஏதுமில்ல. சொல்லிட்டுப் போலாம்னு தான் வந்தோம்' என்றுவிட்டு எழுந்துகொண்டார் சேது.

'ஓகே தாங்க்ஸ் சார்' என்றுவிட்டு அவள் வாயை மூடிக்கொண்டதில் அவள் அதிகம் வாயை விடவேண்டாமென எச்சரிக்கை உணர்வு கொண்டவளாகத் தோன்றியதை இருவருமே கவனமாக்க் குறிப்பெடுத்துக்கொண்டனர்.

சேதுவைத் தொடர்ந்து சங்கரும் எழுந்துகொள்ள, இருவரும் வெளியே நடந்து ஜீப்புக்கு வந்தனர்.

'சேது, இது நிச்சயம் பொம்பள மேட்டர்தான். கதிர் ஸ்கூல் ஃப்ரண்டுன்னு அவ காமிச்சுக்கவே இல்ல பாத்தீங்களா? நமக்குத் தெரியும்னு அவளுக்குத் தெரியல. டெலிஃபோன் பூத்ல கூட 9:30க்கு கால் பண்ணினது ஒரு ஆளு, ஆறடி உயரம்னு சொன்னார். அது கண்ணனாத்தான் இருக்கும். கண்டிப்பா இது கண்ணன் பண்ண கொலையாத்தான் இருக்கும் சேது'.

'ம்ம்.. வாங்க.. ஊர்ஜிதம் பண்ணிக்கலாம்.. முதல்ல அக்கம்பக்கத்துல விசாரிக்கலாம். கணவன்- மனைவி உறவு எவ்வளவு தூரம்ன்னு' என்ற சேது சங்கருடன் வெளியே வந்தார். அவர்களுக்குப் பின்னால் அந்தப் பெண் மாலதி வீட்டைத் தாழிடுவது தெரிந்தது. சேதுவும் சங்கரும் வெளியே அபார்ட்மென்ட் மெயின் கேட் வரை வர, அங்கு இப்போது அந்த மாருதி கார் மட்டும், டிக்கி திறந்த மேனிக்கு நின்றிருக்க, பக்கத்தில் நின்றிருந்த இருவரும் இப்போது இருக்கவில்லை. இரண்டு நிமிட இடைவெளி விட்டு, மீண்டும் சேது மாலதி வீட்டருகே சென்று முதல் தளம் செல்லும் படிக்கட்டுகளில் ஓசைப்படாமல் ஏற, பின்னாலேயே சங்கரும் தொடர்ந்தார் மெளனப் பூனையென. சேதுவுக்கு அந்தப் பெண் மாலதி கீ ஹோல் வழியே தாங்கள் இருவரும் வெளியே செல்வதை ஊர்ஜிதம் கொள்வாள் என்று தெரிந்திருந்தது.

இருவரும் நேராக முதல்தளம் சென்று வலதுபக்க வீட்டைத் தட்ட கீழே நின்றிருந்த அந்த இருவரில் ஒருவர் திறந்தார். முகத்தில் கேள்விக்குறியுடன். அவர் முகத்துக்கு நேரே வெளிப்புற சுவற்றில் சுப்பிரமணியன், ‍அபார்ட்மென்ட் செக்ரட்டரி என்று ஆங்கிலத்தில் தமிழிலும் எழுதியிருந்தது. உள்ளே ஒரு ஜமாவே இருந்தது. நான்கைந்து விடலைகள், அவர்களுள் சில பெண்கள், லேட் நாற்பதுகளில் ஒரு பெண். ஒவ்வொருவர் கையிலும் ஜிலேபியோ ஜாங்கிரியோ லட்டுவோ இருந்தது. ஏதோ ஒரு வெற்றியை வாழ்த்த வந்தவர்கள் போல் ஆரவாரமாய் குதூகலமாய் நின்றிருந்தனர்.

'சார், சொல்லுங்க சார்'.

'இன்ஸ்பெக்டர் சேது.. மார்னிங்.. இவரு சங்கர், சப் இன்ஸ்பெக்டர்'.

'ஐ ஆம் சுப்பு சார். நைஸ் மீட்டிங் யூ சார். வாங்க சார்'.

'மிஸ்டர் சுப்பு, இந்த அபார்ட்மென்ட்ல சமீபமா போன மூணு மாசத்துல ஏதாவது பிரச்சினை நடந்திச்சா? யாரோட லெட்டர்/ ரிஜிஸ்தர் தபால் ஏதாச்சும் நீங்க வாங்கி வச்சிருந்தீங்களா? பூட்டியிருக்குற வீட்டுக்குள்ள கேஸ் லீக் அப்டி இப்டின்னு ஏதாச்சும்...?'

'சார், அப்டில்லாம் ஏதும் இல்ல சார்.எல்லாரும் ரெஸ்பான்ஸிபிளா இருப்பாங்க சார். நோ கம்ப்ளெயின்ட்ஸ் சார். இன்ஃபாக்ட் ரொம்ப‌காம் பீபிள் சார், எக்சப்ட் மாலதி ரமேஷ் கபிள் சார்'.

'ஓ அவுங்க அடிக்கடி சண்ட போட்டுப்பாங்களா?'

'அடிக்கடின்னு சொல்ல முடியாது. ஆனா, ரெண்டு பேரும் வேலைக்குப் போறதால, பாத்துக்குறதே அபூர்வம் சார். ஒருத்தர் மாத்தி ஒருத்தர் எதையாவது ஆஃப் பண்ண மறந்துடுவாங்க. பாத்துக்குற நாளும் சண்டை போட்டுக்குவாங்க சார். என்ன ஏதுன்னு எங்களுக்குத் தெரியாது சார்'

அவர் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே மற்றவர்கள் தங்களுக்குள் குசுகுசுவென சிரிப்பும் கேலியுமாகப் பேசிக்கொண்டிருக்க இப்போது அவர் சம்பிரதாயமாய் சேதுவிடம்,

'சார், என் பையன் ஸ்கூல்ல நடந்த பெயின்டிங் காம்படீஷன்ல பரிசு வாங்கியிருக்கான் சார். இது அந்த சர்டிபிகேட் சார். அதான் சின்னதா ஒரு செலிப்ரேஷன். ஸ்வீட் எடுத்துக்கோங்க சார், டேய் ரகு இங்க வா... இவந்தான் சார் என் பையன்' என்றுவிட்டு சற்றே எட்ட இருந்த டைனிங் டேபிளில் இருந்த ஸ்வீட் பாக்ஸை வலதுகையிலும், இடது கையில் அந்த சர்டிபிகேட்டையும் நீட்டினார். அந்த சர்டிபிகேட்டில் ராஜலக்ஷ்மி மெட்ரிகுலேஷன் ஸ்கூல் என கொட்டை எழுத்தில் இருக்க, கீழேயே அட்ரஸ், ஃபோன் நம்பர், இத்தியாதி இத்தியாதி இருந்தன. இப்போது அவர் பக்கத்தில் அவரின் பையன் ரகு வந்து நின்றான். வயது 17 இருக்கலாம். ஐந்தரை அடி உயரம். நல்ல நிறம். ஜீன்ஸ் பாண்ட், டிசர்ட் என ஸ்டைலாக இருந்தான்.

'ஓ கங்க்ராட்ஸ், பையன் பெயின்டிங்லாம் பண்ணுவாரா..குட் குட்.. ?' என்றுகொண்டே ஸ்வீட்பாக்ஸிலிருந்து லட்டு ஒன்றை எடுத்து வாயில்போட்டுக்கொள்ள‌, சங்கரும் தன் பங்குக்கு ஒரு லட்டை சுவீகரித்தார்.

'ஆமா சார், இதோ பாருங்களேன்' என்றுவிட்டு கையிலிருந்தவற்றை டைனிங் மேஜையில் வைத்துவிட்டு அதே டைனிங் டேபிளில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த சார்ட் பேப்பர்கள் சிலவற்றை விரித்துக் காண்பிக்க, வாட்டர்கலரிங்கில் பூக்களும், பூனைகளுக்கும் மத்தியில் பாதி தெரியும் வகையில் பெண்ணின் முகம் ஒன்றிலும், இன்னொன்றில் பாலைவனத்தின் ஒற்றை மரத்தில், ஒரு பறவையின் நிழலில் ஒரு பெண்ணின் முகமுமாக இருந்தது. இவ்வகை விடலைப் பையன்கள் ஒரு தினுசு. இவர்களின் ஓவியங்களில் பெண் முகங்கள் இருக்கும். கேட்டால் மேஜிக்கல் ரியலிசம், முந்திரிபாயாசம் என்று வகைவகையாக டயலாக் விடுவர்.

'ஓகே கீழே நிக்கிதே அது உங்க சென் காரா? என்ன ப்ராப்ளம்? பங்க்ச்சரா?'.

'ஆமா சார், பங்க்ச்சர் சார். ஸ்டெப்னி இருக்கு. ஆனா, ஜாக்கி டிக்கிலதான் இருந்தது. அத காணல சார். போன தடவை மெக்கானிக் ஷாப்ல சர்வீஸ் விட்டப்போ மிஸ் ஆயிடிச்சோன்னு தெரியல சார்'.

'ஓ.. ஓகே ஓகே.. கேரி ஆன் சுப்பு.. நாங்க வரோம்'.

'ஓகே சார்' என்றுவிட்டு அவர் சிரித்து வழியனுப்ப இருவருமாய் வெளியே வந்தார்கள்.

சேது சங்கருடன் நேராக முருகன் கார் சர்வீஸ் சென்டர் சென்று அதே சுவிஃப்ட் கார் சர்வீஸில் இருப்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டார். அதே நேரம் சங்கர் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு போன் செய்து ஸ்பைஸ்ஜெட் ஃப்ளைட்டின் பாஸஞ்சர் மானிஃபெஸ்டில் ரமேஷ் என்ற பெயரில் ஒருவர் ஃப்ளைட் போர்ட் செய்துவிட்டதை ஊர்ஜிதம் செய்துகொண்டார். சேது மணி பார்த்துக்கொண்டார். மணி மாலை ஐந்தைத் தாண்டியிருந்தது. தானோ, சங்கரோ அதுவரை மதிய சாப்பாடு சாப்பிடவே இல்லையென்பது நினைவுக்கு வந்தது. ஜீப் சேதுவையும், சங்கரையும் ஏற்றிக்கொண்டு கொலை நடந்த ஈ.சி.ஆர். ரோட்டிற்கு விரைந்துகொண்டிருந்தது.

'நீங்க என்ன நினைக்கிறீங்க சங்கர்?'

'சேது, இட்ஸ் க்ளீன் நவ். கதிரோட டைரில மாலுன்னு போட்டிருக்கு. அது மாலதியாதான் இருக்கணும். மாலதி மேல அவனுக்கு பால்ய காதல் இருந்திருக்கும். கண்ணனுக்கு அவ மேல ஒரு கண்ணு இருந்திருக்கலாம். மாலதிக்கும், அவ புருஷனுக்கும் சண்டைகள் இருந்தாலும் இந்தக் கேஸைப் பொறுத்தவரை ரமேஷ் காலைலயே பங்களூர் போயிட்டார். ஃப்ளைட் போர்ட் பண்ணிட்டதா ஏர்போர்ட்ல கன்ஃபர்ம் கூட பண்ணிட்டாங்க. கதிர் நம்பருக்கு 9:30 க்கு கால் வந்திருக்கு. 9:30 க்கு கால் பண்ணினவன் ஒரு ஆளுன்னு அந்தக் கடைக்காரன் சொன்னது கண்ணனாகத்தான் இருக்கணும் சேது. சோ, கண்ணன் தான் கொன்னிருக்கணும் சேது'.

'ஒரு வேளை, இத மாலதிக்கு வேண்டப்பட்டவங்க‌பண்ணியிருந்தா?'.

'யாரு ரமேஷா!! அதெப்படி காலைல 8 மணி ஃப்ளைட்டுக்கு பங்களூர் போனவன் 9:30 மணிக்கு கால் பண்ண முடியும், கொலை பண்ண முடியும் சேது?'

சேது பதிலேதும் பேசாமலிருந்தார். அவர் சிந்தனையில் ஆழ்ந்திருப்பதாகத் தோன்றியது. சிறிது நேரங்கழித்து சேது தன்னுடைய மொபைலை பாக்கேட்டிலிருந்து எடுத்து ஏதோ ஒரு நம்பரைச் சுட்டி, காதில் பொறுத்திக்கொண்டார்.

'ஹலோ, நான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது பேசறேன். ஒரு இன்வெஸ்டிகேஷனுக்காக....'

சங்கர் தனக்கு தீவிரமாக பசிப்பதை உணர்ந்துகொண்டவராய் ஒருவித ஆயாசத்துடன் அமர்ந்திருந்தவாக்கில் முறுவலித்தார். அவருக்குக் காது அடைப்பதைப் போலிருந்தது. அவ்வப்போது வந்த கொட்டாவிகள் மேலும் காதுகளை செவிடாக்கின. சேது ஃபோனில் பேசிக்கொண்டிருந்த சில வார்த்தைகள் காதிலேயே விழாதது பசியால்தானோ என்று நினைத்துக்கொண்டார். தான் உணர்வது போல் சேதுவும் பசியை உணர்ந்திருப்பாரா என்று நினைக்கத்தோன்றியது. ஆசை புலன்களை வெல்கிறது. பசி புலன்களை அடைக்கிறது. விசித்திரமான உணர்வுகளுக்குப் புலன்கள் வெறும் பகடைக்காய் ஆகின்றன. சங்கருக்கு சட்டென ஏதோவொரு சர்சின் பாதிரியாராகிவிட்ட உணர்வு மேலிட்டது.

சேது காதுக்குக் கொடுத்திருந்த போனை எடுத்து சட்டைப்பையில் போட்டுக்கொள்வது தெரிந்தது.

'சேது, கண்ணன்தான் கொலை பண்ணீயிருக்கான். மாலதிய ஒரு தலையா கண்ணன் லவ் பண்ணிருக்கான். ஆனா, மாலதி கதிர பத்தி சொல்லாம விட்டத பாத்தா அவளுக்கும் கதிர் மேல கண் இருந்திருக்கலாம். அவன் தான் காலைல கதிர கடைசியா பாத்திருக்கான். ரமேஷ் சென்னைலயே இல்ல. கதிர கொலை பண்ணனும்ற மோட்டிவ் வேற யாருக்கும் இல்ல. டீசல் பங்க் வரைக்கும் டோப் பண்ணிருக்கான். தன்னோட மொபைல்ல கூப்பிட்டா எவிடென்ஸ் ஆயிடுமோன்னு லோக்கல் பி.சி.ஓலேர்ந்து கூப்பிட்டிருக்கான். 18 கிலோ மீட்டர் தனியா கூட்டிட்டுப் போயி கொலை பண்ணிருக்கான். சிம்பிள். நமக்குத் தெரியவேண்டியது, கதிர் மாதிரி கண்ணனுக்கும் மாலதி மேல லவ்வான்னு தெரியணும் அவ்ளோதான். லாக்கப்ல வச்சி நாலு தட்டு தட்டினா அதை அவனே சொல்லிடுவான் சேது. எல்லாமே சரியாதான் இருக்கு சேது'.

'ம்ம்... ஆமா சங்கர். எல்லாமே சரியாதான் இருக்கு. ஆனா, ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. அத தான் க்ளியர் பண்ணிக்க ட்ரை பண்றேன் சங்கர்' என்றார் சேது.

'அது என்ன மேட்டர் சேது?'.

'ஆங்..அதுவா... அது...' என்று சேது ஏதோ சொல்ல வாயெடுக்கும்போதே, மீண்டும் அவரது தொலைபேசி மணியடிக்க, மொபைலை எடுத்துக் காதுக்குக் கொடுத்தார் சேது.

'ஹலோ ..சேது ஸ்பீக்கிங்.. ஆங்.. ம்.. ஓகே ஓகே குட்... தாங்க்ஸ் ஓகே ஓகே' என்றுவிட்டு போனை வைத்துவிட்டு திரும்பி டிரைவரிடம் சொல்லி ஜீப்பை மீண்டும் மாலதி வீட்டுக்கு திருப்பச்சொல்ல, ஜீப் அடுத்து வந்த ஒரு வளைவில், ஒரு அரைவட்டம் அடித்துத் திரும்பி மாலதி வீட்டை நோக்கி விரைந்தது.

மாலதி வீட்டை நோக்கி போகச் சொல்லும் சேதுவைப் புரியாமல் சங்கர் ஏதோ கேட்க எத்தனித்து

'சேது, என்னாச்சு... மாலதி வீட்டுக்கு ஏன் போறோம்?' என்று கேட்க‌,

'அங்க வந்து பாருங்க ..தெரியும்... ' என்று சேது சொல்லிக் கொண்டிருக்கையிலேயே ஜீப் மாலதி வீடு இருந்த தெருவுக்குள் நுழைந்து வீட்டின் முன் நின்றது. அவர் முகம் இப்போது தெளிவாக இருப்பதாகத் தோன்றியது சங்கருக்கு. ஆனால், காரணம் புரியவில்லை.

ஜீப்பிலிருந்து மிடுக்காய் சேது இறங்க, பின்னாலேயே சங்கரும் இறங்க, இருவரும் மாலதி வீட்டுக்கதவை நெருங்கினார்கள். சேது மாலதி வீட்டுக்கதவின் காலிங்பெல்லை அழுத்தாமல் நேராக மாடிப்படி ஏறி முதல் தளம் செல்ல, சங்கர் ஏதும் புரியாமல் சேதுவைப் பின் தொடர்ந்தார். சேது நேராக சுப்புவின் வீட்டிற்கு சென்று காலிங் பெல் அழுத்த, சுப்பு கதவைத் திறந்தார்.

'சார், சொல்லுங்க சார்.. எதாச்சும் மறந்து வச்சிட்டுப் போயிட்டீங்களா?'.

'நோ சுப்பு, உங்க பையன கொஞ்சம் கூப்பிடறீங்களா? அவர்கிட்ட கேக்க சில கேள்விகள் இருக்கு. பதில் தெரிஞ்சா உபயோகமா இருக்கும்'.

சுப்பு என்ன என்பதாய் ஆச்சர்யமா அதிர்ச்சியா என்று தோன்றாத வகைக்குப் பார்த்துவிட்டு உள்ளே திரும்பி, ரகுவைக்கூப்பிட, உள் ரூமிலிருந்து வெளியே வந்தான் ரகு. வீட்டில் இப்போது அத்தனை ஆரவாரமிருக்கவில்லை. கலைந்து கிடந்தவற்றை ஒதுங்க வைத்துக்கொண்டிருக்கும் தோரணை தெரிந்தது.

'ரகு, உன்னோட ஸ்கூல் பேக்க கொஞ்சம் கொண்டு வாயேன். நான் பாக்கணும்'.

'ஓகே அங்கிள்' என்றவன் முகத்தில் பீதி மெல்ல அப்பிக்கொள்ள, டைனிங் டேபிளுக்கு அருகாமையில் பால்கனியை ஒட்டி வைத்திருந்த பேக்கை எடுத்து நீட்டினான்.

'அங்கிள் ..இதான் அங்கிள் என் பேக்' அவன் குரலில் பதட்டம் கூடியிருந்தது. முகம் மெல்ல மாறத் துவங்கியிருந்தது. பேக்கை வாங்கிப் பிரித்துப் பார்த்த சேது வார்த்தைகளில் அதிகம் கடினம் கூட்டியவராய் உருமத் துவங்கினார்.

'இன்னிக்கு ஸ்கூலுக்கு எத்தனை மணிக்கு போன ரகு?'.

'ச..சார்..அ..அது..வவந்து.. காலைல எட்டரைக்கு சார்'. என்றவனுக்கு விரைந்து ஓடும் மின்விசிறியைத் தாண்டி வியர்க்கத் துவங்கியிருந்தது. ரகு பதறுவது குறித்து அதிகம் கவலைப்பட்டவராய் இடைமறித்தார் சுப்பு.

'சார், அவன் காலைல 8 மணிக்கே ஸ்கூல் கிளம்பிட்டான் சார். நீங்க அப்டில்லா...' என்றவரை இடைமறித்தார் சேது.

'பொய், நீ பதினொன்றரைக்குத் தான் போயிருக்க. லேட்டா போனதுக்கு ஃபைன் கட்டியிருக்க. கொஞ்சம் முன்னாடி உன் ஸ்கூல்ல விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டேன். கீழ்வீட்டு மாலதி ரெகுலரா கேப்ல போறது உனக்குத் தெரிஞ்சிருக்கு. மாலதி மேல ஒரு கண் உனக்கு. அதுக்கு சாட்சி மாலதிக்கு இருக்குற அதே கன்னக்குழி உன் பெயின்டிங் எல்லாத்துலயும் இருக்கு. மாலதி வீட்ல இருக்குற பெயிண்டிங்க‌மேலோட்ட‌மா பாத்தா ஒரு இய‌ற்கைக் காட்சி. ஆனா, அதுல‌ம‌லைக‌ளைவ‌ச்சி இத‌ய‌மும், ஆத்தை வ‌ச்சி அம்புமா இத‌ய‌த்தை குத்தாதேங்கறா மாதிரி காட்சி வ‌ச்சிருக்க‌. அது உன்னோட‌பெயிண்டிங்னு கீழே ர‌குன்னு உன் கையெழுத்து வேற‌. மாலதியும் கதிரும் பால்ய காதலர்கள்ங்குறது உனக்கு மாலதி மூலமா தெரிஞ்சிருக்கு. அவுங்க பழக்கம் இப்பவும் தொடர்றது உனக்கு புடிக்கல. மாலதிகிட்ட நீ சொல்லிருக்கலாம். அவ கேக்காம இருந்திருக்கணும். உங்க வீட்டு கார்ல இருந்த ஜாக்கிய பேக்ல மறைச்சி எடுத்துட்டு போயிருக்க. அதுக்கு சாட்சி துருப்புடிச்ச இரும்பு உன் பேக்ல ஒட்டியிருக்கு. கதிர் கேப் ஒரு லோக்கல் பி.சி.ஓலேர்ந்து 9:30 க்கு கால் பண்ணி வரவழைச்சி கோயிலுக்குப் போகணும்னு சொல்லிட்டு போயி அங்க இந்த ஜாக்கியால அடிச்சி கொன்னிருக்க. நீ கால் பண்ணினதுக்கு சாட்சி அந்த பி.சி.ஓ கடைக்காரன். அவன் கடிகாரம் 15 நிமிஷம் ஸ்லோ. அவன்கிட்ட விசாரிச்சாச்சு. 9:15 க்கு ஒரு ஸ்கூல் பையன் பண்ணினதா சொன்ன கால் உண்மைல 9:30க்கு. அத பண்ணினது நீ. அப்புறம் எதுவும் நடக்காதது மாதிரி ஸ்கூலுக்கு பதினொன்றரைக்கு போயிருக்க‌' சொல்லிவிட்டு சேது நிறுத்த, சேதுவையே திகைத்துப் பார்த்துக்கொண்டிருந்த ரகு மெளனம் கலைத்துக் குலுங்கிக் குலுங்கி அழத்துவங்கினான். அவன் அழுவதைப் பார்த்து அதிர்ச்சியில் சிலையாகி நின்றார் சுப்பு.

முற்றும்

#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6133)

Monday, 3 December 2012

இன்னொரு பெண் - சிறுகதை


இன்னொரு பெண் - சிறுகதை

தேனாம்பேட்டை சிக்னலை மஞ்சளில் அவசரமாய்க் கடந்து போய்க்கொண்டிருந்த அந்த ஹோண்டா ஜாஸின் பின் இருக்கையில் இருப்புகொள்ளாமல் அமர்ந்திருந்தாள் ஈஸ்வரி. தி நகர் பஸ் ஸ்டாண்டை ஒட்டி இருந்தது அவளது க்ளினிக். பதினொரு மணியிலிருந்து ஏகத்துக்கு குழுமிவிட்ட பெண் நோயாளிகளுக்கெல்லாம் டோக்கன் கொடுத்து மாய்ந்துவிட்டு கிட்டத்தட்ட நான்காவது முறையாக நர்ஸ் பரிமளா செல்போனில் கூப்பிட்டுவிட்டாள். எப்போதும் நேரத்துக்கு க்ளினிக் போய் விடுபவள், சொர்ணாவின் திருமண விவகாரத்தில், தரகரிடம் பெற்றிருந்த சில மணமகன்களின் ஜாதகங்களுக்கு மேட்ச்சிங் பார்த்தவகையில் அன்று மிகவும் தாமதமாகிவிட்டிருந்தது.

ஈஸ்வரிக்கு வயது 33. ஏற்கனவே 3 பெண்கள் ஜனித்துவிட்ட குடும்பத்தில் 4 ஆண் வாரிசுகளுக்கும் பிறகு எட்டாவதாய் பிறந்தவள் ஈஸ்வரி. அமெரிக்காவில் ஆர்த்தோவில் மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் ராகவனுடன் திருமணமாகி மூன்றாண்டு ஆகிறது ஈஸ்வரிக்கு. ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறாள். சொர்ணா, ஈஸ்வரியின் மூத்த அக்காள் பரமேஸ்வரியின் ஒரே பெண். இரண்டு வருடங்களுக்கு முன் பரமேஸ்வரி கான்சரில் மரணித்ததில் சொர்ணா ஈஸ்வரியின் பெறாத பெண்ணாகிவிட்டிருந்தாள். வயது 27. அவளின் திருமணத்திற்குத்தான் காலை 7 மணி துவங்கி இத்தனை நேரத்துக்குப் பிரயத்தனம். சொர்ணா பெயருக்கேற்றாற்போல் சொர்ணம். அழகு மயில். ஐந்தரை அடி உயரம். மஞ்சள் நிறம். நுனி முடியை விரல்களால் சுழற்றிக்கொண்டே அவள் சிரித்தால் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இன்ஜினீயரிங் படித்தவள். பரதம் பயின்றவள். இரண்டொரு மேடைகளில் அரங்கேற்றம் கூட செய்திருக்கிறாள். வேலை வேண்டாம் என்றதும் மறுபேச்சு பேசாமல் வீட்டில் அமர்ந்தவள். குடும்பக் குத்துவிளக்கு. பாரம்பரியத்தின் எதிர்காலம்.

நான்கு மணி நேரம் ஜாதகருடன் மல்லுகட்டியதில் 5 வருடம் படித்த மருத்துவம் மறந்துவிடும் போலிருந்தது. ஒரு இழவும் புரியவில்லை. ஏதேதோ ஏகத்துக்கும் கணக்கு போட்டார். கூட்டினார். கழித்தார். பெருக்கினார். இறுதியில் கொண்டு போன நான்கு பிள்ளைகளின் ஜாதகத்திற்கும் உதட்டைப் பிதுக்கிவிட்டார். இப்படி இவர் பிதுக்குவது இதோடு 28வது ஜாதகம். வெறுப்பாக இருந்தது. சொர்ணாவுக்கு வயது வேறு ஏறிக்கொண்டே இருந்தது. ஏதோ ராகு தோஷமாம். அதே போன்றதொரு ஜாதகத்துடன்தான் பொருத்த வேண்டுமாம். ஜாதகங்கள் இத்தனை வெறுப்பேற்றும் என்பது தெரிந்திருக்கவில்லை. அவள், மற்றும் அண்ணன்கள் , அக்காள்கள் திருமணத்திற்கெல்லாம் ஓடியாடி வேலை பார்த்தது ஈஸ்வரியின் அப்பாதான். ஆனால் ஜாதகம் என்று போனதாக நினைவில்லை. ராகவன் வீட்டில் ரொம்பப் பார்ப்பார்கள்.

நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருக்கையிலேயே, க்ளினிக் வந்துவிட்டிருந்தது. அவ‌ச‌ர‌மாக‌சொர்ணாவிற்கு போன் செய்து ம‌திய‌ம் 1 ம‌ணிக்கு க்ளினிக் வ‌ந்து ம‌ண‌மக‌ன்க‌ள் ப்ரொஃபைல்ஸ் எல்லாவ‌ற்றையும் வாங்கிப்போக‌வ‌ர‌ச்சொல்லிவிட்டு கோப்புக்களை பின்னிருக்கையிலேயே வைத்துவிட்டு கைப்பையுடன் காரைவிட்டிறங்கி உள் நுழைந்தாள். இறங்குகையிலேயே கவனித்தாள். சலசலவென இருந்த க்ளினிக் கொஞ்சமாய் பரபரப்படைந்தது. ஒரு மூலையில் சின்னதாய் ஒரு க்யூ உருவானது. சிலர் வரிசையில் நிற்க விரைந்தார்கள். ஒரு சிலர், நான் சீட் போட்ட இடம் என்பதாய் முறைத்ததைக் கவனிக்க முடிந்தது. பரிமளா கிட்டத்தட்ட கும்பிட்டே விட்டாள். சமாளிக்க மிகவும் கஷ்டப்பட்டிருப்பாள் போல‌. பரிமளாவிடம் நோயாளிகளை வரச்சொல்லிவிட்டு இருக்கையில் அமர, பின்னாலேயே உள்ளே நுழைந்தார்கள் அவர்கள்.

ஒருவ‌ரும் ஒருத்தியும். கூடவே வத்தலாய் ஒருவன். எதிர் இருக்கையில் அமர்கையில் பொருத்தமாக இருந்தார்கள். இருவருமே மாநிறம். ஓரளவிற்கு இடைவெளியுடன் உயரமாக இருந்தனர். நீண்ட கேசத்துடன் அவள் அழகாக இருந்தாள். இருந்தாலும் நுனி முடி சுழற்றி அழகாக சிரிக்கும் சொர்ணாவின் அழகிற்கு ஈடில்லைதான் என்று நினைத்துக்கொண்டாள். அவ‌ள் வயிறு லேசாக மேடிட்டிருந்தது. புடவைத் தலைப்பை கழுத்தைச் சுற்றி முழுவதுமாய் மூடி அமர்ந்திருந்தது சற்று வித்தியாசமாய் இருந்தது. அவர்தான் தொடங்கிவைத்தார்.

"டாக்டர், பிஎன்டிடிக்கு வந்திருக்கோம்?"

மேஜைமேலிருந்த காலி ப்ரிஸ்க்ரிப்ஷ‌ன் சீட்டில் நோயாளியின் பெயர் என்று மஞ்சுளா பார்த்தசாரதி என்றிருந்ததைக் குறித்துக்கொண்டாள் ஈஸ்வரி. பக்கத்திலேயே நுனி கேசத்தை சுழற்றியவாறே லேசாக சிரித்தபடி சொர்ணாவின் புகைப்படம் அந்த நாளுக்கே போதுமென்பதாய் இருந்தது..

"ஓ, ப்ரிநேட்டல் டயாக்னாஸ்டிக் டெஸ்ட்!!.... சாரி, அது செய்யறதில்லீங்களே. ரூல்ஸ்."

"தெரியும். ஆனா, இது வேற. ரொம்ப முக்கியம். குழந்தை ஆணா பெண்ணான்னு கண்டிப்பா தெரிஞ்சே ஆகணும் மேடம்".

"ஏன் சார், தெரிஞ்சி என்ன பண்ணப்போறீங்க?"

"சொன்னா உங்களுக்குப் புரியாது மேடம்."

"சொல்லுங்களேன், புரிஞ்சிக்க முயற்சி பண்றேன்.".

"மேடம், அது வந்து..."

"தயங்காம சொல்லுங்க சார். டாக்டர் கிட்ட எதையும் மறைக்கக்கூடாது".

"மேடம், பெண் குழந்தைன்னா ...அது வந்து..."

"என்ன சார் பேசுறீங்க, அதுவும் இந்தக் காலத்துல. நீங்கள்லாம் படிச்சவங்கதானே. நீங்களே இப்படிப் பேசலாமா?".

"மேடம், அது வந்து... எனக்கு ஆண்பிள்ளைதான்னு .... ஜோஸ்யம்... இது.. பரம்பரையா எங்க வீட்டுல... அதாவது, நான் என்ன சொல்ல வரேன்னா... இது.. ப்ளீஸ், உதவி பண்ணுங்க."

இப்போது பக்கத்தில் அவர் மனைவி, இடது பக்கம் இடது கையை நெற்றிக்கு முட்டுக்கொடுத்து "ஆரம்பிச்சாச்சா" என்பதுபோல சாய்ந்தாள். பின்னால் நின்றிருந்த பையன், இது எதிலும் தொடர்பில்லாமல் கையிலிருந்த மொபைலில் எதையோ ஆர்வமாய் தட்டிக்கொண்டிருந்தான். ம‌ஞ்சுளா அவ்வ‌ப்போது பெண்மைக்கே உரிய‌ஓர‌க்க‌ண் பார்வைக‌ளால் அந்த‌வ‌த்த‌லை நோட்ட‌ம் விடுவ‌தும், புட‌வைத் த‌லைப்பை இன்னும் இன்னும் இறுக்குவ‌துமாக‌இருப்பதைக் கவனித்துக்கொண்டாள் ஈஸ்வரி..

"நீங்க நினைக்கிறாமாதிரில்லாம் இல்ல சார், ஏன் எதிர்மறையா பேசுறீங்க. சரி, நீங்க கொஞ்ச நேரம் வெளில இருங்க. உங்க மனைவிய செக்கப் பண்ணனும் முதல்ல.".

அவர் ஏதும் சொல்லாமல் எழுந்துகொண்டார். மெளனமாய் கடந்து வெளியேறினார். ஏதோ யோசனையுடன் வெளியேறியது போலிருந்தது. கீ கொடுத்த பொம்மைபோல அந்த வ‌த்த‌லும் வெளியேறினான். மொபைலிலிருந்து கண்களை அகற்றாமல். அவர்க‌ள் வெளியேறவே காத்திருந்தது போல, கழுத்தைச் சுற்றியிருந்த புடவைத்தலைப்பிலிருந்து கழுத்தையும், தோல்களையும் விடுவித்துவிட்டு சற்றே நீண்ட‌பெருமூச்சை விடுத்தாள். புடவையில் சொர்ணா நுனி கேசத்தை சுழற்றுவதான காட்சி நினைவுக்கு வந்தது ஈஸ்வரிக்கு.

"மேடம், அவரு ஒரு மாதிரி"

"ஒரு மாதிரின்னா?.."

"....................."

"சரி, கூட அந்தப் பையன் யாரு".

"அவனா, ... அவரோட தம்பி".

கட்டின கணவனின் தம்பி, "அவனா"?. அப்படியானால், அவனா அவன்!!?. ஈஸ்வரிக்குப் புரிந்துவிட்டது.

"மேடம், எனக்கு குழந்தை வேணும். நீங்க வேணும்னா பிஎன்டிடி பண்ணியாச்சு. ஆண்பிள்ளைதான் பிறக்கும்னு அவர்கிட்ட சொல்லிடுங்களேன்."

"இல்ல இல்ல. யாரு கண்டது? உங்களோடது உண்மையாவே ஆண் பிள்ளையா இருக்கலாம். ஆனா பிஎன்டிடி பண்ண முடியாது. ரூல்ஸ். பிஎன்டிடி பண்ணாமயே பண்ணதா பொய் சொல்றது ஏமாத்துவேலை. பொய் ஏன் சொல்லணும். பெண் குழந்தைன்னா கூடாதா? எல்லா பெண்ணையும் அழிச்சிட்டா அப்புறம் ஏது உலகம்? நான் அவர்கிட்ட பேசுறேன். நீங்க போயிட்டு அவர மட்டும் வரச் சொல்லுங்க".

"ம்ம்.. சரி.. நீங்க அவர்கிட்ட பேசுறப்போ நானும் இருக்கேனே. இல்லேன்னா அவன்.... " மீதியை விழுங்கினாள் ம‌ஞ்சுளா.

"ம்ம்.. புரியிது.‌"

அவர் மட்டும் வந்தார்.

"சொல்லுங்க‌சார், இப்ப‌நான் என்ன‌ப‌ண்ண‌னும்?"

"மேட‌ம், நான் சொன்ன‌து மாதிரி பிஎன்டிடி ப‌ண்ணி, ஆணா, பொண்ணான்னு சொல்லிட்டீங்க‌ன்னா ரொம்ப‌உத‌வியா இருக்கும். எவ்ளோ ப‌ண‌ம் வேணா...."

"ப‌ண‌த்தை விடுங்க‌சார். ஆண் பிள்ளைனா என்ன பண்ணுவீங்க? பெண் பிள்ளைனா என்ன பண்ணுவீங்க?"

"ஆண் பிள்ளைனா பெத்துக்குவோம். பெண் பிள்ளைனா வேண்டாம் மேடம்."

"இது தப்பில்லையா?"

"இதுல என்ன தப்பு மேடம். எங்களோட பிள்ளை. பெத்துக்குறதா வேணாமான்னு நாங்கதானே முடிவு பண்ணனும்?"

"பெண் குழ‌ந்தைன்னா ஏன் இத்த‌னை வெறுப்பு உங்க‌ளுக்கு? உங்க‌ளைப் பெத்த‌து ஒரு பெண் இல்லையா?".

"மேட‌ம், சொல்லிப் புரிய‌வைக்கிற‌து க‌ஷ்ட‌ம் மேட‌ம்.. நீங்க‌த‌ய‌வுசெய்து..."

"சார், பெண் குழ‌ந்தைக‌ள்தான் சாசுவ‌த‌ம். உங்க‌ளுக்கு நான் சொல்லிப் புரிய‌வைக்க‌வேண்டிய‌தில்லை. ஆம்ப‌ளை ப‌ச‌ங்க‌ள‌தான் ந‌ம்ப‌முடிய‌ற‌தில்லை. ஆனா பெண்க‌ள் அப்ப‌டி இல்லை. என‌க்கும் ஒரு பெண் இருக்கா. அக்கா பொண்ணு. 27 வ‌ய‌சு ஆகுது. எங்க‌ஜாதியில‌ந‌ல்லா ப‌டிச்சு, ல‌ட்ச‌ல‌ட்ச‌மா ச‌ம்பாதிக்கிற‌அழ‌கான‌ப‌ச‌ங்க‌நிறைய‌இருக்காங்க‌. ஆனாலும் எங்க‌பொண்ணு காத‌ல் கீத‌ல்ன்னு எதுவும் இல்ல‌. நாங்க‌தான் மாப்பிள்ளை பாக்குறோம்ன்னா பாத்துக்கோங்க. அவ்ளோ முதிர்ச்சி. பெத்தவங்க கூட அத்தனை பாசம். நம்பிக்கை.‌"

சொல்லிக்கொண்டிருக்கையிலேயே ஏதோ நினைவுக்கு வந்தவளாய் மணிக்கட்டை திருப்பி மணி பார்த்தாள். மதியம் 1:30 என்றது. காரை விட்டிறங்கும் முன் சொர்ணாவிடம் க்ளினிக் வரசொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. கைப்பையிலிருந்த செல்பேசியில் சொர்ணாவை அழைக்க, அது காத்திருப்பில் நின்றது வினோதமாக இருந்தது. எதிரிலிருந்த பார்த்தசாரதியின் பின்னால், அறைக்கதவின் கண்ணாடி ஜன்னலுக்கு அந்தப் பக்கம் அந்த வத்தல் அவனின் வலது கை விரல்களால் த‌ன் நீள்கேசத்தைக் சுழற்றியபடியே இடதுகையால் செல்பேசியில் கதைத்துக்கொண்டிருந்தான். பார்த்தசாரதி சொல்லிக்கொண்டிருந்தார்.

"மேடம், மறுபடி மறுபடி சொன்னதையே சொல்றேன்னு நினைக்காதீங்க. சொல்லிப் புரிய வைக்கிறது கஷ்டம். பொண்ணுன்னா...."

ஈஸ்வரிக்கு இதற்கு மேல் பார்த்தசாரதி சொன்ன எதுவும் காதில் விழவில்லை.

#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=6118)

Saturday, 1 December 2012

கவிஞர் மனுஷ்யப்புத்திரன் அவர்களுடன் ஒரு சந்திப்பு


கவிஞர் மனுஷ்யப்புத்திரன் அவர்களுடன் ஒரு சந்திப்பு


சென்னையில் 2013 ம் வருடத்தின் புத்தகக் கண்காட்சிக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது, இந்த‌ வருடம் நடந்த புத்தகக் கண்காட்சியின் நினைவுகள் நியாபகத்திற்கு வருகின்றன...

ஜனவரி (2012) 5ம் திகதி துவங்கி 17ம் திகதி வரை நடைபெற்ற 35 வது புத்தகக்கண்காட்சியில், உயிர்மை ஸ்டாலில் நண்பர் இளங்கோவுடன் நின்று கொண்டிருந்தேன். ஸ்டால் வாசலில், கவிஞரும், எழுத்தாளரும், உயிர்மை ஆசிரியரும், ஊடகவியலாலரும், உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளரும்... (ஷ்ஷப்பா... இவர் செய்திருப்பதை எழுத ஆரம்பித்தாலே தனியாக அதற்கொரு கட்டுரை எழுத வேண்டும் போல் இருப்பதால் எளிமையாக கவிஞர் மனுஷ்யப்புத்திரன் என்றே விளிக்கிறேன்.. ;)) கவிஞர் மனுஷ்யப்புத்திரனிடம் பலர் கையழுத்து வேட்டை நடத்திக்கொண்டிருந்தார்கள்.. என்னதான் உயிர்மையின் உயிரோசையில் என் ஆக்கங்கள் வெளிவந்திருந்தாலும், அவருக்கு என்னை நினைவிருக்குமோ என்கிற ஐயப்பாடு முதலிலிருந்தே இருந்தது.

பிற்பாடு நானும் இளங்கோவும் அவரை சந்தித்தோம். 'சார், என் பெயர் ராம்ப்ரசாத். உயிரோசையில் எழுதுகிறேன்' எனும்போதே என்னை அடையாளம் கண்டுகொண்டார். 'கவிதைகள், த்ரில்லர், சஸ்பென்ஸ், காதல் கதைகள்னு வெரைட்டியாக நன்றாக‌ எழுதுகிறீர்கள்..' என்றார். 'ஒரு நல்ல எழுத்தாளன் எல்லாவகையான எழுத்தும் எழுத வேண்டும்' என்றும் பேச்சினூடே சொன்னார்.

நான் எழுத‌த்துவ‌ங்கிய‌து 2009 ன் துவ‌க்க‌த்தில். ஒவ்வொரு இத‌ழுக்கும் ஆக்கங்களை அனுப்புவ‌து என்ப‌தே எனக்கு மிகச் சிர‌ம‌மான‌ காரியமாக இருந்தது. இதுவ‌ரை வேறெங்கிலும் வெளிவ‌ராத‌தாயும், எழுத்துப்பிழைக‌ள் இல்லாததாயும் இருக்க‌ வேண்டும் அனுப்ப‌ வேண்டிய‌ ஆக்க‌ங்க‌ள். எழுதிய‌வற்றை மீண்டும் மீண்டும் ரிவ்யூ செய்கையிலும் அலுவலக மடிக்கணிணி, என் சொந்த மடிக்கணிணி என்று எழுதியும் ப‌ல‌ வெர்ஷ‌ன்க‌ள் கிடைத்து, எது க‌டைசி வெர்ஷ‌ன் என்ப‌து ஆக்க‌த்திற்கு ஆக்க‌ம் குழ‌ப்பி, அனுப்பிய‌ ஆக்க‌ங்க‌ளில் எது எங்கே வெளியாகியிருக்கிற‌து என்று பார்த்து, வெளியாகாத‌வைக‌ளை மீண்டும் எந்த‌ இத‌ழுக்கு அனுப்புவ‌து என்றெல்லாம் யோசிப்ப‌து ஆக்க‌ங்க‌ளை உருவாக்கும் நேர‌த்தை க‌ப‌ளீக‌ர‌ம் செய்துவிடும்.

பிரச்சனையின் தீவிரத்தை விளக்க ஒரு சம்பவம் சொல்கிறேன். ஒரு சமயம், ஆனந்த விகடனுக்கு என் கதை ஒன்றை அனுப்ப, ஆனந்த விகடனின் ஆசிரியர் மானா பாஸ்கர், பின்வருமாறு பதில் அனுப்பினார்..
"...... உங்களுக்கு கதை எழுத மிக மிக நன்றாக வருகிறது சார். உங்களால் இதைவிட சிறப்பான கதையை விகடன் வாசகர்களுக்கு வழங்க முடியும் என்பதை உங்கள் சர சரவென் நகரும் எழுத்து நடை மெய்ப்பிக்கிறது".

(கிட்டத்தட்ட இதே போன்றதொரு பதிலை, வடக்குவாசல் யதார்த்தா பென்னேஸ்வரனும் ஒரு கட்டத்தில் சொல்லியிருக்கிறார்.) அப்போதிருந்து, எழுதும் எல்லா சிறுகதைகளையும் எல்லா இதழ்களுக்கும் அனுப்ப முடியாது போயிற்று.

இந்த‌க் குழ‌ப்ப‌த்தில் என் மின்ன‌ஞ்ச‌லின் ஃபார்ம‌ட்டை நான் ச‌ற்றும் க‌வ‌னித்திருக்க‌வில்லை. அதையும் கவிஞர் மனுஷ்யப்புத்திரன் அவர்கள் க‌வ‌னித்து நினைவூட்டிய‌து ஆச்ச‌ர்ய‌மாக‌ இருந்த‌து. அதற்கு பின்னும் அவருடன் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கையில், அவருக்கெல்லாம் என்னை எங்கே நினைவிருக்கப்போகிறது என்கிற என் எண்ணம் பொய்த்துப்போனதில் எனக்கு மட்டும் உள்ளுக்குள் எதிலோ மிதப்பது போலவே இருந்தது.

வெகு சமீபமாக கூட‌, நவம்பர் 2012, 3ம் தேதி அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். பேசிக்கொண்டிருந்தோம். பேச்சினூடே,

".. நீங்கள் கூட த்ரில்லர், சஸ்பென்ஸ், டிடெக்டிவ் எல்லாம் எழுதுவீர்களே.. அது போல் நிறைய‌ எழுதுங்களேன்" என்றார். நான் அதுபோல் நிறைய எழுதி கைவசம் வைத்திருந்தாலும், தமிழ் எழுத்துலகில், அதுபோல் எழுதுவதை மலினமான எழுத்து என்று ஒதுக்கி வைக்கும் போக்கு இருப்பது போல் அவதானித்திருந்ததால், அவற்றை அனுப்பியிருக்கவில்லை. அதையே அவரிடம் கூறினேன். அனுப்ப தயக்கமாக இருக்கிறது என்றேன். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையென்றும், தயக்கமில்லாமல் அவ்வகை கதைகள் எழுதும்படியும் கூறினார்.