Monday, 5 November 2012

மனக்கணக்கு - சிறுகதை


மனக்கணக்கு - சிறுகதை


எஸ்!. எஸ்!. எஸ்!.

ஹரி குதூகலித்தான். எம்பிக் குதித்தான். உள‌ம் பூரித்தான். காரணம், அவன் கையிலிருந்த ராங்க் கார்டு. அதில் அவ‌ன் பெய‌ர். கீழே ம‌திப்பெண்க‌ள். 183, 192, 196 ..... அத‌ன் கீழே சிவ‌ப்பு மையில் 1. முத‌ன் முறையாக‌வாங்கிய‌முத‌லாவ‌து ராங்க். அதுவும் பன்னிரண்டாம் வகுப்பு காலாண்டுத் தேர்வில். முந்தைய வருடம் பதினோராம் வகுப்பு தேர்வுகள் அத்தனையிலும் ஹரியால் அதிகபட்சமாக ஆறாவது ராங்க்தான் வாங்க முடிந்தது. வினய் தான் இறுதியாண்டுத் தேர்வில் டாப்பர். வகுப்புத் தோழி ப்ரத்திமா, உஷா, ஷீலா எல்லோரும் சென்ற வருடம் அவன் பக்கம் மாறி மாறி அவன் மேல் விழுந்தது ஹரிக்கு எரிச்சலாக வந்தது. ஹரிக்கு ப்ரத்திமாவைப் பிரத்தியேகமாகப் பிடித்தம். எல்லாம் விடலை வயதுக்கோளாறுதான். ப்ர‌த்திமாவும் வினய்யும் அடிக்க‌டி பேசிக்கொள்வ‌தும், அலைபேசியில் குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொள்வதும், உணவுக்கூடத்தில் ஒன்றாக‌சாப்பிடுவ‌‌தும் ஹரிக்கு ஏக‌த்துக்குக் கிள‌றிவிட்ட‌து.

அப்போதே கங்கணம் கட்டிக்கொண்டு பதினோராம் வகுப்பு படிக்கையிலேயே பன்னிரண்டாம் வகுப்புக்கான பாடங்களைப் படிக்கத் துவங்கிவிட்டான். இப்போது பன்னிரண்டாம் வகுப்பு துவங்கி காலாண்டுத் தேர்வுகள் நடந்து முடிவுகள் வெளியாகியிருக்கின்ற‌ன‌. ஹ‌ரிதான் டாப்ப‌ர். இனிமேல் வின‌ய் இல்லை. ஹ‌ரிதான். நினைக்கையிலேயே ச‌ந்தோஷ‌மாக‌இருந்த‌து ஹரிக்கு.

ஆனால் அன்றைக்கென்று ப்ர‌த்திமா ப‌ள்ளிக்கு வ‌ர‌வில்லை. அத‌னால் அவ‌ளுக்குத் தெரிந்திருக்க‌நியாய‌மில்லை. அவ‌ளுக்குத் தான் முத‌ல் ராங்க் வாங்கிய‌து தெரிய‌வேண்டுமே என்று ஹ‌ரி ம‌ன‌ம் அடித்துக்கொண்ட‌து. அவ‌ள் வீடு இருக்கும் தெரு வ‌ழியே போகிற மாதிரி போய்விட்டு, த‌ற்செய‌லாக‌அவ‌ளைப் பார்த்த‌து மாதிரியும், பின் த‌ற்செய‌லாக‌ராங்க் கார்டு ப‌ற்றிப் பேசுவ‌தாக‌வும், முத‌ல் ராங்க் வாங்கிய‌து ப‌ற்றி சொல்வ‌தாக‌வும், அவ‌ள் ஹ‌ரியின் முக‌த்தைத் தாழ்த்தி நெற்றியில் முத்த‌மிட்டு முத்த‌ப்ப‌ரிசு த‌ருவ‌தாக‌வும் ஹ‌ரிக்குக் க‌ற்ப‌னைக‌ள் தோன்றி இனித்த‌து.

இந்தக் கதையின் வாசகர்களுக்குக் கொஞ்சம் உபரித்தகவல். இது போன்ற எத்தனையோ ப்ரத்திமாக்களுக்கும், ஹரிக்களுக்கும், வினய்களுக்கும் இந்தியாவில் ராங்க் கார்டு என்பது ஒரு மனிதனின் தலையெழுத்து. க்ளார்க் வாய்ப்பாடோ, கணினியோ இல்லாமல் லாகரிதம் கணக்கிடத் தெரியாது. இவர்களின் பெற்றோர்களுக்கும் தெரியாது. கலவி பற்றி பெற்றோர்கள் கவனமாகச் சொல்லிக் கொடுக்காமல் போனால், சுற்றம் எப்படியாகினும் தப்பும்தவறுமாக நிச்சயம் கற்றுத் தந்துவிடும் என்பது தெரியாது. அடுத்தவருக்கு நிகழும் துன்பம் தனக்கும் என்றாவது நிகழலாம் என்பது தெரியாது. அப்பா என்கிற ஆணைப் பற்றி அம்மா என்கிற பெண்ணுக்கு தெரியாது. காதலன் என்கிற ஆணைப் பற்றி காதலி என்கிற பெண்ணுக்குத் தெரியாது. இப்படி எத்தனையோ தெரியாது. தலைமுறை தலைமுறையாக இது இப்படித்தான். வாழ்க முரண்பாடுகள்.

அன்று வீட்டில் ஹரியின் அம்மா இருக்கவில்லை. அவள் நாகப்பட்டினத்தில் இருக்கும் தங்கை வீட்டிலிருந்து இரவுப் பேருந்தில் சென்னை வருவதாக இருந்தது. தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொல்லலாமென்றால் பிரயோஜனமில்லை. எத்தனை முறை அழைத்தாலும் ஒன்று எடுக்க மாட்டாள் அல்லது அலைபேசி கோமாவில் இருக்கும். மின் உயிரூட்டும் எண்ணமே இருக்காது. அம்மா அந்தக் காலத்து மனுஷி. கையில் ஒரு நோக்கியா அலைபேசி இருந்தாலும், அதை எப்படி பயன்படுத்துவது என்பது இன்னமும் அவளுக்கு ஒரு சிந்துபாத் புதிர் தான். வீட்டில் அண்ணன் அப்பாவிடம் சொன்னதில், கல்லூரிக்கு பைக் வாங்கித் தருவதாக அப்பாவிடமிருந்து வாக்குறுதியும், அண்ணனிடமிருந்து ஒரு முறைப்பும் கிட்டியது.

எனினும் ப்ரத்திமாவுக்கு இது தெரியுமோ தெரியாதோ என்பதே ஒரே கவலையாக இருந்தது ஹரிக்கு. அலைபேசியில் அழைத்துச் சொல்லிவிடலாமா என்று யோசித்து, பின் தானே தம்பட்டம் அடித்துக்கொள்வதாக அவள் நினைத்துவிடுவது குறித்த சாத்தியக்கூறுகள் பற்றி சிந்தித்து அந்த எண்ணத்தைக் கைவிட்டான் ஹரி. தானாகத் தெரியட்டும், அதுதான் உசிதம் என்று தோன்றியது ஹரிக்கு.

உல‌கில், க‌லாச்சார‌மும், நாக‌ரீக‌மும் இப்ப‌டித்தான் உருவாகிற‌து. விளைவுகளைப் பற்றிய ஒரு முன்அனுமானம் கொண்டு, சாதகமான விளைவுகளை உருவாக்குவதான இயக்கங்களை இனம் கண்டு, தரம் பிரித்து, பின் செயற்கையாய் அதனை உருவாக்கி... இப்படித்தானே உருவாகிறது கலாச்சாரமும் நாகரீகமும். அன்பின் நாகரீக வெளிப்பாடுதான் காதல். எதிர்முனையில் அங்கீகரிக்கப்பட்டால் வெற்றி. இல்லையெனில் தோல்வி.

மறுநாளும் ப்ரத்திமா பள்ளிக்கு வரவில்லை. வைரஸ் ஜுரம் என்றார்கள் ஷீலாவும் உஷாவும். இரண்டொருமுறை அலைபேசியில் அழைக்க முயன்றதில் ப்ரத்திமாவின் அலைபேசி கோமாவில் இருந்தது. ஹரி பெரிதும் அலைக்கழிந்தான். வகுப்பில் கவனம் செல்லவில்லை. வீட்டுக்குச் செல்லும் வழியில் வரசித்தி வினாயகர் கோயிலில் ப்ரத்திமாவுக்கென வேண்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே கால்சட்டைப் பையில் வைத்திருந்த அலைபேசி குறுஞ்செய்தி வந்திருக்கிறதென முத்தாய்ப்பாய் சிணுங்கியது.

98405..... என்று துவங்கி ஒரு புதிய எண். இது ஏர்டெல் எண்ணாயிற்றே! குறுஞ்செய்தி, ஆங்கிலத்தில் முதல்வனுக்கு வாழ்த்துக்கள் என்றுவிட்டு கண்ணடித்து சிரித்தது.

வீட்டில் எல்லோரும் ஏர்செல். ஹரியின் நண்பர்களும் அனைவரும் வோடஃபோன். சில ஆசிரியர்கள் கூட. உஷா, ஷீலா இருவரும் கூட ஏர்செல்தான். ஹரி குழப்பமுடன் நிமிர்கையில், ஷீலாவும், உஷாவும் ஒருசேர சட்டென திருட்டுத்தனமாய் ஹரியிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.அவர்கள் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை. பின் வெகு தீவிரமாய் கரும்பலகையைக் கவனித்தார்கள். அதில் ஒரு செயற்கைத்தனம் தெரிந்ததை ஹரி குறித்துக்கொள்கையில் அலைபேசி மீண்டும் அவனின் கால்சட்டைப் பையில் அமர்ந்தது.

மீண்டும் பாட‌ம். குப்புசாமி இம்முறை ஸ்பின் குவாண்ட‌ம் எண்க‌ள் ப‌ற்றிப் பாட‌மெடுத்துக்கொண்டிருந்தார். 'ஸ்பின் குவாண்ட‌ம் எண் என்ப‌து ஒரு அணுவைச் சுற்றி ஓர் நொதுமின்னி எந்த‌திசையில்....'

மீண்டும் கால்சட்டைப் பையில் வைத்திருந்த அலைபேசி குறுஞ்செய்தி வந்திருக்கிறதென முத்தாய்ப்பாய் சிணுங்கியது.

இம்முறையும் அதே 98405..... எண்ணிலிருந்து குறுஞ்செய்தி. ஆங்கிலத்தில் 'நீ ஸ்மார்ட்டாக இருக்கிறாய்' என்றது. ஹரி இம்முறை சுதாரித்தவனாய், லேசாகத் தலை நிமிர்த்தி உஷா, ஷீலாவைப் நோட்டம் விட, அவர்கள் இருவரும் இம்முறையும் ஒருசேர சட்டென திருட்டுத்தனமாய் ஹரியிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். முகத்தில் மெல்லிய புன்னகை. கரும்பலகை மீது கவனம்.

ஏதோ புரிந்தது போலிருந்தது ஹரிக்கு.

இந்தப் பெண்கள் ப்ரத்திமாவின் தோழிகள். ப்ரதிமா வைத்திருப்பது ஏர்டெல் எண். இப்போது குறுஞ்செய்தி அனுப்பப்படுவதும் ஏர்டெல் எண். ஒவ்வொரு செய்தி அனுப்பபடுகையிலும் இவர்கள் உளவு பார்க்கிறார்கள்.

அப்படியானால் என்ன நடக்கிறது? அப்படியானால், அப்படியானால்.... ஒருவேளை இப்படி இருக்கலாமா? இந்தப் பெண்கள் விளையாடுகிறார்கள். இவர்கள் தோழிகள். தன்னை வேவு பார்க்கும் தோழிகள். இளவரசி அங்கிருக்கிறாள். இந்த எண்ணின் மறுமுனையில் இருக்கிறாள். குறுஞ்செய்தி அனுப்பிவிட்டுத் தோழிகள் மூலம் என் தவிப்பை உளவு பார்க்கிறாள் என்று இருக்கலாமா?.

ச்சேசே, அனுப்பப்படுவது ஏர்டெல் எண்ணிலிருந்து என்றால் அது உடனே ப்ரத்திமாவாகத்தான் இருக்க வேண்டுமா? இந்தப் பெண்கள் தற்செயலாகக் கூடத்தான் சிரித்திருக்கலாம். ஆம் அப்படித்தான் இருக்க வேண்டும். தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டான் ஹரி. ஆனாலும் இந்தப் புதிய எண் இன்னமும் புதிராகத்தான் இருக்கிறது, இதை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

மாலை அம்மா வந்திருந்தாள். அவளிடம் ராங்க் பட்டியல் காண்பித்தான் ஹரி. கட்டியணைத்துப் பாராட்டினாள் தாய் புவனா. இனி உனக்கு எல்லாம் வெற்றிதான் என்று அவள் வாழ்த்துகையில் அவன் நினைவுகளில் ப்ரத்திமா குறுக்கிலும், நெடுக்கிலும் கடந்து போனாள்.

அடுத்த நாள் ப்ரத்திமா வகுப்பறை வந்திருந்தாள். மதியம் உணவு இடைவேளையில் அவள் ஹரியின் இருக்கையை அண்டி, முதல் மதிப்பெண் வாங்கியதற்கு வாழ்த்தியபோது அவளின் முதுகிற்குப் பின்னால், உஷாவும், ஷீலாவும் கல்மிஷமாய் இவர்களைப் பார்த்தபடி தங்களுக்குள் சிரித்துக்கொண்டார்கள்.

"நான் அனுப்பிய குறுஞ்செய்தி வந்ததா?" என்றாள் ப்ரத்திமா. ஹரிக்குத் தூக்கிவாரிப்போட்டது.

"ஆமாம், நேற்று இரண்டு குறுஞ்செய்திகள் வந்தன. அது, 98405 என்று தொடங்கிய எண்களாயிற்றே... அது ..உன்னுடையதா ப்ரத்திமா

தலையைப் பெரிதாக மேலும் கீழுமாக ஆட்டினாள் ப்ரதிமா.

"சரி, ஹரி.. குறிச்சுக்கோ.. நான் குறுஞ்செய்தி அனுப்பினா, பதில் அனுப்பிவிடாதே அந்த எண்ணுக்கு.. அது என் சித்திவழி தம்பியின் எண் தான்.. தற்காலிகமாக நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்... என் அலைபேசியில் பணம் இல்லையெனில் அவனிலிருந்து பேசுவேன்.. " என்றுவிட்டு தன்னிருக்கைக்குப் போய்விட்டாள் ப்ரத்திமா.

அப்படியானால், அவளேதானா? ச்சே.. முதலிலேயே தோன்றியது தான். ப்ரத்திமாவாகத்தான் இருக்கவேண்டும் என்று. ஆனால் தற்செயல் நிகழுவுகள் என்று குழப்பிக்கொண்டாயிற்று என்று தோன்றியது ஹரிக்கு. உஷாவும் ஷீலாவும் இன்னமும் தங்களுக்குள் நகைத்துக்கொண்டிருந்தார்கள். என்ன‌முட்டாள்த‌ன‌ம்! கிட்ட‌த்த‌ட்ட‌க‌ண்டுபிடித்த‌விஷ‌ய‌ம் தான். என்ன‌வோ தோன்றி ப்ர‌த்திமாவாக‌இருக்காதென்று நினைத்த‌து எத்த‌னை த‌வ‌று? க‌டைசியில் அது அவ‌ள்தான். ஒரே ஏர்டெல் ந‌ம்ப‌ராக‌இருந்த‌திலிருந்தே அதை அறுதியிட்டிருக்க‌வேண்டும். த‌ன‌க்குள்ளாக‌வே அலுத்துக்கொண்டான் ஹ‌ரி. முதல் வேளையாக அந்தப் புதிய எண்ணை ப்ரத்திமா பெயரில் பதித்துக்கொண்டான்.

அதற்குப் பின்வந்த நாட்கள், இதுவே வாடிக்கையானது. வெள்ளிக்கிழமை கலர் சட்டைகள் அணிந்து வந்தபோது, அதே எண்ணிலிருந்து 'அற்புதம்' என்று குறுஞ்செய்தியில் வந்து விழுந்தாள் ப்ரத்திமா. வகுப்பறையில் சீரியஸாகப் பாடம் கவனிக்கையில் ஒன்றுமே நடக்காதது போல 'என்ன செய்கிறாய்?' என்று குறுஞ்செய்தியில் வினவி கண்ணடித்துவிட்டு ஒன்றுமே தெரியாதவள் போல பாடம் கவனித்து சீண்டிவிட்டாள் ப்ரத்திமா.

ஹரி இப்போதெல்லலாம் முதுகுத்தண்டில் ரத்தம் பாய்வதை அடிக்கடி உணர்ந்தான். வகுப்பறையிலேயே ப்ரத்திமாவுடன் 'ஒல்லி ஒல்லி இடுப்பே.. ஒட்டியாணம் எதுக்கு' விஜய் பாடலுக்கு நடனம் ஆடினான். குதிரை வண்டியில் முகம் தெரியாத மனிதர்களால் ப்ரத்திமா கடத்தப்படுகையில் எங்கிருந்தோ வந்து குதித்து, காற்றிலே பறந்து பறந்து சண்டை போட்டு ப்ரத்திமாவைக் காப்பாற்றினான் பகல் கனவுகளில். ப்ரத்திமா அவ்வப்போது அவனை அர்த்தமுடன் ஓரக்கண்ணால் பார்த்துவிட்டுச் சிரித்தாள். ஹரிக்கு எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு ப்ரத்திமாவை அந்த நிமிஷமே திருமணம் செய்யவேண்டும் போலிருந்தது.

பொறு. பொறு. அவசரப்படாதே. இன்னும் காலம் இருக்கிறது. கல்லூரி இருக்கிறது. அதற்குப்பின் வேலை. பின்னர்தான் திருமணம். பொறு. நீண்ட காலம் இருக்கிறது. அதுவரை இப்படியே காதலி. தினம் தினம் காலி வயிற்றில் பட்டாம்பூச்சிகள் விடு. தொடரட்டும் இந்தக் குறுஞ்செய்திகள். தொடரட்டும் இந்த கல்மிஷ சிரிப்புகள். இது நன்றாகத்தான் இருக்கிறது. வாழ்க காதல். உபதேசித்தது மனம்.

இது எல்லாமும் எதனால் நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான். அதைத் தக்க வைக்க வெகுவாகப் போராடினான். அரையாண்டுத் தேர்வு முடிவுகளும் ஹரியை முதல்வனாக்கி வேடிக்கை பார்த்தன. அம்மா முத்தம் கொஞ்சினாள். அப்பா கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களை ஆர்வமுடன் சேகரித்தார். அண்ணன் பெருமையுடன் ஹரியைத் தன் தம்பியென்று ஊரெல்லாம் சொல்லிக்கொண்டான். ப்ரத்திமா இது அத்தனையையும் விட அதிகம் போதையேற்றினாள்.

ஒரு நாள், சனிக்கிழமை. சிறப்பு வகுப்பு அன்று. கெமிஸ்ட்ரி சிறப்பு வகுப்புகள் மதியம் மூன்று மணிவரை. விருப்பமில்லை என்றாலும் ப்ரத்திமாவைப் பார்க்க இன்னுமொரு வாய்ப்பென்று தவறாமல் வந்தான் ஹரி. ப்ரத்திமா வகுப்பில் இல்லை. பத்து மணிக்குத் துவங்கிய வகுப்பு ஒரு மணிக்கு இடைவேளை விட்டது. ஷீலா, உஷா கூட ப்ரத்திமா பற்றி உதட்டைப் பிதுக்கினார்கள். ஹரிக்குப் பாடத்தில் மனம் லயிக்கவில்லை. ப்ரத்திமா பற்றியே சிந்தனை போனது. மூன்று மணிக்கு வகுப்பு முடிந்து, ஹரி சைக்கிளை ஸ்டாண்டிலிருந்து விடுவிக்கையில் கால்சட்டைப் பையில் வைத்திருந்த அலைபேசி குறுஞ்செய்தி வந்திருக்கிறதென முத்தாய்ப்பாய் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தப்போது, ப்ரத்திமா, மாலை ஐந்து மணிக்கு வடபழனி முருகன் கோயிலுக்கு வரும் படி அழைத்திருந்தது சற்று ஆசுவாசம் கொள்ள வைத்தது. அப்பாடா! என்றிருந்தது. இனிமேல் இவளிடம் எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு, செல்லும்படி கேட்டுக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது ஹரிக்கு. வீட்டுக்குச் செல்லாமல் நேராக முருகன் கோயிலுக்கு நான்கு மணிக்கே சென்றுவிட்டான் ஹரி.

ப்ரத்திமாவுக்கென காத்திருந்த நிமிடங்கள், உண்மையில் யுகங்கள் தாம் என்பதை உணர்ந்துகொண்டிருந்த வேளையில் அங்கே கோயிலின் ஓர் ஓரத்தில் ப்ரத்திமா, அருகிலேயே வினய். இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். ஹரிக்கு அடிவயிற்றில் அமிலம் வேகமாய்ச் சுரந்தது. வினய் எங்கே இங்கே வந்தான்? பூஜை வேளையில் கரடி போல். இதில் ப்ரத்திமாவுடன் வாக்குவாதம் வேறு. முதலில் அவனை அவளிடமிருந்து விலக்க வேண்டும் என்று தீர்மானித்தபடியே அவர்களை அவசரமாய் அண்டினான் ஹரி. ஹரியைப் பார்த்துவிட்டு, ஏதோ பார்க்ககூடாதவனைப் பார்த்துவிட்டதுபோல சலிப்புடன் வினய் அகல, இப்போது அழத்துவங்கியிருந்தாள் ப்ரத்திமா.

"என்னாச்சு ப்ரத்திமா?"

"ஹரி, எல்லாமே போச்சு ஹரி. உன் எண் என்று நினைத்து நான் இத்தனை நாளும் யாருக்கோ அனுப்பிக்கிட்டு இருந்திருக்கேன் ஹரி. அவன் இன்றைக்கு என் வீடு வரைக்கும் வந்து பெரிய கலாட்டா ஆகிவிட்டது. இப்போதென்றால் வினய் என்னை நம்பவே மாட்டேன் என்கிறான் ஹரி. நான் வினயை எத்தனை காதலிக்கிறேன் தெரியுமா!" என்றுவிட்டு விம்மினாள் ப்ரத்திமா, ஹ‌ரியின் இத‌ய‌ம் நொறுங்குவ‌தை உண‌ராம‌ல்.

ஹரி அதிர்ச்சியில் ஆழ்ந்து செய்வதறியாமல் திகைத்திருக்கையில் ஹ‌ரியின் அலைபேசிக்கு ஓர் அழைப்பு அதே 98405..... எண்ணிலிருந்து வ‌ர‌, அதிர்ந்தான் ஹ‌ரி. க‌ண்முன்னே ப்ர‌த்திமா விசும்பி அழுது கொண்டிருக்க‌, இத்த‌னை நாளும் அவ‌ள்தான் என்று நினைத்திருந்த‌எண்ணிலிருந்து அழைப்பு வ‌ந்து ஹ‌ரியை ஏக‌த்துக்கும் குழ‌ப்பிய‌து.

தடதடக்கும் இதயத்துடன் அவசரமாய் ஹரி அந்த அழைப்பை ஏற்று "ஹ‌லோ" என்றான்.

"ஹேய் ஹ‌ரி" என்ற‌து எதிர்முனையில் ஒரு பெண்குர‌ல். அந்த‌க் குர‌ல்! அந்த‌க் குர‌ல்! அப்ப‌டியே அச்சு அச‌லாய், ஹ‌ரியின் அம்மாவின் குர‌லை ஒத்து இருக்க‌, ஹ‌ரி அதிர்ச்சியில் உரைய‌,

"என்ன‌ஹ‌ரி, சீக்கிர‌மே வ‌ந்துவிட்டாய்? ஐந்து ம‌ணிக்குத்தானே வ‌ர‌ச் சொல்லியிருந்தேன்" அந்த‌க் குர‌ல் வெகு அருகாமையில் கேட்க‌திரும்பினான் ஹ‌ரி. ஹ‌ரியின் அம்மா புவனா புன்ன‌கைத்த‌ப‌டி நின்றிருந்தாள்.

"அம்மா, நீ... நீங்க‌..."

"என்ன‌டா ஹ‌ரி..ஐந்து ம‌ணிக்குத்தானே வ‌ர‌ச்சொன்ன‌து? ஏன் இத்த‌னை முன்கூட்டியே வ‌ந்துவிட்டு காத்திருக்கிறாய் ஹரி. பரவாயில்லையே! எம் புள்ளை கோயில் குளமென்று இருக்கிறானே. சமத்து!" என்று திருஷ்டி சுற்றி சிலாகித்தாள் புவனா.

"அம்மா, இது உங்கள் எண்ணா?"

"ஆமாம்டா, நாகைல‌உன் சித்தி வாங்கிக்கொடுத்தாள். ஏதோ அலுவலக எண்ணாம். இதில் பேசினாள் செலவு இல்லையாம். நீதான் என்னை எப்போதும் திட்டுவாயே! அதுதான், உன் சித்தியிட‌ம் இந்த‌க் குறுஞ்செய்திகள் அனுப்புவ‌து எப்படி என்று க‌ற்றுக்கொண்டேன். ச‌ரியா வ‌ந்த‌தா?"

"அம்மா, நீங்கள்தானென்று சொல்லக்கூடாதா?"

"அதையும்தான் குருஞ்செய்தியென அனுப்பினேனே ஹ‌ரி."

"அப்ப‌டியா? எப்போ அம்மா அனுப்பினீர்கள்? எனக்கு வரவில்லையே" என்றுவிட்டு அம்மாவின் கையிலிருந்த‌மொபைலை வாங்கிப்பார்த்தான் ஹ‌ரி.

'ஹாய் ஹ‌ரி -‍உன் அம்மா' என்ற‌குறுஞ்செய்தி அனுப்ப‌ப்ப‌டாம‌ல் காத்திருப்பிலேயே வைக்கப்பட்டதென அந்த அலைபேசி எந்த விதமான உணர்ச்சிகளும் இன்றி சிவனேயென்று சொன்னது..

ஹரிக்கு அழுகை வரும்போல இருந்தது.

முற்றும்.

#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6054)