Friday, 15 June 2012

முரண்களும் நாமும் - 1

முரண்களும் நாமும் - 1


தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் பயணிகள் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தேன். உட்கார இருக்கைகள் இல்லை எனினும் பொதுவில் எனக்கு நிற்பதும், நடப்பதும் பிடிக்குமென்பதால், என் பாட்டுக்கு ஏதேதோ சிந்தித்தவாறே பயணம் மேற்கொண்டிருந்தேன். காட்டாங்களத்தூர் ரயில் நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்த போது அது நடந்தது. ஒரு வயதானவர். வயது 55 இருக்கலாம். அவருடன் 50 வயதில் ஒரு பெண்மணி (மனைவியாக இருக்கலாம்), கூடவே 35 வயதில் ஒரு மணமான பெண் (கால்களில் மெட்டி அணிந்திருந்ததால்!). தோற்றத்திற்கு வயதானவரோ, அவரது மனைவியோ போல் இல்லாமல் இருந்ததால் மருமகளாக இருக்கலாமென்று தோன்றியது. மூவரும் எழுந்து இரண்டு கைகளிலும் ஏதேதோ மூட்டை முடிச்சுக்களுடன், ரயில் கதவு நோக்கி வந்தனர். இரண்டு முனைகளிலும் இருக்கைகளுக்கு மத்தியில் இருந்த பாதையில், ஒருவர் ஒரு மூட்டை நிறைய வெள்ளரிப்பிஞ்சுடன் பாதையை அடைத்துக்கொண்டு "வெள்ரிப்பிஞ்ச் வெள்ரிப்பிஞ்சேய்ய்ய்ய்" என்று கூவிக்கொண்டிருந்தான்.

மூட்டை முடிச்சுக்களுடன் வந்த பெரியவருக்கோ, இந்த வியாபாரியை தாண்டித்தான் ரயில் கதவுகளுக்கு வர வேண்டும். தாண்டி வந்ததில் அவரும் அவர் மனைவியும் முட்டியில் இடித்துக்கொள்ள, பெரியவர் சற்று கோபத்துடன்,

"ஓரமா வச்சிட்டு நில்லேம்பா. பாதையில வச்சிக்கிட்டு...." என்றார் சலிப்புடன்.

"ஏன் நீ ஓரமா போயேன்..வந்து ஏறிட்டு போற... மாடு கணக்கா" என்றான் வெள்ளரிக்காரன். (இத்தனைக்கும் அவனுக்கு!? வயது 40 இருக்கலாம்)

மனைவி முன்னால் அவமானப்பட்டது போல் அவர் உணர்ந்ததை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. தாழ்ந்து போன தன் மானத்தை மீட்டெடுப்பதான அவரின் முயற்சி கண்கூடாகத் தெரிந்தது.

"யோவ், ஓசியில ட்ரெய்ன் ஏறுறது நீயா நானா? டிக்கேட் வாங்கிட்டா இதெல்லாம் விக்கிற? இதெல்லாம் ட்ரெயினுக்குள்ள விக்கிறதுக்கு ரூல்ஸ் இருக்கா? என்னமோ பேசுற" என்றார் பெரியவர்.

இதற்குள் ரயில், காட்டாங்களத்தூர் ரயில் நிலையம் வந்து ப்ளாட்பாரத்தில் வண்டி நிற்க, பெரியவர் தன்னுடன் வந்த பெண்களை முதலில் இறங்கவிட்டுவிட்டு பின்னால் இறங்குகையில், அந்த வியாபாரி,

"என்னா ரூல்ஸ் பேசுற, போய்யா வேலையை பாத்துக்கிட்டு" என்றுவிட்டு அந்தப் பெரியவரின் பின்னால் முதுகில் சப்பென்று அறைந்தான். கம்பார்ட்மென்டில் உள்ள யாரும் எதிர்பார்க்கவில்லை இந்த தாக்குதலை.

பெரியவர் கையிலிருந்த பையை கீழே போட்டுவிட்டு, அவன் மேல பாய, அவன் அடிக்க, பதிலுக்கு அவரும் அடிக்க, பெரிய ரகளை ஆகிப் போனது... கூடி நின்றவர்களெல்லாம் விலக்கி விட, பின்னாலேயே பெரியவரின் மனைவியும், மருமகளும் பின்னால் வந்து இழுக்க, ரயிலும் சரியான நேரத்தில் விசிலடித்து கிளம்பத்துவங்க, ஒருவழியாக பெரியவர் அவசரமாக இறக்கப்பட்டார்.

ப்ளாட்பாரத்தில் அவரின் மனைவி, பெரியவரை " நமக்கேன் வம்பு, அவனோட சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க?... " என்ற தோணியில் ஏதோ வசைபாடிக்கொண்டிருந்தார். அதற்குப் பிறகு அந்த வெள்ளரிப்பிஞ்சுக்காரன் செய்தது தான் உச்சகட்டம்

வண்டி புறப்பட்டுவிட்ட தைரியத்தில், கதவோரம் வந்து "ஓத்த தேவ.....பையா.... பொம்பளை பின்னால ஒளிஞ்சிக்கிட்டான் பாரு..பொறம்போக்கு... தைரியம் இருந்தா வாடா தேவ..... பையா " என்றவாறே காலில் கிடந்த செருப்பை தூக்கி ப்ளாட்பாரத்தில் மனைவியுடன் சண்டைபோட்டுக் கொண்டிருந்த பெரியவர் மீது விட்டெறிந்தான்.

அதுவரை அரைகுறையாக ஏதோ யோசனையில் இந்த சம்பவத்தை அரைக் கவனத்தில் கொண்டிருந்த நான், அந்த நொடியில் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டேன். அந்த நொடி, ரயில் பெட்டியிலிருந்த பலரும், நடப்பதை ஒரு வித அசூயையுடன், ஆனால், ஆர்வமுடன் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ரயில் மெல்ல மெல்ல வேகமெடுத்து அகல, சூழ் நிலை, வெள்ளரிப்பிஞ்சுக் காரனுக்கு சாதகமாகவும், அந்த பெரியவருக்கு பாதகமாகவும் முடிந்தது.

அதற்கு பிறகுதான் க்ளைமாக்ஸ்.

நான் ஏதோ நடந்த அத்தனையையும் பார்த்துவிட்டு, ரயிலில் பயணப்பட்டவர்கள் அத்தனை பேரும் அந்த வெள்ளரிப்பிஞ்சுக்காரனை தாளிக்கப்போகிறார்கள் என்று நினைத்திருக்கையில், அவன் மறுபடி

"வெள்ரிப்பிஞ்ச் வெள்ரிப்பிஞ்சேய்ய்ய்ய்" என்று கூவ, ஆள் ஆளுக்கு பையிலிருந்து காசு எடுத்து நீட்டி சமர்த்தாக வெள்ளரிப்பிஞ்சு வாங்கிக் கொண்டு அவரவர் இடத்தில் அமர்ந்து நாளிதழ் பார்ப்பதும், ஜன்னலினூடே வேடிக்கை பார்ப்பதும், பாட்டு கேட்பதுமாக சகஜமாகிவிட்டார்கள். அதற்கு முன்பு ஒரு பெரிய அமளிதுமளி நடந்ததற்க்கான, ஒரு மெலிந்த வயதான பெரியவர் ஒருவரின் மானம் அவர் வீட்டுப் பெண்கள் முன்னிலையில் கோரமாக, மூர்க்கமாக துகிலுரிக்கப்பட்டதான நிகழ்வொன்று நடந்ததற்க்கான எந்த சுவடும் அங்கே இல்லை.

ஒரு அநீதி நடக்கிறது. கண்முன்னே. அநீதி இழைக்கப்பட்டது ஒரு வயதான பெரியவருக்கு. பெரியவர் சொன்னது உண்மை. ரயிலில் பயணிக்கும் பயணிகளை முன்வைத்தும் கூட ஒரு பிரிவினரால் பிழைக்க முடிகிறது. அப்பிரிவினருக்கு பயணிகள் தான் வாழ்வாதாரம். அந்த வியாபாரத்திலும் வாங்குபவன் இருப்பதால் தான் வியாபாரம் பிழைக்கிறது. வாடிக்கையாளன், வாங்குபவன் எல்லோரும் வியாபாரத்திற்கு கடவுள் போல. ரயிலில் வியாபாரம் செய்தல் சட்டமில்லை. அதையும் மீறி ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் நடக்கும் வியாபாரம், பிச்சை, அலிகளின் வசூல்வேட்டை, இவை எல்லாவற்றையும், சமூகம் பொறுத்துப்போவதற்கும், சகித்துப்போவதற்கும், கண்டும் காணாமல் போவதற்கு ஒரு ஆதார உணர்வு இருக்கிறது. அது உதவி. அடுத்தவனும் பிழைக்கட்டும், இப்படியாவது பிழைக்கட்டும் என்கிற எண்ணம். அப்படி இருக்கையில், வியாபாரம் செய்பவன் ஒவ்வொரு பயணியிடத்திலும் கடமைப்பட்டிருக்கிறான். பிச்சை எடுப்பவன் ஓவ்வொரு பயணியிடத்திலும் கடமைப்பட்டிருக்கிறான். அவந்தான் பொறுத்துப் போக வேண்டும். ஆனால், அது அன்று அப்படி நடக்கவில்லை.

ஆனால், ஒரு அநீதி சமூகத்தின் முன்னே நடக்கையில் சமூகம் அந்த அ நீதிக்கு காட்டவேண்டிய எதிர்ப்பை ஏன் பதிவு செய்யவில்லை? யாருக்கோ நடந்தால் நாம் கவலைப்பட வேண்டியதில்லையா? யாருக்கோ நடந்தால் சமூகம் எதிர்ப்பைக் காட்ட வேண்டியதில்லையா? இது என்ன நியாயம்? அன்று அந்த பெரியவருக்கு நடந்தது நாளை நமக்குள் யாருக்கோ கூட நிகழலாமென்கிற எண்ணம் ஏன் இல்லை சமூகத்திற்கு? ஒரு தவறு , அநீதி இழைக்கப்படுகையில், ஓர் எதிர்ப்பை, அதனால் பலன் உண்டா, இல்லையா என்பதெல்லாம் அப்புறம், ஓர் எதிர்ப்பை, அந்த அநீதிக்கு பொருத்தமான அளவிலான ஓர் எதிர்ப்பை சமூகம் நிச்சயம் காட்ட வேண்டும்.

இங்கு மட்டும் என்றல்ல. எங்கும் வேண்டும். அது கடமை. சமூகத்தின் கடமை. அந்தப் பெரியவரை பற்றி இப்போது நினைத்தாலும் ஒரு வித இயலாமை என்னை பீடித்துக்கொள்கிறது.