இதுவும் காதல் - சிறுகதை
என் எதிரில் அவன் சற்றே தெனாவட்டாக அமர்ந்திருந்தது போலத்தான் தோன்றியது. சாதாரண பாண்டு, அரைக்கை சட்டைதான். அதையும் தாண்டித் தெரிந்தது அவனின் புஜங்களும், பச்சை நரம்புகளும், குறுகிய வயிற்றுப்பகுதியும். அளவுக்கு மிஞ்சி டெஸ்டோஸ்டீரான் சுரக்கிறது இவனுக்கு, சிக்ஸ் பேக், ஃபேமிலி பேக் என்று ஏதேதோ சொல்வார்களே, அதுவாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.
'உன்னால முடியுமா?' என்றேன் சந்தேகத்தை வெளிப்படுத்தும் தோரணையில்.
'மேடம், அது வந்து... ஆங்.. அது பொது இடம்.. பக்கத்துலயே மார்க்கேட்... அதுனால... '
'தலைவா.. அது பொது இடம்..பக்கத்துலயே மார்க்கேட்... அதுனாலதான் உன்னைக் கூப்பிட்டது... இல்லேன்னா இந்த வேலையை நானே பண்ணமாட்டேனா?'
'அதுக்கில்லீங்க..அதாவது.. நான் என்ன சொல்ல வந்தேன்னா... '
'இருப்பத்தி அஞ்சாயிரம் தரேன்...'
'மேடம், 7 வருஷமா ஜிம் ட்ரெய்னரா இருக்கேன் மேடம். பெருசா தேரல மேடம். சில சினிமா ஹீரோஸ்க்கு கூட ஜிம் ட்ரெய்னரா வேல பாத்திருக்கேன். சான்ஸ் கேட்டேன். டூப் சான்ஸ் தான் குடுத்தாங்க. நாந்தாண்டா ஹீரோங்குற படத்துல கூட......' சொல்லிக்கொண்டிருந்தவனின் கண்கள் அவ்வப்போது என் கழுத்தினின்றும் வழுக்கியது ஐயோ என்றிருந்தது.
'ம்ம்ம்.. சரி.. ஐம்பது' இடைமறித்தேன் நான்.
'மேடம், பொது இடம்ன்னா ரிஸ்க் ஜாஸ்தி மேடம். "இதெல்லாம் ஒரு படம்ங்குற" தமிழ்ப்படத்துல கூட இதே மாதிரி ஒரு பொது இடத்துல சொமர்சால்ட் அடிச்சு...'
'ஓகே... ஒரு லட்சம். ஃபைனல்' என்றபடி பேரத்தை அதோடு நிறுத்திவிட்டு, அந்த இழவெடுத்த ஃபோட்டோக்களையும், நூறு ரூபாய் நோட்டுக்களென ஒரு முப்பதாயிரம் ரூபாய் அடங்கிய மூன்று நோட்டுக்கட்டுகளையும் எடுத்து டேபிளில் எறிந்தேன். அவன் பார்வை இப்போதும் மேலெழும்புவதாக தெரியவில்லை.
'இதுதான் அந்தப் பொண்ணோட ஃபோட்டோ, உனக்கான அட்வான்ஸ். நல்லா பாத்துக்கோ. எப்படி என்னங்குறதெல்லாம் உன் வேலை.. இவள கடத்திக்கொண்டு வந்து என்னோட கூடுவாஞ்சேரி வீட்டுல அடைக்கனும். ஃபோட்டோ பின்னாடியே அவ அட்ரஸ், கூடுவாஞ்சேரி வீட்டு அட்ரஸ் இருக்கு. எந்தக் கேள்வியும் கேக்கக்கூடாது. நீ இப்போ கிளம்பலாம். உனக்கு ஆறு மணி நேரம் டைம். இன்னிக்கு சாயந்திரம் 7க்கு அந்தப் பொண்ணு என் வீட்ல இருக்கணும். வாசல்ல நம்பர் ப்ளேட் மாத்தி ஒரு ஆம்னி நிக்கிது. அத கடத்தலுக்கு யூஸ் பண்ணிக்கோ. இதுல ஏதாவது தப்பாச்சி இதை விட அதிகமா வேற ஒருத்தனுக்கு பணம் குடுத்து வீட்டுவேலை பாக்குற உன் அம்மா, நர்ஸ் வேல பாக்குற உன் தங்கச்சி இரண்டு பேரையும் போட்டு தள்ளிடுவேன்' என்றேன். கலவரமாய் இல்லையென்பதாய் தலையாட்டிவிட்டு எழுந்து நடந்தான் அவன். நம்பியிருப்பானா? இவனே நம்பும் அளவுக்கு நான் உண்மையாகவே சினிமாக்களில் வரும் சொர்ணாக்கா மாதிரியா இருக்கிறேன் என்று எனக்கே சந்தேகம் வந்தது என் கவலைகளை இன்னும் அதிகப்படுத்தியது.
மாலை 7 மணிக்கு என் கூடுவாஞ்சேரி வீட்டின் வாசலில் க்ரீச்சிட்டு நின்றது வெள்ளை மாருதி ஆம்னி. அவன் இறங்கி என்னை நோக்கி நடந்தான். வண்டிக்குள் அந்தப் பெண். மயங்கிக் மயங்கிக்கிடந்தாற்போல் இருந்தது. கைதேர்ந்தவன் போல கச்சிதமாக நேரத்துக்கு வேலையை முடித்திருக்கிறான்.
'மேடம், நீங்க சொன்னா மாதிரி அந்தப் பொண்ண கொண்டுவந்துட்டேன் மேடம். பாருங்க' என்றுவிட்டு ஆம்னி கதவு திறந்து காட்டினான். அந்தப் பெண் இப்போதும் மயங்கி....
'வழில பிரச்சனை ஏதும் இல்லையே?'
'பிரச்சனை ஆச்சு மேடம். அந்தப் பொண்ணு கடைசி நிமிஷத்துல திமிறிச்சி. கழுத்துல ஒரு போடு போட்டேன். மல்லாக்க விழறப்போ ஜனங்க பாத்துட்டாங்க. போலீஸ்லாம் துரத்திச்சி. அவுங்க கிட்ட மாட்டாம வேகமா வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடிச்சு மேடம். அப்படியே அந்த நாந்தாண்டா ஹீரோ படத்துல க்ளைமாக்ஸ் ஸ்டண்ட்ல...'.
'அப்போ, பிரச்சனை இல்ல??.'
'ஆமா மேடம்'
'ஹ்ம்ம்.. பொண்ணு எப்படி?' என்றேன்.
சில நொடி தயக்கத்தில் என் கேள்வியின் உள்ளத்தர்த்தை மென்றுவிட்டு கல்மிஷமாய் சிரித்தான். எனக்கு வாந்தி வரும்போல இருந்தது.
'அப்புறம் மேடம்.. அந்த மீதி பேமென்ட்...' அவனே கேட்டான்.
'அத அவகிட்ட வாங்கிக்க' என்றேன் நான்.
அவன் துணுக்குற்றவனாய் நான் கண்களால் சுட்டிய திசையைப் பார்க்க அந்த அழகான பெண் இப்போது வண்டிக்குள்ளாக எழுந்து அமர்ந்தவளாய் அவனையே மெல்லிய புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
'என்ன, பேஜாராயிட்டியா... அவள் உன்னை காதலிக்கிறா. அவளுக்கு உன்னை புடிச்சிருக்கு. ஆனா இப்படித்தான் உன்னை கவுக்கணும்குறது அவளோட ஐடியா. அதான் இந்த ட்ராமா. நீ அவளைக் கடத்தினத ஊரே பாத்திருக்கு. அவ நினைச்சா உன்னை இப்போவே கடத்தல் கேஸுல உள்ள தள்ளலாம். நீ கடத்தின ஆம்னில நம்பர் ப்ளேட் மாத்தல. அது ஒரிஜினல். 5 வருஷம் களி திங்கனும். உள்ள போறியா இல்ல அவள கட்டிக்கிறியா?' என்றேன்.
நான் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்க, அவர்கள் இருவரும், இந்த ஊடல், கூடல் என்று சொல்வார்களே, அதைப்போல எதையோ செய்துகொண்டிருந்தனர். எனக்கு எழவு எப்படியோ ஒழியட்டும் என்று இருந்தது. உங்களுக்கு ஒன்றைப் பற்றிச்சொல்ல மறந்துவிட்டேன். என் வயது 24. எடை 110 கிலோ. அந்த அழகான பெண் பெயர் தமிழரசி. அவளும் நானும் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறோம். நான் சின்ன வயதிலேயே இப்படி குண்டாகிவிட்டேன். ஒரு பயல் பார்ப்பதில்லை. ஆனால், தமிழரசி என்றால் வழிவார்கள்.
எனக்கு பற்றிக்கொண்டு வரும். அவளுக்கு குட்டிகுட்டி செராமிக் சிலைகள், புசுபுசு நாய்குட்டி பிடிக்கும். அவனுக்கு வெட்டு, குத்து. வயசுக்கோளாரில் ஹீரோயிஸத்திற்கு அலைகிறாள் அவள். அவன் பாடு சொல்லவே வேண்டாம். பஞ்சப்பரதேசி. என்னையே எத்தனைக்கு பார்த்தான்!!. இவள் அறிவுரை சொன்னால்மட்டும் கேட்டுவிடவா போகிறாள்? எப்படியும் 30 நாளில் தெளிந்துவிடும். அப்புறம் நாய் மாதிரி அடித்துக்கொள்ளப்போகிறார்கள். எப்படியோ கெட்டு ஒழியட்டும். அவள் நாசாய்ப்போனால் சரிதான். இது எல்லாம் எனக்குத் தெரியும் என்பது அவளுக்கு தெரியாமல் இருந்தால் ரொம்ப ரொம்ப சரிதான்.
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5216)
