Thursday, 22 July 2010

இஸ்லா செரனில்லா - அறிவியல் புனைவுச் சிறுகதை

'இஸ்லா செரனில்லா' என்ற தலைப்பில் , நான் எழுதிய‌ அறிவியல் புனைவுச் சிறுகதையை வெளியிட்ட‌ ஜூலை மாத காற்றுவெளி இலக்கிய சஞ்சிகைக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதழின் முதல் பக்கம் மற்றும், சிறுகதை வெளியான இதழின் 41வது பக்கங்களின் பிரதிகள் இங்கே.
இஸ்லா செரனில்லா - அறிவியல் புனைவுச் சிறுகதை'அந்த பொண்ணு ஃபோட்டோ மெயில்ல அனுப்பி இருக்கேன்பா. பாத்தியா?'...

'ஃபோட்டோ பாத்தேன். பொண்ணு ந‌ல்லாதான்பா இருக்கு. ஆனா, 60 வ‌ய‌சுக்கு மேல‌ உங்க‌ளுக்கு 24 வ‌ய‌சுல‌ பொண்டாட்டி தேவைதானா பா'...

'அட‌ப்பாவி, உன் அம்மா இத கேட்ருக்கனும். இன்னிக்கு எனக்கு சோறு கிடைச்சிருக்காது. டேய் பொண்ணு உன‌க்கு பாத்த‌துடா.'...

'என‌க்கு ஏன் பாக்குறீங்க‌. நான்தான் இப்போதைக்கு வேணாம்னு சொன்னேன்ல‌'...

'இப்படியே எத்த‌னை நாள் தான் இருப்ப‌டா நீ. உன‌க்கும் 28 வ‌ய‌சு ஆச்சுல‌'...

'ஆங், கேக்கணும்னு நினைச்சேன். அப்பா, சென்னைல மழை எப்படிபா, இந்த வருஷம் தூரலாச்சும் உண்டா?'...

'டேய் நான் என்ன கேக்குறேன், நீ என்ன சொல்ற‌. பேச்ச மாத்தாத. பொண்ணு ஓகே வா இல்லையா?'...

'இன்னும் ஒரு 6 மாசத்துக்கு கல்யாணப்பேச்சே எடுக்காதீங்கபா. எனக்கு வேலை இருக்கு. சரி. இன்டர்நேஷனல் கால் ரேட் எகிறுது. நான் அப்பறம் பேசறேன்' என்ற‌ப‌டியே அப்பாவின் பதிலுக்கு காத்திராமல் தொலைப்பேசி அழைப்பின் இணைப்பைத் துண்டித்தான் ராம். அப்பா தொட‌ர்ந்து என்ன‌ பேசுவார் என்று தெரியும். வீட்டில் பெண் பார்க்கிறார்க‌ள். ஆனால், மெக்ஸிகோ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் குளோபல் வார்மிங் துறையில் தான் செய்யும் ஆராய்ச்சி முடிய இன்னும் 6 மாத‌ங்க‌ள் ஆகும். ஆராய்ச்சி முடிந்ததும் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகானத்தில் வேலை. அதன் பிறகு சென்னை சென்று திருமணம் செய்துகொள்ளலாம். அதுவ‌ரை பிக்க‌ல் பிடுங்க‌ல் இல்லாம‌ல் இருந்தால் தான் ஆராய்ச்சியை முழுமையாக செய்ய‌ முடியும்.

பூமியின் வெப்ப‌ நிலை ஒரே மாதிரியாக‌ இல்லாம‌ல் மாறிக்கொண்டே இருக்கிற‌து. அது மாறுவ‌த‌ற்க்கான‌ பிர‌தான‌மான‌ காரணங்க‌ள், பூமியைச் சுற்றியுள்ள‌ ஒசோன் என்னும் வாயுப்ப‌ட‌ல‌த்தில் ஓட்டை விழுத‌ல். உல‌க‌ம் முழுவ‌திலும் ப‌ர‌வ‌லாக‌ப்ப‌ய‌ன்ப‌டும் குளிசாத‌ன‌ப்பெட்டிக‌ள் வெளிவிடும் க்ளோரோஃப்லோரோ கார்ப‌ன் என்னும் வேதிப்பொருள் தான் இப்ப‌டி ஓசோனில் ஓட்டை விழ‌ப் பிர‌த்தியேக‌க் கார‌ண‌ம் என்கிற‌து விஞ்ஞான‌ம். இப்ப‌டி பூமியின் வெப்ப‌ம் அதிக‌மானால், ஆர்ட்டிக், அன்டார்டிக் ப‌னிம‌லைக‌ள் உருக‌ வாய்ப்புள்ள‌து. அப்படி உருகினால், கடல் நீர் அதிகரித்து, அது க‌டலை ஒட்டி அமைந்திருக்கும் நில‌ப்பிர‌தேச‌ங்க‌ள் க‌ட‌லில் மூழ்க‌க் கார‌ண‌மாகிவிடும். இப்ப‌டியான‌ சூழ் நிலையில், சுனாமி என‌ப்ப‌டும், க‌ட‌லில் ஏற்ப‌டும் நில‌ ந‌டுக்க‌ங்க‌ளும் சேர்ந்து கொண்டால் ஒரு பெரிய‌ க‌ண்ட‌மே மூழ்கிப்போகும் ஆப‌த்து இருக்கிற‌து.

பூமி என்ப‌து நில‌த்த‌ட்டுக‌ளால் ஆன‌து. இந்நில‌த்த‌ட்டுக்க‌ள் த‌ங்க‌ளை தாங்க‌ளே நிலை நிறுத்திக்கொள்வ‌தில் ஏற்ப‌டும் அசைவுக‌ளே இப்ப‌டியான‌ நில‌ந‌டுக்க‌ங்க‌ள். பூமியின் நில‌த்த‌ட்டுக்க‌ளைக் கொண்டு, இப்ப‌டியான‌ நில‌ ந‌டுக்க‌ங்க‌ள் நிக‌ழும் இட‌ங்க‌ளைப் பிரிக்க‌லாம். அவை, இந்தோனெஷியா, மெக்ஸிகோ, சைல், நிக‌ர‌குவா இன்னும் ப‌ல‌. ராம் செய்யும் ஆராய்ச்சி, இவ்விர‌ண்டும் ஒரே நேர‌த்தில் எப்போது நிக‌ழும் என்ப‌தை க‌ண்டுபிடிக்க‌ உத‌வும் ஒரு தொழில்நுட்ப‌த்தை க‌ண்டுபிடிப்ப‌து. அதற்காக, குளோபல் வார்மிங் மற்றும் சுனாமி இரண்டுக்கும் பொதுவான இடமாக நிகரகுவாவில் தங்கி ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருந்தான்.


கலைந்து கிடந்த டூவட்டை காலால் எத்திவிட்டு, மொபைல் ஃபோன் சார்ஜர் மற்றும் லாப்டாப் பவர் கார்டு, ஐரோப்பியன் அடாப்டர், முதலானவைகள் ஏற்கனவே எடுத்துவைக்கப்பட்டுள்ளனவா என சரிபார்த்து, காய்ந்து கிடந்த துணிகளை கிட்டதட்ட கிட்டிபுல் விளையாடும் நோக்கில் திறந்திருந்த அமேரிக்கன் டூரிஸ்டர் பெட்டியில் வீசி, ரூம் ஹீட்டர் ஆஃப் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்த்து, ஏற்கனவே கவனமாக எடுத்து வைத்த ஆராய்ச்சி தொடர்பான தஸ்தாவேஜ்கள் அடங்கிய பெட்டியை தனியே கதவருகே எடுத்து வைத்து, இதெல்லாம் செய்து கொண்டிருக்கும் போதே அவ்வப்போது சூடான பாலில் ஊறிய சோளக்கூழை சுவைத்துக்கொண்டே தீவிரமாக தன் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டிருந்தான். இன்னும் சற்று நெரத்தில் டென்னிஸனும் வருவான். அவன் ஒரு தனியார் விமான சர்வீஸ் நடத்தி வருகிறான். அவன் உதவியுடன் தான் ராம் நிகரகுவாவிற்கும், க்யூபாவிற்கும் இடையில் அமைந்த இஸ்லா செரனில்லா என்னும் தீவுக்கு செல்ல வேண்டும். அங்கு சுனாமிக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறான் கிருஷ். ராமின் கல்லூரித் தோழன். அமேரிக்காவில், இத்துறையில் ஆராய்ச்சி செய்யும் இரண்டே தமிழர்கள் இவர்கள் என்ற பெருமையுடன் இருவரும் தத்தம் ஆராய்ச்சியை தொடர கடுமையாக முயற்சிசெய்துகொண்டிருந்தார்கள். ராமின் ஆராய்ச்சியைத் தொடர, சுனாமிக்களின் அதிர்வைப் பதிவு செய்யும் இயந்திரம் வேண்டும். அது கிருஷிடம் கிடைக்கும். அதற்காகவே இந்த பயணம்.

பீங் பீங்.


டென்னிஸன் வந்து விட்டான். வாச‌லில் ஹார்ன் ஒலிக்கும் ஓசை கேட்ட‌வ‌ன் இன்னும் அவ‌ச‌ர‌மானான். ல‌க்கேஜ் எடுத்து டிக்கியில் வைத்துவிட்டு, ரூம் லாக் செய்து விட்டு, காரில் ஏறிக்கொள்ள‌, பிட்புல் பாட‌லொன்றை பாடிய‌ப‌டி வெயில் படர்ந்த புழுதியற்ற சாலையில் விரைந்த‌து கார். பிட்புல் என்ப‌து மெக்சிகோ இசை க‌லைஞ‌ர்க‌ளில் ஒரு குழும‌த்தின் பெய‌ர். மெக்சிக்கோவில் இது ச‌ற்றே பிர‌ப‌லமான‌ இசைக்குழு. பிர‌தான‌மாய் ஆடுப‌வ‌ர் மொட்டைத்த‌லையும் ஆட்டு தாடியுமாய், ந‌ம்மூர் திருவிழாவில் ப‌லி கொடுக்க‌ப்ப‌டும் ஆடு போல் இருப்பார். இவ‌ர்க‌ள் பாடும் பாட‌ல்க‌ளில் பெரிதாக‌ அர்த்த‌ங்க‌ள் இருக்காது. ஆனால் பாட்டு ஹிட் ஆகிவிடும்.

கார் டென்னிஸ‌னின் த‌னியார் விமான‌ ச‌ர்வீஸ் நிலைய‌த்தை அடைந்த‌து. த‌யாராக‌ நின்றிருந்த‌ நால்வ‌ர் ப‌ய‌ணிக்கும் ஹெலிகாப்டரில் கொண்டு வந்த பெட்டிகளை பக்கத்து சீட்டில் வைத்துவிட்டு தான் ஒரு சீட்டில் ஏறிக்கொண்டான் ராம். ஏறிய‌வுட‌ன் ஹெலிகாப்டர் வானில் எழும்ப‌த்தொட‌ங்கி ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்திருந்த‌து. 1 ம‌ணி நேர‌ ப‌ய‌ண‌ம் க‌ளைப்பு தெரியாதிருக்க‌ ராம் தானும், கிருஷும் க‌ல்லூரி நாட்க‌ளில் செய்த‌ குறும்புக‌ளை நினைத்துப்பார்த்தபடி‌ அமர்ந்திருக்க‌, சூரிய‌ வெளிச்ச‌ம் ஜ‌ன்ன‌லைத்தாண்டி அவ‌ன் முக‌த்தில் வ‌ர்ண‌ம் அடிக்கையில் ச‌ற்றே அதிக‌ப்ப‌டியாக‌ வெக்கையாக‌ இருப்ப‌து போல‌ப் ப‌ட்ட‌து.


ஜன்னல் வழியே கீழே பார்க்கையில் எங்கும் கடல் தான் தெரிந்தது. இந்தக் கடல் எத்தனை விசித்திரமானது, ஆழமானது. தனக்குள் எத்தனை சரித்திரங்களை ஒளித்து வைத்து சற்றும் கர்வமில்லாமல் அடக்கமாக அமைதியாக இருக்கிறது. இப்போது தான் தங்கியிருந்த நிகரகுவா நிலப்பரப்பு, ஒரு காலத்தில் இந்த கடலுக்குள் இருந்திருக்கலாம். அதற்கும் முன்பு, ஒரு கால கட்டத்தில் அது நிலமாக இருந்து பின் மூழ்கி பின் நிலமாகியிருக்கலாம். மனிதன் நேற்று வந்தவன். ஆனால் எத்தனை ஆடுகிறான். எத்தனை கூச்சல் போடுகிறான். நான்கில் ஒரு பங்கு நிலத்தை ஆக்கிரமிக்க, அரசனாக எத்தனை பாதகங்கள் புரிகிறான். கடல் மூன்று பங்கு ஆக்கிரமித்துவிட்டு எத்தனை அமைதியாக இருக்கிறது. இதுதான் த‌ன்ன‌ட‌க்க‌த்தின் திரு உறுவ‌மோ!...

மல்லாந்து படுத்து
விட்டத்தில் தொங்கும்
வானத்தைப்பார்த்தபடி
யுகம் யுகமாய்
அப்படியென்ன யோசனை
உனக்கு?
இரவில் தோன்றும்
நட்சத்திர மின்மினிகள்
உன்னில் எப்போது விழும்
என்கிற சிந்தனையோ?...

ச‌தா அலைய‌டித்து
வேர்ப்ப‌தினால் தானோ
இந்த‌க் க‌ட‌ல் உப்புக்க‌ரிக்கிற‌து...

சாய்ந்துவிழும் அந்திவானத்தை
ஏந்திக்கொள்ளும் தூரத்தில்
நங்கூரமிட்டிருக்கும்
உலோகத்தீவுகள்,
இந்தக்க‌ட‌ல் தாங்கும்
க‌ப்ப‌ல்க‌ள்..

ராம் க‌ட‌லை ர‌சித்துக்கொண்டிருந்தான். அவ‌ன் ர‌ச‌னை க‌விதை பேசியது.

சரியாக 1 மணி நேரத்தில் ஹெலிகாப்ட‌ர் தீவை அடைந்த‌து. கிருஷின் த‌ற்காலிக‌ வீட்டிற்கு வெகு அருகில் த‌ரை இற‌ங்கி ராம் மூட்டை முடிச்சுக்களுடன் இறங்கியதும் திரும்பிப் போனது ஹெலிகாப்டர். கிருஷ் ராமை பிக்க‌ப் செய்துகொண்டான். ஆராய்ச்சிக்கு தோதாக கடலுக்கு வெகு அருகில் தன் தற்காலிக வீட்டை வைத்திருந்தான் கிருஷ்.

அதை வீடு என்று சொல்லிட‌ முடியாது. ச‌ற்றே பெரிய‌ கூடார‌ம் என்றுதான் சொல்ல‌ வேண்டும். செங்கல் சிமிண்ட் இல்லாம‌ல் ஃபைப‌ர் துணியில் பெரிதாக‌ செய்ய‌ப்ப‌ட்ட‌ கூடார‌ம். ஆராய்ச்சிக்கான தஸ்தாவேஜ்கள், கம்ப்யூட்டர் ப்ரிண்ட் அவுட்ஸ் எல்லாம் ஒரு டேபிளில் ஒரு ப‌க்க‌ம் வைக்க‌ப்ப‌ட்டிருக்க, அதனருகில் மற்ற உபகரணங்கள், கிருஷுக்கு மட்டுமே புரியும் ஒழுங்கில் வைக்கப்பட்டிருக்க, சற்றே இடைவெளி விட்டு இன்னொரு ப‌க்க‌த்தில் கிருஷ் த‌ங்க‌ த‌ரையில் ஒரு மெத்தையும், அத‌ன் அருகில், குறுக்கில் போட்டது போன்று இன்னொரு மெத்தையும், பொதுவாக‌ ஒரு த‌ண்ணீர் தேக்கியும், தேவையற்றவற்றை தூக்கிப்போட DELL என்று எழுதப்பட்ட, உருவத்தில் சற்றே பெரிய ஒரு அட்டைப்பெட்டியும் ப‌க்க‌த்திலேயே, ச‌ற்றுமுன் அணைக்க‌ப்ப‌ட்ட‌ கேஸ் ஸ்டவ்வும், இன்னும் ஏதேதோ சமாசாரங்களுமாக‌, ஒரு அவ‌ச‌ர‌ த‌ற்காலிக‌ ப‌ய‌ண‌ நோக்கில் இருந்த‌து அந்த‌ கூடார‌ம். உண்மையைச் சொன்னால், இது போன்ற‌ ஆராய்ச்சிக்கான‌ இட‌ங்க‌ளில், இத்த‌னை வ‌ச‌திக‌ள்(!?) இருப்ப‌தே பெரிய‌ விஷ‌ய‌ம்.

கிருஷ் ராமிற்கு அப்போதுதான் தான் தயாரித்த சூடான தேனீரையும், சில பிஸ்கோத்துகளையும் இளைப்பார தந்தான். ராம் சற்றே இளைப்பாறிய பின், இருவரும் அங்கிருக்கும் உபகரணங்களை பார்வையிட்டு, தங்கள் ஆராய்ச்சியை மேலும் எவ்வாறு தொடரலாம் என்று விவாதிக்க தொடங்கினர்.

கிருஷ், த‌ன்னிட‌ம் உள்ள‌ சீஸ்மிக் ஸ்டேஷ‌ன் சாத‌ன‌ங்க‌ளை ராமிற்கு விள‌க்க‌த்தொட‌ங்கி இருந்தான். சீஸ்மிக் ஸ்டேஷ‌ன் என்ப‌து, பூமித்த‌ட்டுக்க‌ள் ந‌க‌ர்வ‌தை துள்ளிய‌மாக‌ உண‌ரும் சாத‌ன‌ங்க‌ள் இருக்கும் இட‌த்தைக் குறிக்கும். இதில் க‌ணிணியும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து. இ‍குவேக் என‌ப்ப‌டும் மென்பொருள் கொண்டு அதிர்வுக‌ள் ஆராய‌ப்ப‌டுகிற‌து. இதில் தான் கிருஷ் ஆராய்ச்சி செய்ய‌ வேண்டும்.


அதே இட‌த்தில் ஒர‌மாக‌ ஒரு ஆள் நிற்கும் அள‌வில், ச‌துர‌மாக‌ இர‌ண்டு பெரிய‌ பெட்டி வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. அவைக‌ள் தான் த‌ன் ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டவை என்று விள‌க்க‌ளானான் கிருஷ்.

ந‌டுக்க‌ட‌லில், நிக‌ர‌குவாவிற்கு இப்போது அத்தீவு இருக்கும் தொலைவில், சில‌ எல‌க்ட்ரானிக் சென்சார்க‌ளை ஒரு மித‌வையில் நிறுத்தி க‌ட‌லில் மித‌க்க‌ விடுவார்க‌ள். அந்த‌ சென்சார்க‌ள் க‌ட‌ல் ம‌ட்ட‌த்தைப் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ளை அனுப்பிக்கொண்டிருக்கும். சுனாமி உருவாகையில், க‌ட‌ல் ம‌ட்ட‌ம் உய‌ரும். அப்போது அதை இந்த‌ சென்சார்க‌ள் காட்டிக்கொடுத்து விடும்.‌ அதைக்கொண்டு க‌ரைக்கு அபாய‌ எச்ச‌ரிக்கை அனுப்ப‌ப்ப‌டும். இப்ப‌டியாக‌ அனுப்ப‌ப்ப‌டும் சிக்ன‌ல்க‌ளை ஆராய‌வே இந்த‌ ச‌துர‌ பெட்டிக‌ள் என்றும் அதில் இதர சாதனங்களுடன் தானும் உட்கார்ந்து அந்த‌ அலைவ‌ரிசைக‌ளை ஆராய‌வேண்டும், அதன் மூலமாக பூமித்தட்டுக்கள் நகரும் திசையை வைத்து அடுத்து வேறெங்கெல்லாம் பாதிப்பு இருக்கும் என்று ஆராயவேண்டும் என்றும் விள‌க்கினான்.


'கிருஷ், நான் ஆராய்ந்த‌வ‌ரை, சில‌ ப‌னிப்பாறைக‌ள் பூமித்த‌ட்டுக‌ளோடு இணைந்தே இருக்கும். அவைக‌ளின் ப‌லுவிலும், தின்மையிலுமே சில‌ பூமித்த‌ட்டுக‌ளின் இடையேயான‌ இணைப்பு சாத்திய‌ப்ப‌டுகிற‌து. பெரிய‌ ப‌னிப்பாறைக‌ள் உடைகையில், அந்த‌ தின்மை சேதார‌மாகி அத‌னால் பூமித்த‌ட்டுக‌ள் உடைவ‌து சாத்திய‌மாகிற‌து. இதுவும் ஒரு வ‌கையில் க‌ட‌லில் ஏற்ப‌டுகின்ற‌ நில‌ ந‌டுக்க‌ங்க‌ளுக்கு கார‌ண‌மாக‌லாம் என்ப‌து என் க‌ருத்து'

'உண்மையாக‌வா?'.

'ஆமாம், இதோ பார்' என்ற‌வாறே அவ‌ன் லாப்டாப்பிற்கு உயிரூட்டி சில‌ க‌ணித‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ளைக் காண்பித்தான். இருவ‌ரும் ஒரு நிமிட‌ம் ஒருவ‌ரை ஒருவ‌ர் பார்த்துக்கொண்ட‌ன‌ர். அவர்க‌ளுக்குள் ஒரே நேர‌த்தில் பொதுவாய் ஏதோ ஒன்று தோன்றிய‌து. ராம், தான் கொண்டுவ‌ந்திருந்த‌ உப‌க‌ர‌ண‌ங்க‌ளை ஒன்றாக‌ப் பொருத்தி அதை கிருஷின் க‌ம்ப்யூட்ட‌ருட‌ன் இணைத்து த‌ன் லாப்டாப்பையும் இணைத்தான். மென்பொருள்க‌ள் த‌ங்க‌ளுக்குள் பேசிக்கொண்டன‌. 1 ம‌ணி நேர‌ க‌டின‌மான‌ ஆராய்ச்சிக்குப்பின் திரையில் தோன்றிய‌தை அவ‌ர்க‌ளால் ந‌ம்ப‌வே முடிய‌வில்லை. அதிர்ச்சி அவ‌ர்க‌ளை ஆட்கொண்டிருந்த‌து.

ராம் நேர‌ம் பார்த்தான். இன்னும் 1 ம‌ணி நேர‌ம் தான் இருக்கிற‌து. தாம‌தித்தால் ஆப‌த்து. அடுத்த 30 நிமிடத்திற்குள் இருவ‌ரும் சேர்ந்து தாங்க‌ள் க‌ண்டுபிடித்த‌தை ஒரு மின்ன‌ஞ்ச‌லில் அட‌க்கி, தேவையான‌ த‌க‌வ‌ல்க‌ளைப் பொறுத்தி ச‌ரியான‌ ந‌ப‌ர்க‌ளுக்கு அவ‌ச‌ர‌ மின்ன‌ஞ்ச‌ல் அனுப்பின‌ர். மின்ன‌ஞ்ச‌ல் த‌வ‌றாம‌ல் சென்றுவிட்ட‌தை உறுதிப்ப‌டுத்திக்கொண்டு நிமிர்ந்த‌ன‌ர்.

'கிருஷ், ச‌ரியாக‌ இன்னும் அரைம‌ணி நேர‌ம் தான் இருக்கிற‌து. என்ன‌ ப‌ண்.....'

'நான் சொல்கிறேன் வா' என்ற‌ப‌டி ராமை இடைமறித்து இழுத்துக்கொண்டு ஒடினான் கிருஷ்.

தான் ஒரு நீச்ச‌ல் உடை அணிந்துகொண்டு ராமிற்கும் ஒன்று கொடுத்தான். இருவ‌ரும் ஆக்ஸிஜ‌ன் சிலிண்ட‌ர்க‌ள் எடுத்துக்கொண்டார்க‌ள். தீவின் எல்லையில் க‌ட‌லோர‌த்தில் கிருஷின் உறைவிட‌ம் இருந்ததால் வேலை சுல‌ப‌மாயிற்று. இருவ‌ரும் க‌ட‌லில் குதித்த‌ன‌ர். வெகு சீக்கிர‌மே க‌ட‌ல் ஆழ‌மெடுத்த‌து. அடுத்த‌ முப்ப‌தாவ‌து நிமிட‌த்தில் ஒரு பெரிய‌ சுனாமி இஸ்லா செரனில்லா தீவைத்தாக்கியது.

கிருஷும் ராமும் அனுப்பிய‌ மின்ன‌ஞ்ச‌லைக்க‌ண்டு உஷாரான‌ நிக‌ர‌குவா அர‌சு, க‌ட‌லோர‌ ந‌க‌ர‌ங்க‌ளை காலி செய்யும்ப‌டி உத்த‌ர‌வு பிற‌ப்பித்து ம‌க்க‌ளைப்பாதுகாத்த‌து. ஏற்க‌ன‌வே சுனாமி எதிர்பார்க்க‌ப்ப‌ட்ட‌ இட‌ம் என்ப‌தால் ம‌க்க‌ளிட‌ம் அந்த‌ விழிப்புண‌ர்வு இருந்த‌து. பாதிப்புக‌ள் அதிக‌மின்றி த‌ப்பித்த‌து நிக‌ர‌குவா.

அவ‌ச‌ர‌மாக‌ ஒரு ஹெலிகாப்ட‌ரை இஸ்லா செரனில்லா தீவுக்கு அனுப்பிய‌து நிக‌ர‌குவா அர‌சு. ஆனால், அங்கு இஸ்லா செரனில்லா தீவு முற்றிலுமாக‌ க‌ட‌லில் மூழ்கி இருந்த‌து. எதிர்பாராத‌ வித‌மாக‌, ச‌ற்று த‌ள்ளி ஒரு புதிய‌ நில‌ப்ப‌ர‌ப்பு உறுவாகி இருந்த‌து. அதில் இரு ம‌னித‌ர்க‌ள் நின்றிருந்தார்க‌ள். ஒருவ‌ர் ராம், ம‌ற்றொருவ‌ர் கிருஷ்.


மீட்புப்படையின‌ர் இருவ‌ரையும் பாதுகாப்பாக‌ அழைத்து வ‌ந்த‌ன‌ர். ம‌றுநாள் ந‌ட‌ந்த‌ பிர‌ஸ் மீட்டில் த‌மிழ‌ர்க‌ள் இருவ‌ரும் மேடையேற்றி பாராட்ட‌ப்ப‌ட்ட‌ன‌ர். இந்த புதிய தீவிற்கு அதை கண்டுபிடித்தவர்களின் பெயர்களிலேயே 'இஸ்லா ராம்கிருஷ்' என பெயர் வைக்கப்பட்டது. பெரும் ப‌ய‌ங்க‌ர‌ம் த‌விர்க்க‌ப்ப‌ட்ட‌து எப்ப‌டி என்கிற‌ கேள்விக்கு ராம் ப‌தில‌ளிக்கையில் 'பூமியின் வெப்ப‌ம் அதிக‌மான‌தில், பெரிய‌ ப‌னிப்பாறை உருகி உடைந்த‌தால், தின்மை குறைந்த‌ பூமித்த‌ட்டு உடைந்து புவி ஈர்ப்பு விசை காரணமாக‌ கீழ்நோக்கி நகர‌‌, அத‌ற்க‌டுத்த‌ த‌ட்டு அதை சமன்படுத்த‌ மேலே எழும்பும் என்ப‌தை எங்கள் ஆராய்சிக்கென உருவாக்கிய மென்பொருள் மற்றும் கருவிகளைக்கொண்டு க‌ண்டுபிடித்தோம். அதனால், இஸ்லா செரனில்லா தீவு கடலுக்குள் அமிழ்ந்து போகும் என்றும், அதற்கடுத்த தட்டில் உள்ள கடலுக்கடியில் புதைந்திருந்த ஒரு நிலப்பரப்பு மேலே வரும் என்பதையும் கணித்தோம். கிருஷ் அந்த‌ இட‌த்திலேயே த‌ங்கி இருந்த‌மையால், இதைப்ப‌ற்றிய‌ விவ‌ர‌ம் ச‌ரி பார்க்க‌ முடிந்த‌து. ஆத‌லால், நாங்க‌ள் க‌ட‌லுக்க‌டியில் அந்த‌ இர‌ண்டாவ‌து நில‌ப்ப‌ர‌ப்பை தேடிப்போய் க‌ண்டுபிடித்து அத‌னோடு எங்க‌ளை இணைத்துக்கொண்டோம். நாங்க‌ள் க‌ணித்த‌ப‌டி அந்த‌ப் ப‌ர‌ப்பு மேலே வ‌ந்துவிட்ட‌து. ஒரே ஒரு பனிப்பாறை உடைந்ததற்கே சுனாமி உருவாகி ஒரு முழுத்தீவு மூழ்கிப்பொனதென்றால், ஆர்டிக், அன்டார்டிக் பனிப்பாறைகள் மொத்தமாக உருகினால் உலகமே அழிந்து புதிய உலகம் உருவாகும். ஆனால் அதைக் கண்டுபிடிக்க யாரும் இருக்க மாட்டார்கள்' என்று உல‌க‌ ம‌க்க‌ளுக்கும், த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கும் புரியும்ப‌டி ஆங்கில‌த்திலும் த‌மிழிலும் விள‌க்கினான்.


மெக்ஸிக்கோ அர‌சு இருவ‌ரையும் பாராட்டி அவ‌ர்க‌ளின் ஆராய்ச்சியை அர‌சுக்கே அளிக்க‌ கோரிக்கை வைத்த‌துட‌ன், அர‌சுட‌ன் ப‌ணிபுரிய‌வும் அழைப்பு விடுத்த‌து.


உலகம் வெப்பமடைதலைத் தடுக்கும் பிரிவில் ஐ. நா. சபையின் கொள்கை பரப்பு செயலாளர்களாக ராமும் கிருஷும் நியமிக்கப்பட்டனர். ஒரே ஒரு பனிப்பாறை உடைந்ததற்கே சுனாமி உருவாகி ஒரு முழுத்தீவு மூழ்கிப்பொனதென்றால், ஆர்டிக், அன்டார்டிக் பனிப்பாறைகள் மொத்தமாக உருகினால் உலகம் எப்பேற்பட்ட அழிவை சந்திக்க நேரும் என்பதையும், உலகமே அழியும் ஆபத்து உள்ளதென்பதையும் உலகமே கேட்கும் வண்ணம் பிரசாரம் செய்தனர் இருவரும். பூமியைச் சுற்றியுள்ள ஓசோன் படலம் O3 எனப்படும் ஆக்ஸிஜன் மூலப்பொருளால் ஆனது என்பதையும், காடுகளும், மரம் செடி கொடிகளுமே ஆக்ஸிஜனை உருவாக்கும் என்றும், அதைப் பாதுகாப்பதற்கு, இயற்கை வளமும், காடுகளும், மரங்களும் அத்தியாவசியமென்பதையும் உணர்த்தினர்.

மாசுவற்ற இயற்கையும், குளிர்சாதனப்பெட்டிகளின் பயன்பாட்டைக் குறைத்தலைப்பற்றியும் உலகம் முழுவதும் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள், விளை நிலங்களில் விவசாயம் மட்டுமே செய்ய சட்டம் இயற்றி அதை கடுமையாய் பின்பற்றியது. அதற்கு, விவசாயம், ஐ.டி மற்றும் இதர தொழில்துறைகளின் மூலம் ஒரு குடிமகனின் சராசரி வருமானத்தை சமன் செய்தது. எல்லா தொழிலிலும் முடிவில் கிடைப்பது ஒன்றே என்ற பின்பு மக்கள் விவசாயத்தை ஆர்வமுடன் கற்றுக்கொள்ள, தொழில் செய்ய முன்வந்தனர். சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. வளரும், வளர்ந்த நாடுகளில் கனரக, இரு சக்கர எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டிலும் சட்டதிட்டங்கள் கொண்டுவந்தது. வீட்டிற்கு ஒரு கார் என்று சட்டம் கொண்டு வந்து மாசுவை கட்டுக்குள் கொண்டுவந்தது.

மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வர எல்லோருக்கும் இலவச கல்வி உலகெங்கிலும் அந்தந்த நாடுகளில் வழங்கப்பட்டது. இயற்கை அதன் பொலிவை மெல்ல மீட்டது.


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
காற்றுவெளி இலக்கிய சஞ்சிகை ஜூலை இதழ்

No comments: